2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்ஏப்ரல் 15, 2013 அன்று பாசுடன் மாரத்தானின் போது பிற்பகல் கி.நே.வ நேரம் 2.50க்கு (18:50 ஒ.அ.நே) போட்டி நிறைவுக்கோட்டிற்கு அண்மையிலுள்ள கோப்லி சதுக்கத்தில் உள்ள போயில்சுடன் சாலையில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்த நிகழ்வைக் குறிப்பதாகும்.[2] இந்த குண்டுவெடிப்புக்களில் 3 நபர்கள் உயிரிழந்தனர்;மற்றும் குறைந்தது 144 நபர்கள் காயமுற்றனர்.[1] இது ஒரு விபத்தா அல்லது இதனை விளைவித்தவர்கள் யாரென்று அறியப்படவில்லை.[3]
வெடிப்புக்கள் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களின் கூற்றுப்படி இரு வெடிப்புக்களும் ஒன்று நிகழ்ந்த "சில வினாடிகளிலேயே" மற்றதும் நிகழ்ந்துள்ளது.[4][5] நிறைவுக்கோட்டிற்கு அண்மையில் பிடிக்கப்பட்ட ஒளிதக்காட்சியில் இரு வெடிப்புக்களும் 20 வினாடிகள் இடைவெளியில் நடந்துள்ளதாக காட்டுகின்றன.[6]
மாரத்தானின் வாகையாளர்கள் நிறைவுக் கோட்டை தாண்டி இரண்டுமணி நேரம் ஆனபோதும் பெரும்பாலான பிற பங்கேற்பாளர்கள் அப்போதுதான் அவ்விடத்தை அண்மித்துக் கொண்டிருந்தனர்.[7] இவர்கள் நிறைவுக்கோட்டிலிருந்து வேறுபுறம் செல்ல திருப்பி விடப்பட்டனர்.[8]
நிகழ்வின் பாதிப்பாக பாசுடன் லோகன் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அனைத்து பயணச்சேவைகளும் இரண்டு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டன.[9] மாசச்சூசெட்சு வளைகுடா போக்குவரத்து ஆணையமும் தனது சேவைகளை நிறுத்தி வைத்திருந்தது.[10]
கிழக்கத்திய நேரம் பிற்பகல் 3:00 மணிக்கு ஊஆன் எப் கென்னடி குடியரசுத்தலைவர் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தும் இவற்றுடன் தொடர்புடையதாக துவக்கத்தில் கருதப்பட்டது. பின்னர் இதற்கு எந்த கருவியும் காரணமில்லை என்றும் இரு நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.[12]
இது நிகழ்ந்த பல மணி நேரங்களுக்குப் பிறகு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.[13] இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் யாரெனத் தெரியவில்லை எனவும் அரசு "இதன் அடிமட்டத்தை ஆழ்ந்தெடுக்கும்" எனவும் கூறினார்.[14]
இதனை கூட்டாட்சி புலன்விசாரணை அமைப்பு ஓர் தீவிரவாத தாக்குதலாக கருதி புலனாய்வு செய்வதாக அறிவித்துள்ளது.[15]
ஐயத்துக்குரியவர்கள்
பாசுடனில் குடியிருக்கும் செச்சினியாவை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இதில் தொடர்புபட்டிருக்கலாம் என பாசுடன் காவல்துறை ஐயமுற்றது. அவர்களை கைது பண்ண முயலும் போது 26 வயதுடைய மூத்தவர் டாமர்லான் சார்னே (Tamerlan Tsarnaev) காவல்துறையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். 19 வயதுடைய தம்பி சோகார் சார்னே (Dzhokhar Tsarnaev) 2013, ஏப்ரல் 19 அன்று கைதாகாமல் உள்ளார். இவர்களின் மாமா அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் வசிக்கிறார். அவர் சோகார் சார்னேவை சரண்டையும்படி தொலைக்காட்சி வழியாக கோரியுள்ளார்.[16]. பிடிபடாமல் உள்ள சோகார் சார்னேவை பிடிப்பதற்காகவும் அவரால் நகரமக்களுக்கு ஆபத்து நேராமல் இருப்பதற்காகவும் நகரின் அனைத்து பொது போக்குவரத்து வண்டிகளையும் ஓடாமல் இருக்கவும் பல்கலைக்கழகங்கள் திறக்காமல் இருக்கவும் ஆளுனர் பேட்ரிக் கட்டளை பிறப்பித்தார்[17][18].
பாசுடன் நகரம் மூடப்பட்ட நிலையில் ஏப்ரல் 19 மாலையில் சாகார் சார்னேயும் பிடிபட்டு அரசுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.[19][20][21]
↑"Due to police activity, the Green Line is terminating service between Kenmore and Park Street Stations and temporarily suspending B- and C-Line service. Orange and Red Line service will bypass Downtown Crossing Station.", MBTA website