இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)

இறுதி இராவுணவு
The Last Supper
ஓவியர்லியொனார்டோ டா வின்சி
ஆண்டு1495–1498
வகைசுண்ணாம்புக் கலவைச் சாந்து பூசிய
சுவரில் எழுதிய சுவரோவியம்
இடம்அருளன்னை மரியா கோவில், மிலான்
ஆள்கூற்றுகள்45°28′00″N 9°10′15″E / 45.46667°N 9.17083°E / 45.46667; 9.17083

இறுதி இராவுணவு (The Last Supper) என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும்.[1] இறுதி இராவுணவை சில கிறித்தவர்கள் இராப்பந்தி அல்லது இராபோஜனம் என்றும் கூறுவதுண்டு.

லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (Ludovico Sforza) என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெஸ்தே (Beatrice d'Este) என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.

யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சிபற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" (Supper of the Lord) என்றும் அழைக்கப்படுகிறது.

திருவிவிலியத்தில் இயேசுவின் இறுதி இராவுணவு

யோவான் 13:21-27 இயேசு துன்புற்று இறப்பதற்கு முன் அருந்திய இறுதி உணவு நிகழ்ச்சியைக் கீழ்வருமாறு விவரிக்கிறது:

யோவான் நற்செய்தி தவிர, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற மூன்று நற்செய்தியாளர்களும் இயேசுவின் இறுதி இராவுணவை விவரித்துள்ளனர். திருத்தூதர் பவுலின் மடல்களிலும் ஆண்டவரின் இறுதி உணவுபற்றிய குறிப்புகள் உண்டு:

  • மத்தேயு 26:26-30
  • மாற்கு 14:22-26
  • லூக்கா 22:15-20
  • 1 கொரிந்தியர் 11:23-25

ஓவியத்தின் வரலாறு

பின்னணி

டா வின்சி உருவாக்கிய இறுதி இராவுணவு ஓவியம் மிலான் நகரில் "அருளன்னை மரியா கோவில்" (Santa Maria delle Grazie) என்னும் வழிபாட்டிடத்தை உள்ளடக்கிய துறவற இல்லத்தின் உணவறைச் சுவரில் வரையப்பட்டது. இவ்வோவியம் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

1482ஆம் ஆண்டு, லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா என்னும் குறுநில ஆளுநர் லியொனார்டோ டா வின்சியிடம் தம் தந்தை பிரான்செஸ்கோ ஸ்ஃபோர்சாவுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பிடக் கேட்டார். பிரான்செஸ்கோ ஸ்ஃபோர்சா குதிரைமேல் இருந்து எதிரியைத் தாக்குவதுபோல் ஒரு வெண்கலச் சிலைத் தொகுப்பை உருவாக்கத் திட்டமிட்ட லியொனார்டோ அதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டார். பத்து ஆண்டுகள் உழைப்புக்குப் பின் சிலைத் தொகுப்பை உருவாக்கத் தேவையான வெண்கலம் கிடைக்கவில்லை என்று அத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்த லியொனார்டோ மிலானை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றார்.

ஆனால் லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா மீண்டும் லியொனார்டோவை அழைத்து மற்றொரு திட்டத்தை நிறைவேற்றித் தரக் கேட்டார். அதுவே உலகப் புகழ் பெற்ற "இறுதி இராவுணவு" என்னும் சுவரோவியமாகும்.

ஸ்ஃபோர்சா குடும்பத்திற்காக உருவான ஓவியம்

மிலான் நகரில் புனித சாமிநாதர் (டோமினிக்) சபைத் துறவியர் இல்லத்தில் "அருளன்னை மரியா கோவில்" (Santa Maria delle Grazie) இருந்தது. அக்கோவிலில் கலையழகு மிக்க ஓவியங்களையும் கிறித்தவ சமயம் சார்ந்த கலைச் சின்னங்களையும் உருவாக்கி, தம் குடும்பமாகிய ஸ்ஃபோர்சாவின் பெயரை நிலைத்திருக்கச் செய்ய லுடோவிக்கோ விரும்பினார்.

