இந்தியாவில் கொரோனாவைரசு பரவுவதைக் கட்டுப்படுத்துதல்
முறைகள்
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
மருத்துவமனைகள், வங்கிகள், மளிகைக் கடைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்து சேவைகளும், கடைகளும் மூடல்
அனைத்து வணிக மற்றும் தனியார் நிறுவனங்களும் மூடல் (வீட்டிலிருந்தே வேலைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது)
அனைத்து கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களும் மூடல்
அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடல்
அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்தையும் நிறுத்துதல்
சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத நடவடிக்கைகள் அனைத்தையும் தடை செய்தல்
முடிவு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
மார்ச் 24 அன்று, பிரதமர் நரேந்திர மோதியின் கீழ் இயங்கும் இந்திய அரசு 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிட்டது. இது இந்தியாவில் பரவிய கொரோனாவைரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக, இந்தியாவின் மொத்த 130 கோடி மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தியது. மார்ச் 22 அன்று 14 மணி நேர சுய ஊரடங்கு உத்தரவு மற்றும், அதைத் தொடர்ந்து நாட்டின் கோவிட்-19 பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில், தொடர்ச்சியான விதிமுறைகளை அமல்படுத்திய பின் இது உத்தரவிடப்பட்டது.[1][2]
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாவைரசு பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோது (சுமார் 500), இந்த ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. இது அமெரிக்கா, ஐரோப்பா அல்லது சீனாவில் இருந்ததைப் போல தொற்றுநோய் நிலை மோசமடைவதைத் தடுக்கும் பொருட்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.[3]
24 மார்ச் 2020 அன்று கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தேசத்திற்கு உரையாற்றினார்
2020 சனவரி 30 ஆம் தேதி கேரள மாநிலத்தில், ஊகானில் இருந்து ஒரு பல்கலைக்கழக மாணவர் கேரளா வந்ததன் மூலம் 2019 கொரோனாவைரசு தொற்றின், முதல் பாதிப்பை இந்திய அரசு உறுதிப்படுத்தியது.[4] கொரோனா வைரசால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 500-யை நெருங்கும்போது, மார்ச் 19 அன்று பிரதமர் மோதி, அனைத்து குடிமக்களும் மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை (மக்கள் ஊரடங்கு உத்தரவு) கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.[5] ஊரடங்கு உத்தரவின் முடிவில், மோடி "சுயஊரடங்கு உத்தரவு கோவிட்-19க்கு எதிரான ஒரு நீண்ட போரின் ஆரம்பம் தான்" என்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசத்தோடு உரையாற்றும் போது, மார்ச் 24 அன்று, அன்றைய நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை நாடு தழுவிய ஊரடங்கு என அறிவித்தார்.[6] கொரோனாவைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு, சமூக இடைவெளியின் மூலம் பரவும் சுழற்சியை உடைப்பதாகும் என்று அவர் கூறினார்.[7] சுயஊரடங்கை விட, இது மிகவும் கடுமையானதாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.[8]
தடைகள்
இந்த ஊரடங்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது.[8] அத்தியாவசிய பொருட்கள், தீயணைப்பு, காவல் மற்றும் அவசரகால சேவைகளை கொண்டு செல்வதற்கான விதிவிலக்குகளுடன், அனைத்து போக்குவரத்து சேவைகளும் - சாலை, விமானம் மற்றும் தொடருந்து ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டன.[9] கல்வி நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் உணவுவிடுதி சேவைகளும் நிறுத்தப்பட்டன. உணவுக் கடைகள், வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள், பெட்ரோல் பம்புகள், பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி போன்ற சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை பின்பற்றத் தவறும் எவரும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க முடியும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தளர்வுகள்
4 மே 2020 முதல், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி அனைத்து மண்டலங்களிலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
மண்டலம் வாரியாக அனுமதிக்கப்பட்டவை மற்றும் அனுமதிக்கப்படாதவை (18 மே – 31 மே 2020)
செயல்பாடு
மண்டலத்தில் அனுமதிக்கப்படுகிறது (Y/N)
சிவப்பு
ஆரஞ்சு
பச்சை
இரயில்வே மற்றும் மெட்ரோ சேவைகள்
கல்வி நிறுவனங்கள்
திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை.
பொதுக்கூட்டங்கள் மற்றும் இது போன்ற நிகழ்வுகள்
வழிபாட்டுத் தலங்கள்
அத்தியாவசியமற்ற இயக்கம் 7p.m. to 7a.m.
