ஃபிளாக்கிசுட்டாஃப், அரிசோனா
ஃபிளாக்கிசுட்டாஃப் (Flagstaff) என்பது, ஐக்கிய அமெரிக்காவில், வடக்கு அரிசோனாவில் உள்ள கொக்கோனினோ கவுன்டியில் அமைந்த ஒரு நகரமும் அதன் தலைமையிடமும் ஆகும்.[6] 2015 ஆம் ஆண்டில் நகரத்தின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 70,320.[7] இதனோடிணைந்த பெருநகரப் பகுதியின் மொத்த மக்கள்தொகை 139,097. பொசுட்டனில் இருந்து தகவல் திரட்ட வந்த குழு ஒன்று, ஐக்கிய அமெரிக்காவின் நூற்றாண்டைக் குறிக்க பொண்டெரோசா பகுதியில், 1876 யூலை 4 ஆம் தேதி நிறுவிய கொடிக்கம்பம் ஒன்றினாலேயே இந்த நகருக்கு "கொடிக் கம்பம்" என்னும் பொருள் கொண்ட "ஃபிளாக்கிசுட்டாஃப்" என்னும் பெயர் ஏற்பட்டது.[8] இந்த நகரம், கொலராடோ மேட்டு நிலத்தின் தென்மேற்கு விளிம்புக்கு அண்மையில், கண்ட ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய, தொடர்ச்சியான பொண்டரோசா பைன் காட்டின் மேற்குப் பக்கத்தை அண்டி அமைந்துள்ளது.[9] அரிசோனா மாநிலத்தின் மிக உயரமான மலைத் தொடரான சான்பிரான்சிசுக்கோ சிகரத்துக்குச் சற்றுத் தெற்கேயுள்ள எல்டன் மலைக்கு அண்மையில் இந்நகரம் உள்ளது. 12,633 அடி (3,851 மீட்டர்) உயரத்துடன் கூடிய, அரிசோனாவின் மிக உயரமான சிகரமான அம்ஃபிறீசு சிகரம் ஃபிளாக்கிசுட்டாஃப் நகரத்துக்கு வடக்கே 10 மைகள் (16 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் தொடக்ககாலப் பொருளாதாரம் மரம், தொடர்வண்டிப் பாதை, மேய்ப்புத் தொழிற்றுறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இன்று இந்நகரம் "நெஸ்லே புரினா பெட்கெயர்" (Nestlé Purina PetCare) போன்ற வணிக நிறுவனங்களின் முக்கிய விநியோக மையமாக அமைந்துள்ளதுடன்; லோவெல் அவதான நிலையம், ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அவதான நிலையம், ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம், வட அரிசோனாப் பல்கலைக்கழகம் என்பனவற்றின் அமைவிடமாகவும் உள்ளது. ஃபிளாக்கிசுட்டாஃப் நகரம், கிராண்ட் கன்யன் தேசியப் பூங்கா, ஆக் கிறீக் கன்யன், அரிசோனா சினோபால் (Snowbowl), விண்கல் கிடங்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழி 66 போன்றவற்றுக்கு அண்மையில் இருப்பதால் இந்நகரில் ஒரு வலுவான சுற்றுலாத்துறையும் உள்ளது. வரலாறுஇந்நகரத்தின் பெயர்த் தோற்றம் குறித்துப் பல கதைகள் வழக்கில் உள்ளன. அளவையாளர்கள், வளவாய்ப்புக்களைத் தேடுவோர், முதலீட்டாளர்கள் போன்றோர் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் இறுதிப் பகுதிக்கும் இடையில் இப்பகுதியூடாகப் பயணம் செய்துள்ளனர். அமெரிக்கக் கொடியை ஏற்றுவதற்காக பைன் மரமொன்றை உரித்துச் செப்பனிட்ட செயலைச் செய்தவர்களாகப் பலர் குறிப்பிடப்படுகின்றனர். இந்தக் கொடி ஏற்றப்பட்டதன் காரணமாக அதைச் சுற்றியுள்ள பகுதி "ஃபிளாக்கிசுட்டாஃப்" என அழைக்கப்பட்டது. முதல் நிரந்தரமான குடியேற்றம், 1876 ஆம் ஆண்டில் தாமசு எஃப். மக்மிலான் என்பவர் சிறிய வீடொன்றை நகரின் மேற்குப் பக்கத்தில் உள்ள மார்சு குன்றின் அடிவாரத்தில் அமைத்தபோது தொடங்கியது. 1880 களில், முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டு, தொடர்வண்டிப் பாதைத் தொழில் துறையையும் இப்பகுதி கவர்ந்தபோது இந்நகரமும் வளரத் தொடங்கியது. தொடக்கத்தில் மரம், செம்மறி, மாடுகள் என்பன பொருளாதாரத்தின் அடிப்படைகளாக இருந்தன. 1886 ஐ அண்டிய காலத்தில் அல்புகேர்க்கிக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேற்குக் கரைக்கும் இடையில் அமைந்த தொடர்வண்டிப் பாதையில் பெரிய நகரமாக "ஃபிளாக்கிசுட்டாஃப்" விளங்கியது.[10] 1900 ஆவது ஆண்டில் பத்திரிகையாளர் சார்லட் ஹால் என்பவரால் எழுதப்பட்ட நாட்குறிப்பொன்று அக்காலத்தில் இந்நகரில் இருந்த வீடுகளைச் சுத்தமில்லாத "மூன்றாம்தரச் சுரங்கத்தொழில் முகாம்" என விபரிக்கிறது. கிடைக்கும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கவேண்டி இருந்ததாகவும் அக்குறிப்பில் இருந்து அறியமுடிகிறது.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia