2023 புரோவரி உலங்கு வானூர்தி விபத்து (2023 Brovary helicopter crash) உக்ரைனியத் தலைநகர் கீவுக்கு வெளியே புரோவரி நகரில் ஓர் உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கியது.[1] உக்ரைனிய உள்நாட்டு விவகார அமைச்சர் தெனிசு மொனாசுடிர்சுகி, அவரது துணை யெவன் யெனின் மற்றும் மாநிலச் செயலர் யூரி லுப்கோவிச்சு உள்ளிட்டவர்கள் விமானத்தில் பயணம் செய்தனர். உக்ரைனின் புறநகர்ப் பகுதியான புரோவரியில் உள்ள மழலையர் பள்ளி மீது வானூர்தி மோதியது. விபத்தில் குறைந்தது 15 பேர் மாண்டனர். நாட்டின் உள்துறை அமைச்சரும் அவருடைய மூன்று பிள்ளைகளும் பலியானவர்களில் அடங்குவர்.[2] பதினொரு குழந்தைகள் உட்பட இருபத்தைந்து பேர் தரையில் காயமடைந்தனர்.[3][4][5][6]
விபத்து
உலங்கு வானூர்தி தரையில் விழுந்தபோது அதில் இருந்த அதிகாரிகள் போர் மண்டலத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் என்று உக்ரைன் சனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோசென்கோ கருத்து தெரிவித்தார். கிழக்கு ஐரோப்பிய நேரம் 8.20 மணிக்கு விபத்து நிகழ்ந்த போது பனிமூட்டமான நிலைமை இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் விவரித்தனர். மேலும் சிலர் வானூர்தி தீப்பிடித்து எரிவதையும், சுழன்று கொண்டிருந்ததையும், தரையைத் தாக்கும் முன் வட்டமிடுவதையும் பார்த்ததாக தெரிவித்தனர். தீப்பிடித்த வானூர்தி உள்ளூர் மழலையர் பள்ளிக்கு எதிராக நின்றது. இதன் விளைவாக கட்டிடத்தின் பக்கவாட்டில் தீப்பிடித்தது. கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்துக்குப் பிறகே அன்றைய தினம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடிவடைந்தன.[7][8][9]