50% பயணிகளை கொண்ட மாவட்ட பேருந்துகள் இயக்குதல்
வாடகையுந்தில் 1 ஓட்டுனர் மற்றும் 2 பயணிகளுடன் இயக்குதல்
அத்தியாவசிய பொருட்களைக் கையாளும் கடைகள் / மின் வணிகம்
33% பணியாளர்களை கொண்டு தனியார் அலுவலகங்கள் இயக்குதல்
இரு சக்கர வாகனத்தில், ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்
நான்கு சக்கர வாகனத்தில், 1 ஓட்டுனர் மற்றும் 2 பயணிகள் செல்ல வேண்டும்
மாநிலங்களுக்கு இடையிலான அத்தியாவசிய பொருட்கள் இயக்கம்
காலவரிசை
ஊரடங்கின் போது பிரதமர் நரேந்திர மோதி, ஆற்றிய உரை
முதல் 21 நாட்கள் (25 மார்ச் - 14 ஏப்ரல்)
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில், கிட்டத்தட்ட அனைத்து சேவைகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டன. சில பகுதிகளில் அத்தியாவசியமான பொருட்களை சேமிக்க மக்கள் விரைந்து வந்தனர். எந்தவொரு அவசரநிலையிலும் ஈடுபடுவது, வணிகங்களைத் திறப்பது மற்றும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட மீறல்கள் போன்ற ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக மாநிலங்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.[10] ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கூட்டங்களை நடத்தியது. பல மாநிலங்கள் ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தன.
மார்ச் 26 அன்று, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ₹1,70,000 கோடி (ஐஅ$20 பில்லியன்) ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தூண்டுதல் தொகுப்பை அறிவித்தார். இது மூன்று மாதங்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம், இலவச தானியங்கள் மற்றும் சமையல் எரிவாயு மூலம் ஏழை வீடுகளுக்கு உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.[11] மேலும் மருத்துவ பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தையும் இது வழங்கியது.
மார்ச் 27 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி ஊரடங்கால் பொருளாதார தாக்கங்களைத் தணிக்க உதவும் நடவடிக்கைகளை சில திட்டங்களை அறிவித்தது.[12]
மார்ச் 22 ஆம் தேதி, நாடு தழுவிய ஊரடங்கை அறிவிப்புக்கு முன்னதாக, மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்திய ரயில்வே பயணிகள் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.[13] அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக மட்டுமே தொடருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தது.[14] வழக்கமான சரக்கு சேவையை விட, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல, கூடுதலாக தொடருந்துகளை இயக்கப்போவதாக மார்ச் 29 அன்று இந்திய ரயில்வே அறிவித்தது.[15] கோவிட்-19 நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் வார்டுகளாக, தொடருந்துகளை மாற்றும் திட்டத்தையும் இந்திய ரயில்வே நிருவாகம் அறிவித்தார். 1974 ஆம் ஆண்டில் ஒரு வேலை நிறுத்தம் இருந்தபோதிலும், 167 ஆண்டுகளில் இந்தியாவில் தொடருந்து சேவைகள் நிறுத்தப்படுவது, இதுவே முதல் தடவையாகும்.[16][17]
ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை ஒளிரச் செய்து நம்முடைய ஒற்றுமையைக் காட்டுங்கள்’ என்று கூறினார். அதன்படி நாட்டுமக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர் மற்றும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.[18]
ஊரடங்கு காலத்தின் முடிவு நெருங்கிய நிலையில், பல மாநில அரசுகள் ஏப்ரல் இறுதி வரை அதை நீட்டிக்கும் முடிவை வெளிப்படுத்தின. அவற்றில் ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சில தளர்வுகளுடன் கருநாடகா, மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் ஆகும்.
இந்த ஊரடங்கால், நோய்தொற்றின் பரவல் ஆனது, கணிசமாக குறைந்துவிட்டது.
ஊரடங்கு நீட்டிப்பு (15 ஏப்ரல் - 3 மே)
ஏப்ரல் 14 ஆம் தேதி, பிரதமர் மோதி நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், ஊரடங்கானது மே 3 வரை நீட்டிக்கப்படுவதாகவும், ஏப்ரல் 20க்குப் பிறகு நிபந்தனையுடன் சில தளர்வு வழங்கப்படும் என தெரிவித்தார். ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு காவல் நிலைய பகுதியும், ஒவ்வொரு மாநிலத்திலும், தொற்றுகள் பரவாமல் உள்ளதா என்பதை கவனமாக மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் கூறினார். அவ்வாறு செய்ய முடிந்த பகுதிகள் ஏப்ரல் 20 அன்று ஊரடங்கிலிருந்து விடுவிக்கப்படும். அந்த பகுதிகளில் ஏதேனும் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டால், ஊரடங்கு மீண்டும் செயல்படுத்தப்படலாம் என்றார்.[19]
ஏப்ரல் 16 அன்று, ஊரடங்கு பகுதிகள் மூன்று மண்டலமாக வகைப்படுத்தப்பட்டன: "சிவப்பு மண்டலம்", நோய்த்தொற்றுகள் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது, "ஆரஞ்சு மண்டலம்" சில தொற்றுகள் இருப்பதாக குறிக்கிறது, மற்றும் "பச்சை மண்டலம்" தொற்றுகள் இல்லை என்பதை குறிக்கிறது.[20]
ஏப்ரல் 20 முதல் அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்தது, பால், மீன்வளர்ப்பு மற்றும் தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய வணிகங்களையும், விவசாய பொருட்களை விற்கும் கடைகளையும் திறக்க அனுமதித்தது. சமூகப் பணிகளைப் பராமரிப்பதற்கான வழிமுறைகளுடன் பொதுப்பணித் திட்டங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. லாரிகள், தொடருந்துகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து வாகனங்கள் இயங்கும். வங்கிகள் மற்றும் அரசு மையங்களும் திறக்கப்படும் என அறிவித்தது.[21]
ஏப்ரல் 25 அன்று, சிறிய சில்லறை கடைகள் 50% ஊழியர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டன. அனைவரும் சமூக இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டது.[22]
ஏப்ரல் 29 அன்று, உள்துறை அமைச்சகம், மாநிலம் விட்டு மாநிலம் வந்து சிக்கித் தவிக்கும் நபர்களை, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப மாநிலங்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அத்தகைய நபர்களைப் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கும், அதிகாரிகளை நியமிக்கவும், நெறிமுறைகளை உருவாக்கவும் மாநிலங்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.[23]
கூடுதலாக ஊரடங்கு நீட்டிப்பு (4 மே - 17 மே)
மே 03 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.[24][25] அவை:
பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மதுபானக் கடைகள் செயல்படலாம் (சில மாநில அரசுகள் அந்த மண்டலங்களிலும் மதுபானக் கடைகளை மூடிவைக்க முடிவெடுத்துள்ளன). கடையில் மது வாங்கும்போது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கடையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.
சில நடவடிக்கைகளுக்கு மட்டும் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வானூர்திகள் மற்றும் தொடருந்துகள் மூலம் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு சாலை வழியாக செல்ல அனுமதி கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருக்கும். அதேபோல வணிகவளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், முடி திருத்தும் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் திறக்க அனுமதி கிடையாது. மத மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அரசின் அனுமதி பெற்று சாலை மார்க்கமாகவோ, தொடருந்து அல்லது வானூர்தி மூலமாகவோ பயணம் செய்ய அனுமதியுண்டு.
நாட்டில் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை பயணம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த உத்தரவை அமல்படுத்த சம்பந்தடப்பட்ட மாநில அரசுகள், 144 தடைச் சட்டத்திற்குக் கீழ் உத்தரவு பிறப்பிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது அரசு. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பமான பெண்கள் மற்றும் 10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய மற்றும் உடல்நலன் சார்ந்த விசயங்களுக்காக மட்டுமே அவர்கள் வெளியில் வர அனுமதியுண்டு.
சிவப்பு மண்டலங்களில் பொதுப் போக்குவரத்து மற்றும் வாடகையுந்துகளுக்கு அனுமதி கிடையாது.
சிவப்பு மண்டலங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில பயணங்களுக்கு மட்டும் மக்கள் இரு சக்கர வாகனத்தில் ஒருவருடனும், நான்கு சக்கர வாகனத்தில் அதிகபட்சம் 2 பயணிகளுடனும் அனுமதிக்கப்படுவார்கள். நகர்ப்புறங்களில் உள்ள பொருளாதார மண்டலங்கள், தொழிற்ப்பேட்டைகள், தொழில் நகரங்களில் அனுமதி வாங்கி பயணிக்கலாம்.
அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, மருந்து உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட அனுமதியுண்டு. தொடர் பணிகள் கோரும் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட அனுமதியுண்டு. தொலைதொடர்பு வன்பொருள் உற்பத்திக்கு அனுமதியுண்டு.
நகர்ப்புறங்களில் உள்ள கட்டுமானப் பணிகளை, இருக்கும் ஆட்களை வைத்து செய்து கொள்ளலாம். புதிதாக ஆட்கள் வரவழைக்கப்படக் கூடாது.
சிவப்பு மண்டலங்களில் அச்சு மற்றும் மின்னணு ஊடகம், ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைகள், டேட்டா மற்றும் கால் சென்டர்கள், குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் கிடங்கு சேவைகள், தனியார் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சேவைகள், மற்றும் தனி நபர்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களில், இ-வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்ய மட்டுமே அனுமதியுண்டு. மற்ற மண்டலங்களில் அனைத்துப் பொருட்களையும் டெலிவரி செய்ய அனுமதியுண்டு. கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் அனுமதியுண்டு.
ஆரஞ்சு மண்டலங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட டேக்சி சேவைகளுக்கு அனுமதியுண்டு. ஆனால், ஓட்டுனருடன், ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். பச்சை மண்டலங்களில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படாது. பச்சை மண்டலங்களில் பொதுப் போக்குவரத்தும், 50% சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதியுண்டு.
மேலும் ஊரடங்கு நீட்டிப்பு (18 மே - 31 மே)
மே 17 அன்று, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) மற்றும் உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) சில தளர்வுகளுடன் மே 18-க்கு பிறகு, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்தது.[26][27][28]
எதிர்வினைகள்
உலக சுகாதார அமைப்பு
இந்தியாவின் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ஹென்க் பெக்கெடம், "சரியான நேரத்தில், விரிவான மற்றும் வலுவான" என்று விவரித்த ஊரடங்கை பாராட்டினார்.[1] WHOஇன் நிர்வாக இயக்குநர் மைக் ரியான், ஊரடங்கு மட்டும் கொரோனா வைரஸை அகற்றாது என்று கூறினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுக்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.[29]