2023 ஒடிசா தொடருந்து விபத்து (2023 Odisha train collision) என்பது 2023-ஆம் ஆண்டு சூன் 2 அன்று, இந்திய மாநிலம் ஒடிசாவில் நடந்த தொடருந்து விபத்தாகும். இவ்விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் காயமடைந்தனர்.[6][7][8]
விபத்து விவரம்
மோதல்கள் நிகழ்ந்ததை விவரிக்கும் எளிய வரைபடம்
சூன் 2ஆம் நாளன்று உள்ளூர் நேரம் இரவு 7 மணியளவில், ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம் அருகில் இந்த விபத்து நடந்தது.
பாதிப்புகள்
288 பேர் உயிரிழந்ததாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்[3] இறப்பு எண்ணிக்கை 275 என்பதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பின்னர் தெரிவித்தார்.[9] இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டன. [10] விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகவும் சிதைவுற்றிருந்ததால், அவர்களை அடையாளம் காணுதல் கடினமாக இருந்தது. நகர்பேசி, பயணப் பொதி, மற்ற பொருட்கள் வாயிலாக அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[10]
மொத்தமாக 1,175 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 793 பேர் அவர்தம் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் சூன் 3 அன்று மாலை நேரத்தில் ஒடிசா அரசு தெரிவித்தது. 382 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.[8] எண்ணிக்கை மிகுதியால் உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பியபோதும் அவை காயமடைந்தோரைக் கவனிப்பதில் முழுமையாகச் செயற்பட்டன.[11]
விசாரணை
கரக்பூர் தொடருந்துக் கோட்டத்தின் அலுவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையின அடிப்படையில் கீழ்காணும் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துள்ளன.[12][13]
சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல விரைவுத் தொடர்வண்டிக்கு (வண்டி எண்: 12841) ஆரம்பத்தில் முதன்மைத் தடத்தில் செல்லுவதற்கு சைகை தரப்பட்டிருந்தது. பின்னர், இந்த சைகை மாற்றப்பட்டு முதன்மைத் தடத்திற்கு அடுத்ததாக உள்ள லூப் தடத்தில் செல்லுவதற்கு சைகை தரப்பட்டது.
வளைய தடத்தில் நின்றுகொண்டிருந்த சரக்குத் தொடருந்தின் பின்பக்கத்தில் கோரமண்டல் விரைவுத் தொடருந்து மோதி, சரக்குத் தொடருந்தின்மீது ஏறி நின்றது. இந்த மோதலினால், 22 பெட்டிகள் தடம் புரண்டன.
அதே நேரத்தில், அடுத்த தடத்தில் பெங்களூரு-கவுரா அதிவிரைவுத் தொடருந்து (வண்டி எண்: 12864) எதி்ர்திசையில் வந்துகொண்டிருந்தது. இந்தத் தொடருந்து கோரமண்டல் விரைவுத் தொடருந்தை பெருமளவு கடந்துவிட்டிருந்தது.
கோரமண்டல் விரைவுத் தொடருந்தின் தடம் புரண்ட 3 பெட்டிகள், பெங்களூரு-கவுரா அதிவிரைவுத் தொடருந்தின் கடைசி 2 பெட்டிகள் மீது மோதின. இதன் காரணமாக, இந்த 5 பெட்டிகளில் பயணித்தவர்கள் பெருமளவில் உயிரிழந்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன்னரே விபத்து நடந்த இடத்தில் தொடருந்துகள் மோதல் எதிர்ப்புக் கருவி பொருத்தப்படவில்லையென்றும் அதனால் ஏற்படும் தடம்புரளும் நிகழ்வுகள் குறித்தும், தாங்கள் இருமுறை எச்சரிக்கை செய்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 2023 பிப்ரவரியில் கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி நல்வாய்ப்பாக விபத்திலிருந்து தப்பியபோது, இரயில்வேயின் தென்மேற்கு இரயில்வே மண்டல முதன்மை தலைமை அலுவலர், சமிக்ஞை அமைப்பின் கோளாறுகள் சரிசெய்யப்படாமல் இருப்பதையும் அது சரிசெய்யப்படாவிடில் மேலும் பல விபத்துகள் நிகழக்கூடுமென்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எழுதியனுப்பினார். இந்தியத் தலைமைக் கணக்குத் தணியாளரின் தொடருந்துகளின் தடம்புரள்தல் குறித்த 2022 திசம்பர் அறிக்கையில், இந்திய இரயில்வேயில் பாதுகாப்புப் பராமரிப்புப் பகுதியில் பணியாட்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் அந்த அறிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளாக இரயில்வே பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகையின் அளவு ஒதுக்கப்பட்ட அளவைவிட ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருவதையும் சுட்டியிருந்தது. விபத்துகள் நிகழ்வது பாதுகாப்புப் பேணுகையின் குறைபாட்டின் காரணமென கூறமுடியாதென்ற இந்திய இரயில்வேயின் கூற்றையும் தணைக்கை அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.[14][15][16]