அக்கோவிலின் தூயகப் பகுதியை (sanctuary) டொனாட்டோ ப்ரமாந்தே (Donato Bramante) என்னும் கலைஞர் ஏற்கெனவே புதுப்பித்திருந்தார். கோவிலை அடுத்திருந்த துறவியர் இல்ல உணவறையை அழகுபடுத்த எண்ணினார் லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா.

கலை மரபுக்கு ஏற்ப, உணவறையில் இயேசு சிலுவையில் தொங்கும் காட்சியையும் இயேசு இறுதி இராவுணவு அருந்தும் காட்சியையும் சித்தரிக்க முடிவாயிற்று. டொனாட்டோ மோந்தோர்ஃபனோ என்பவர் இயேசு சிலுவையில் தொங்கும் காட்சியை மிக விரிவாக 1495இல் வரைந்தார். அதனருகில் லியொனார்டோ லுடோவிக்கோவின் குடும்பத்தினரின் சாயலை வரைந்தார்.

மேற்கூறிய ஓவியங்களுக்கு எதிர்ப்பக்கம் இருந்த சுவரில் இயேசுவின் இராவுணவுக் காட்சியை உருவாக்குவதென்று லியொனார்டோ முடிவுசெய்தார். அந்த இராவுணவுக் காட்சி ஸ்ஃபோர்சா குடும்ப நினைவகத்தின் (mausoleum) முதன்மைக் கலைப்பொருளாக அமைய வேண்டும் என்பது லுடோவிக்கோவின் விருப்பம்.

வரைந்த பாணி

லியோனார்டோ இறுதி இராவுணவு ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1498இல் நிறைவுக்குக் கொணர்ந்தார். அவர் அதிகாலையில் எழுந்து ஓவிய வேலையைத் தொடங்கினால் மாலை வரையும், பசி தாகம் என்று பாராமல் ஓவியம் வரைவதிலேயே கண்ணாயிருந்தார் என்று சம கால எழுத்தாளர் மத்தேயோ பண்டேல்லோ (Matteo Bandello) என்பவர் குறிப்பிடுகிறார்.

சுவரில் ஓவியம் வரைய முடிவுசெய்த லியொனார்டோ அதிக நாள்கள் நீடித்து நிலைபெறும் தன்மையுடைய "ஈரவோவிய" (fresco) முறையைக் கையாள விரும்பவில்லை. அம்முறையில் முதலில் சமதளமான சுவரில் சீராகச் சுண்ணத்தால் முதல் பூச்சு செய்ய வேண்டும். பூச்சு உலர்ந்துபோவதற்கு முன்னால், ஈரமாக இருக்கும்போதே சாயம் கலந்த நிறக்கலவைகளைத் தூரிகையால் பூச வேண்டும். ஆனால், லியோனார்டோ ஓவியம் வரைந்த போது ஒவ்வொரு தூரிகைப்பூச்சுக்கு முன்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாராம்.

எனவே, "ஈரவோவிய முறையை" கையாளாமல், உலர்ந்த சுவர்தளத்தில் ஒரு பலகையில் ஓவியம் எழுதுவதுபோல முதலில் பசைக்கூழ் அப்பி, அடிநிறம் (underpainting) பூசி, அது உலர்ந்தபின் பல வண்ணங்களைத் துல்லியமாக விரித்தும் அழுத்தியும், பரவியும் குறித்தமைத்தும், ஒளிர்வித்தும் கருமையாக்கியும் இறுதி இராவுணவு ஓவியத்தை லியொனார்டோ எழுதினார்.

நிறமிழப்பு

லியொனார்டோ ஒவியத்தை வரைந்து முடித்த உடனேயே, "ஈரவோவிய முறை" அன்றி, "உலர்முறை" கையாண்டதில் சில அடிப்படைக் குறைபாடுகள் இருந்ததைக் கண்டார். ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் இடதுபுறம் ஒரு கீறல் தோன்றியது. அது காலப்போக்கில் ஓவியம் சிறிதுசிறிதாகச் சிதைவழிய முதல் படியாயிற்று. இருபது ஆண்டுகளுக்குள்ளாக அந்த ஓவியத்தில் "பளபளப்பான கறை தவிர வேறொன்றையும் காண இயலவில்லை" என்று வசாரி (Vasari) என்னும் சமகால அறிஞர் எழுதினார்.

