இருக்கன்குடி மாரியம்மன் கோயில்![]() இருக்கன்குடி மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆகும். இது தமிழகத்தின், தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.[1] தல வரலாறுசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குக்கிராமமாக இருந்தது. இங்கு பெரும்பான்மையாக விவசாயம் செய்ய கூடிய அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வந்தனர். விவசாயத்திற்கு பெண் ஒருத்தி, கூடையை வைத்துச் சாணம் பொறுக்கி சேர்த்திருக்கிறாள். ஓரளவு சாணம் சேர்ந்த பின்பு, அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள் (கிராமப்பகுதிகளில் பக்தியுடன் இருப்பவர்களிடம் சாமியே அவர்களுக்குள் இறங்கி அவர்கள் மூலம் ஆடும் நிலைக்கு 'சாமியாடுதல்' என்று பெயர். இந்த நிலையில் அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு, 'அருள் வாக்குகள்' என்று பெயர்). சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோயில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். கோயில் அமைந்துள்ள இடம்வைப்பாறு, அர்ச்சுனன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே, மணல் திட்டாயிருக்கும் இடத்தில், இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி, பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, கோயில்களில், மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பார். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ, "இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது" என்பதற்கேற்ப, வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே, 'இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சம்' என்கின்றனர் ஆன்றோர். இருக்கன்குடி பெயர்க் காரணம்கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்று இருந்து, பின்னாளில் அது, 'இருக்கன்குடி' என்றாகி விட்டது. இந்த அர்ச்சுனன் நதி, புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. அர்ச்சுனா நதி உருவான வரலாறுபஞ்சபாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை,மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று காணாது வருந்தியபோது, அர்ச்சுனன் சூரிய உதயமாகும் நேரத்தில் கங்காதேவியை மனத்தில் தியானித்து,வருணாஸ்திரத்தினால் பூமியைப் பிளந்தார். பூமியின் அடியிலிருந்து கங்காபிரவாகமாக நீர் எழும்பி வழிந்தது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் இந்நதியில் நீராடி ,நித்ய அனுட்டானங்களைச் செய்தனர். அன்று முதல் இந்த ஆறு அர்ச்சுனா நதி என்று பெயர் பெற்றது.மற்ற புண்ணிய நதிகளில் மாதம் தோறும் நீராடிப் பெறும் பயனை, இந்நதியில் ஒரு முறை நீராடுவதாலேயே பெறலாம் என்று நாரதர் கூறியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுனன் என்பதால், இதற்கு 'அர்ச்சுனன் ஆறு' என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். வழிபாட்டு முறைகள்
சிறப்பு விழாக்கள்ஆடி, தை, பங்குனி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தென் மாவட்டங்களின் பல ஊர்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதால் இந்த நாட்களில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். துணைக் கடவுள்கள்இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வாழவந்தம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், முப்பிடாரியம்மன் போன்றவர்களுக்கும் காவல்தெய்வமான கருப்பசாமிக்கும் துணைக் கோயில்கள் உள்ளன. போக்குவரத்துமதுரையிலிருந்து - கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகர் இருக்கிறது. இங்கிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து, இருக்கன்குடிக்கு நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரயில் பயணத்தில் மதுரை யிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் சாத்தூர், விருதுநகர் போன்ற ஊர்களுக்குச் சென்று, அங்கிருந்து, பேருந்து மூலமாக இருக்கன்குடிக்குச் செல்லலாம். இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia