2014-15 தென்கிழக்காசிய, தெற்காசியா வெள்ளப்பெருக்கு என்பது 14 டிசம்பர் 2014 தொடங்கி தற்சமயம் வரையில், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பாதிக்கும் வெள்ளப்பெருக்கு நிகழ்ச்சியாகும். இந்தோனேசியாவில் 94,000 பேர், மலேசியாவில் 180,000 பேர், தாய்லாந்தில் சில ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.[9][10]
காரணங்கள்
தென்சீனக் கடலின் மீது வீசும் தென்கிழக்குப் பருவக்காற்றுகள் வழக்கத்திற்கு மாறாகத் தென்சீனக் கடல் நீரை வெப்பமாக்கி வருகின்றன. அதுவே இந்தக் கனத்த பெருமழைக்கு முக்கியக் காரணமாகும்.[11] போதிய அக்கறைகள், போதிய பராமரிப்புகள், போதிய கவனிப்புகள் இல்லாமல் சுற்றுச் சூழல்களில் அதிக மேம்பாடுகள் காணப் பட்டதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.[11]
இந்த வெள்ளப்பெருக்கு இந்தோனேசியா, ரியாவ் தீவு, உலு இந்திராகிரி மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் 526.5 ஹெக்டர் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி உள்ளது.[17] வட சுமத்திரா, ஆச்சே மாநிலத்தின் தாமியாங் மாவட்டத்தில் ஏற்பட்ட அடைமழை காரணமாக, 28,000 பேர் உயர்நிலப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.[18]
ஜாவாவில் இருக்கும் சித்தாரும் எனும் ஆறு பொங்கி வழிந்தோடியதால் பாலிண்டா, டாயூகோலோட், போஜோங் சோவாங் மாவட்டங்களின் சாலைகளில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிண்டாவில் இருந்த மூன்று மின்நிலையங்கள் மூடப்பட்டன.[17] பாண்டுங் பகுதியில் 15,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 4000 பேர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர்.[17] 23 டிசம்பர் 2014-இல் பாண்டுங்கில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது.[19]
மலேசியா
வரலாறு காணாத மழை காரணமாக மலேசியாவின் எட்டு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 28 டிசம்பர் 2014 வரை, 200,000 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களின் புள்ளிவிவரங்கள்: கிளாந்தானில் 134,139; திரங்கானுவில் 36,410; பகாங்கில் 33,601; பேராக்கில் 7,581; ஜொகூரில் 465.[20]சபாவில் 336 பேரும், பெர்லிஸ் மாநிலத்தில் 143 பேரும் துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கிளாந்தானில் வெள்ள நிலைமை மோசம் அடைந்துள்ளது. அங்கே 23 சாலைகள் மூடப் பட்டுள்ளன.[21].
பேராக் மாநிலத்தில் கோலாகங்சார், சுங்கை சிப்புட், கெரியான் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கெரியான், புக்கிட் மேரா பகுதியில் 180 பேர் துயர்துடைப்பு மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.[22] மலேசியாவில் வெள்ளப்பெருக்கினால் இதுவரை பத்து பேர் உயிர் இழந்துள்ளனர்.
சபா
கிழக்கு மலேசியா, சபாவில் 2014 டிசம்பர் 26-ஆம் தேதியில் இருந்து பெய்து வரும் அடைமழையினால் 67 கிராமங்களில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருகி உள்ளது. சபா மாநிலத்தின் பிபோர்ட் (Beaufort) மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல முக்கிய சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 2,391 பேர் துயர்துடைப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[23] பா மூசா பொதுமண்டபம், அஜீசா பொதுமண்டபம், கம்போங் பாங்கலாக் பொதுமண்டபம், கம்போங் சுவாசா பொதுமண்டபம், லுவாகான் பொதுமண்டபம் ஆகிய இடங்கள் துயர்துடைப்பு மையங்களாக மாற்றம் கண்டுள்ளன.
இங்குள்ள பிரதான ஆறான பெடாஸ் ஆறு, அபாய அளவான 8.7 மீட்டரையும் கடந்து 9.20 மீட்டர் அளவில் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டு வருகிறது.[24]
தாய்லாந்து
சொங்கலா மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் - ஹாட்ஞாய், சாடாவோ, ராத்தாபும், குவான் நியாங், சானா, தேப்பா, நா தாவ், சாபாய் யோய் ஆகிய 8 மாவட்டங்கள் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.[25] யாலா மாநிலத்தில் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.[26]