1642இல் எழுதிய ஃப்ரான்செஸ்கோ ஸ்கன்னெல்லி என்பவர், இறுதி இராவுணவு ஓவியத்தில் உள்ள ஆள்களை அடையாளம் காண்பதே கடினமாக உள்ளது என்றார்.

1652இல் சிதைந்த நிலையில் இருந்த ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு நுழைவாயில் வழி உருவாக்கப்பட்டது. உணவறைக்கும் சமயலறைக்கும் போய்வர அவ்வழி பயன்படுத்தப்பட்டது. பின்னர். அந்த வழியைச் செங்கல் கொண்டு அடைத்துவிட்டனர். இன்று, ஓவியத்தின் கீழ் அடிப்பகுதி நடுவில் வளைவுபோல் அமைந்துள்ள கட்டு இவ்வாறு ஏற்பட்டதே.

1672இல் ஓவியத்தைத் தட்பவெப்ப நிலையிலிருந்து காப்பதற்காக அதை ஒரு திரையால் மூடினார்கள். ஆனால் ஈரப்பசை ஓவியத்திற்கும் திரைக்கும் இடையே தங்கிப்போய், சேதத்தை இன்னும் அதிகரித்தது.

ஓவியம் சிதையத் தொடங்கியதற்கு முக்கிய காரணங்கள் அது எழுதப்பட்ட சுவருக்குப் பின்சுவர் ஈரமடையத் தொடங்கியதும், லியொனார்டோ கையாண்ட "உலரோவிய முறையும்", அடுக்களை அண்மையில் இருந்ததால் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டதும், உணவறையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றம், மற்றும் உணவிலிருந்து எழுந்த ஆவி போன்ற கூறுகளும் ஆகும்.

சீரமைப்பு முயற்சிகள்

இயேசுவின் முகம் (1979-1999 சீரமைப்புக்கு முன்)
இயேசுவின் முகம் (1979-1999 சீரமைப்புக்குப் பின்
  • 1726: மைக்கலாஞ்சலோ பெல்லோட்டி, லியொனார்டோ வரைந்த ஓவியம் "ஈரவோவிய முறையில்" எழுதப்பட்டது என்று தவறாக எண்ணி, அதை அம்முறைப்படி சீரமைக்க முயன்றார். நிலைமை மோசமானது.
  • 1770: ஜூசேப்பே மாஸ்ஸா என்பவர் பெல்லோட்டி செய்த மாற்றத்தை மீண்டும் மாற்றி, புதிதாகச் சீரமைக்க முயன்றார்.
  • 1796: பிரஞ்சு இராணுவம் உணவறையை ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தியது; ஓவியத்தின்மீது கல்லெறிந்தும், ஏணியில் ஏறி, ஓவியத்திலிருந்த திருத்தூதர்களின் சாயல்களில் கண்களைச் சுரண்டியும் நிறத்தை அகற்றினர். பின், ஓவியம் இருந்த உணவறை ஒரு சிறையாகப் பயன்பட்டது. சிறைக் கைதிகள் ஓவியத்தைச் சிதைத்தனரா என்று தெரியவில்லை.
  • 1821: ஸ்டேஃபனோ பரேஸ்ஸி என்பவர் இறுதி இராவுணவு ஓவியத்தைச் சுவரிலிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாற்ற முயன்றார். அது இயலாத காரியம் என்று அவர் உணர்வதற்குள் ஓவியத்தின் நடுப்பகுதிக்கு மேலும் சேதம் விளைந்தது.
  • 20ஆம் நூற்றாண்டு: ஓவியம்பற்றிய ஒழுங்குமுறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • 1901-1908: லூயிஜி காவெனாகி என்பவர் ஓவியத்தின் ஒளிப்படங்களைப் பயன்படுத்தி, கவனமாக ஆய்வு நிகழ்த்தி, முதன்முறையாக, லியொனார்டோவின் ஓவியம் "ஈரவோவிய முறையில்" எழுதப்படவில்லை என்று நிலைநாட்டினார். 1906-1908 ஆண்டுகளில் அவர் ஓவியத்தைத் தூய்மைப்படுத்தி, நிறம் போயிருந்த இடங்களில் நிறம் இட்டார். மேல் படிந்த அழுக்குகளை அகற்றினார்.
  • 1924: ஒரேஸ்தே சில்வேஸ்த்ரி ஓவியத்தை மேலும் தூய்மையாக்கினார்.
  • இரண்டாம் உலகப் போர்: 1943, ஆகஸ்டு 15ஆம் நாள் ஓவியம் இருந்த கட்டடத்தின் அருகே விழுந்த குண்டு ஓவியத்தை அழித்திருந்திருக்கும். ஓவியம் இருந்த இடத்தின் வடக்கு சுவரைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கிவைத்து பாதுகாப்பு அளித்ததன் விளைவாக ஓவியம் அதிசயமாக அழிவிலிருந்து தப்பியது. ஆயினும், குண்டு விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வு ஓவியத்தைச் சேதப்படுத்தியிருக்கலாம்.
  • 1951-1954: மவுரோ பெல்லிச்சோலி என்பவர் ஓவியத்தில் படிந்த பூஞ்சை போன்ற அழுக்குகளை அகற்றினார். ஓவியத்தின் கருநிறப் பார்வையைப் போக்கி மிதமாக்கினார். அவரது முயற்சியினால் ஓவியம் பெருமளவு காப்பாற்றப்பட்டது.