ஜுன் 4 ஆம் நாளன்று இரயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்னவ், மின்னணு சைகைகளில் ஏற்படக்கூடிய பிழையான "இடைப்பூட்டு மாற்றத்தால்" இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறினார்.[17][18] இரயில்வே வாரிய உறுப்பினரான ஜெய வர்மா, மின்னணு இடைப்பூட்டு அமைப்பானது 99.9% "பழுது-காப்பு" கொண்டது எனவும் அரிதாகவே பழுதடையக்கூடுமென்றும் தெரிவித்துள்ளார்.[19][20]
இந்திய இரயில்வே, ஒடிசா மாநில அரசு, மேற்கு வங்க அரசு ஆகியவை உதவி எண்களை வெளியிட்டன. 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், 4 ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், 15 தீயணைப்பு மீட்புக் குழுக்கள், 100 மருத்துவர்கள், 200 காவற் துறையினர், 200 மருத்துவ உதவி வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.[21][22][23] உள்ளூர் பேருந்து நிறுவனங்கள் காயமடைந்தோரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல உதவின.[24][25] உள்ளூர் மக்கள் பயணிகளுக்கு தண்ணீர் அளித்தும் அவர்களது உடைமைகளை மீட்டுத்தரவும் இயன்றவரை உதவினர்.[26]
மேற்கு வங்க அரசு மீட்புப்பணிக்காக 30 அவசர மருத்துவ ஊர்திகளையும், காயமடைந்தோருக்கு சிகிச்சையளிப்பதற்காக 40 மருத்துவர்கள் மற்றும் செவிலியரையும் அனுப்பியது. [27] தமிழ்நாடு அரசு, நிலைமையைத் அறிந்துகொள்ளவும் சென்னைக்கு வரவேண்டிய பயணிகளுக்கு உதவவும் இரு அமைச்சர்கள் மற்றும் மூன்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பியதோடு சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் காயமடைந்தோரின் சிகிச்சைக்காக 70 படுக்கைகளையும் தயார் செய்தது..[28]
பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு காயமடைந்தோரைத் தேடி மீட்கும் பணி ஜூன் 2 ஆம் நாள் இரவு முழுதும் நடைபெற்றுத் தொடர்ந்து ஜூன் 3 ஆம் நாளன்றுதான் முடிவடைந்தது.[29][30] விபத்தில் தப்பிப் பிழைத்துக் கிடப்போரைக் கண்டறிவதற்குத் தேடல் மற்றும் மீட்பு நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன.[30] அடுத்த நாள் விபத்து நடைபெற்ற இடத்தை மீட்டெடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகத் தென்கிழக்கு தொடருந்து மண்டலம் அறிவித்தது.[25]பாலேஸ்வர், பத்ரக், கட்டக் ஆகிய இடங்களிலிருந்து பலர் இரத்ததானம் அளிப்பதற்கு காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்குச் சென்றனர்.[11]
இரங்கலும் இழப்பீடும்
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, இந்த சம்பவம் குறித்து தனது துயரத்தை வெளிப்படுத்தினார். துக்கமடைந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.[31] மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சம்பவம் "மிகுந்த துயரம் தரக்கூடியது" என்று விவரித்தார்.[25] ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பேரழிவு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.[32][33] இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்தும் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் இந்த உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும் மீட்பு பணியில் இந்தியாவுக்கு ஆதரவை தெரிவித்தனர்.[34][35]
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ₹10 இலட்சமும், படுகாயமடைந்தோருக்கு ₹2 இலட்சமும், லேசாகக் காயமடைந்தோருக்கு ₹50000 இழப்பீடாக வழங்கப்படுமென இரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மேலும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 2 இலட்சமும், காயமடைந்தோருக்கு ₹50000 வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.[36][37]
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விபத்தில் மேற்குவங்கப் பயணிகளில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ₹5 இலட்சமும் மோசமாகக் காயமடைந்தோருக்கு ₹1 இலட்சமும், லேசாகக் காயமடைந்தோருக்கு ₹50000 வழங்கப்படுமென அறிவித்தார்.[38] ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினருக்கு ₹5 இலட்சமும் காயமடைந்த பயணிகளுக்கு ₹1 இலட்சமும் இழப்பீடாக வழங்கப்படுமென அறிவித்தார்.[39] மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் இறந்தோரின் நெருங்கிய உறவினருக்கு ₹5 இலட்சம் இழப்பீடாக வழங்கப்படுமென அறிவித்தார்.[40] ஒடிசா முதலமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சரும் அவரவர் மாநிலங்களில் ஒரு நாள் இரங்கல் அனுசரிக்கப்படுமென அறிவித்தார்கள்.[41][42]