அண்மைய சீரமைப்பு முயற்சி

1979-1999 சீரமைப்புக்கு முன்னால், 1970இல் லியொனார்டோவின் ஓவியம் இவ்வாறு தோற்றமளித்தது.

பீனின் ப்ரம்பீல்லா பார்சிலோன் (Pinin Brambilla Barcilon) என்னும் வல்லுநர் ஓவியத்தைச் சீரமைக்கும் பணியை 1979இல் தொடங்கினார். அப்பணி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1999இல் நிறைவுற்றது.

மிகவும் துல்லியமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்சிலோன் சீரமைப்பை மேற்கொண்டார். ஓவியம் மேலும் சீர்குலைவதைத் தடுப்பதும், லியொனார்டோவின் ஓவியத்தின் மீது முன்னாள் ஓவியர்களால் செய்யப்பட்ட "மேல்வரைவுகளை" கவனமாக அகற்றி, லியொனார்டோவின் ஓவியத்தை அதன் முன்னிலைக்குக் கொணர்வதும் இச்சீரமைப்பின் நோக்கமானது.

கடின உழைப்பின் விளைவாக லியொனார்டோவின் முதல் ஓவியத்தின் நிறங்கள் மீண்டும் வெளித்தோன்றின. நிறம் வெளிறிப்போன இடங்களில் பார்சிலோன் மிக மிதமானதொரு பொதுநிறப் பூச்சு கொடுத்தார். இவ்வாறு, புதுப் பூச்சும் லியொனார்டோ ஓவியத்தின் முதல் நிறங்களும் ஒன்றோடொன்று குழம்பாமல் பார்த்துக்கொண்டார்.

இந்த நீண்ட காலச் சீரமைப்புக்குப் பின் இறுதி இராவுணவு ஓவியம் 1999 மே மாதம் 28ஆம் நாள் மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டது. ஓவியம் இருக்கின்ற அறை முழுவதும் மிக நுட்பமான, கட்டுப்படுத்தற்கு ஏற்றக் காற்றோட்ட அமைப்பு நிறுவப்பட்டது. ஈரத்தன்மையையும் தூசி படிதலையும் தவிர்க்கும் தொழில்நுட்பமும் ஏற்படுத்தப்பட்டன. பார்வையாளர், முன்னறிவிப்போடுதான் ஓவியத்தைப் பார்க்க முடியும். ஒரே நேரத்தில் 25 பேர், 15 நிமிடங்கள் மட்டுமே பார்வைக்கு அனுமதி உண்டு.

சீரமைப்பு குறித்த விமர்சனம்

லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு. பகுதித் தோற்றம்.

பார்சிலோன் செய்த சீரமைப்பைச் சில வல்லுநர்கள் விமர்சித்துள்ளார்கள். ஒருவர், அண்மைய சீரமைப்புக்குப் பிறகு இராவுணவு ஓவியம் 18-20 விழுக்காடு லியொனார்டோ, 80 விழுக்காடு பார்சிலோன் ஓவியமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

நிறம் வெளிறிப்போன இடங்களில் பொதுநிறம் புதிதாகப் பூசியது தேவையற்றது என்றும் சிலர் கருதுகிறார்கள்.

இவ்வகை விமர்சனங்கள் இருப்பினும், பார்சிலோன் செய்த சீரமைப்பைப் பல அறிஞர்கள் போற்றியுள்ளார்கள்.

உலக பாரம்பரிய உடைமை நிலை

1980இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்தையும் அதன் தொடர்புடைய அருளன்னை மரியா கோவிலையும் உலக பாரம்பரிய உடைமை என்று அறிவித்தது.

ஓவியம் வழங்கும் செய்தி

இராவுணவு ஓவியத்தில் ஆள்களை அடையாளம் காட்டும் குறிப்புகள். இத்தாலிய மொழி

லியொனார்டோ வரைந்த இந்த ஓவியம் இயேசுவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வைச் சித்திரமாகக் காட்டுகிறது.

துறவியரின் உணவறையில் அமைந்த இந்த ஓவியம் இயேசு தம் சீடர்களோடு உணவருந்துவதைச் சித்தரிக்கிறது. இயேசுவும் சீடரும் தலைமை மேசையில் உணவருந்துகின்றனர். ஆயினும் அவர்கள் அந்த அறையில் வழக்கமாக உணவருந்துகின்ற துறவியரிடமிருந்து சிறிது மேலே உள்ளார்கள். மேசையும் அதில் உணவருந்துவோரும் பிறர் பார்வைக்குச் சிறிது முன்னோக்கி இருப்பதுபோல் தோன்றுகிறது. அந்த உணவறையில் மண்ணகமும் விண்ணகமும் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

யோவான் 13:21-27 இயேசு துன்புற்று இறப்பதற்கு முன் அருந்திய இறுதி உணவு நிகழ்ச்சியை விவரிக்கிறது. அதில் வருகின்ற ஒரு சொற்றொடர் இந்த ஓவியத்தின் கருப்பொருளாக அமைந்தது. அதாவது,

இயேசு தம் நெருங்கிய நண்பர்களாகவும் தோழர்களாகவும் தெரிந்துகொண்டவர்கள் பன்னிருவர் (திருத்தூதர்கள்/அப்போஸ்தலர்கள்). அவர்களுள் ஒருவர் தம் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு, தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று இயேசு கூறியது எல்லாருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் ஒவ்வொரு சீடரின் உள்ளத்திலும் எத்தகைய உணர்வுகள் எழுந்தன என்பதை லியொனார்டோ சித்தரிக்கிறார்.

இவ்வாறு இயேசு கூறியதை லியொனார்டோ ஓவியத்தின் மையமாக்கினார்.

காட்சியமைப்பு

பின்னணிக் கூறுகள்

ஓவியத்தின் மேல் பின்பகுதியில் மூன்று சாளரங்கள் உள்ளன. அவற்றின் வழியாக வரும் ஒளி ஓவியத்தின்மீது வெளிச்சத்தை உருவாக்குகிறது. இடதுபுறச் சுவரில் பக்கவாட்டில் உள்ள சாளரத்திலிருந்தும் ஒளி வீசி ஓவியம் முழுவதும், வலதுபுற மேல்பகுதியும் வெளிச்சம் பெறுகிறது. உணவறையில் உண்மையிலேயே அத்தகையதொரு சாளரம் இருந்தது.

  • ஒரு சுவரில் வரையப்பட்ட ஓவியமாயினும் அது முப்பரிமாணம் கொண்ட வீட்டு அறைபோலப் பார்வையளிக்கிறது.
  • தலைக்குமேல் கூரையும், கால்களுக்குக் கீழே சமதளத் தரையும், பக்கச் சுவர்களில் தொங்குகின்ற திரைத் துணிகளும், ஆழ் பின்பகுதியில் ஒளிக்கு வழியாக உள்ள சாளரங்களும் உண்மையிலேயே பார்வையாளர்களும் இயேசுவோடும் அவர்தம் சீடர்களோடும் ஒரு வீட்டினுள் இருப்பது போன்ற மாயத் தோற்றத்தைக் கண்களுக்குமுன் உருவாக்குகின்றன (trompe-l'œil).
  • இவ்வாறு, உணவறைப் பின்னணியில் மற்றுமொரு பின்னணியை லியொனார்டோ உருவாக்கியுள்ளார். ஓவியத்தில் உள்ள இரு பக்கத்துச் சுவர்களுக்குப் பின்னும் இடம் இருப்பதுபோன்று ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடுப்பகுதியில் இயேசு

  • ஓவியத்தின் கீழ்ப்பகுதி முழுவதும் மிக நீண்டதொரு மேசையால் நிறைந்துள்ளது. அது பார்வையாளரின் முன்னே முந்தித் தெரிகிறது. சரியாக மேசையின் நடுவே இயேசு அமர்ந்திருக்கிறார்.
  • இயேசுவின் உருவம் ஒரு பிரமிடு போல உள்ளது. தலை உச்சிப்பகுதி போலவும், விரிந்திருக்கும் கைகள் அடிப்பகுதிபோலவும் உள்ளன. அவர்தம் தலை சற்றே சாய்ந்துள்ளது. அவருடைய கண்களும் சற்றே மூடியிருக்கின்றன. தம் நெருங்கிய சீடருள் ஒருவர் தம்மைக் காட்டிக்கொடுப்பார் என்று கூறிய சொற்கள் அவர்தம் வாயிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவரது உதடுகள் மூடியும் மூடாமலும் தோன்றுகின்றன.
  • இயேசுவே இந்த ஓவியத்தின் மையம். அவரது முகத்தில் சலனம் இல்லை. தம்மை எதிர்நோக்கியிருக்கின்ற துன்பமும் சிலுவைச் சாவும் அவரது மன உறுதியை உலைத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவரது முகத்தில் அமைதி தவழ்கிறது.

இயேசு நற்கருணையை ஏற்படுத்துகிறார்

இயேசு இறுதி இராவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தி, அப்ப வடிவத்திலும் திராட்சை இரச வடிவத்திலும் தம் உடலையும் இரத்தத்தையும் (தம்மை முழுவதும்) மானிட மீட்புக்காகக் கையளித்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை.

லியொனார்டோவின் ஓவியத்தில் இயேசு நற்கருணையை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி உள்ளது. இயேசுவின் கைகளை ஓவியத்தில் பார்த்தால் அவை அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் எடுக்கப் போவது தெரிகிறது.

இயேசுவின் வலது கை திராட்சை இரசத்தை நோக்கியும், அவரது இடது கை அப்பத்தை நோக்கியும் நகர்வதை லியொனார்டோ எழிலுற வடித்துள்ளார்.

திருத்தூதர்கள்

  • இயேசுவைச் சூழ்ந்து திருத்தூதர்கள் பன்னிருவரும் மூன்று பேர் மூன்று பேராக நான்கு குழுவாக உள்ளனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு உடல்நிலை கொண்டிருந்தாலும், மொத்தத்தில் சமனாகச் சீரமைத்த விதத்தில் பன்னிருவரும் தோற்றமளிக்கினறனர்.
  • நடுவிலிருக்கும் இயேசுவிடமிருந்து புறப்படுகின்ற அலைபோல இருபுறமும் சீடர் குழுக்கள் உள்ளன. அவர் கூறிய சொற்களும் அலைபோலச் சீடர்களைச் சென்றடைந்து அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்ச்சிகளை எழுப்புகின்றன.
  • இயேசுவின் அருகிலிருப்போருடைய உணர்ச்சி வெளிப்பாடு தீவிரமாகவும், சற்றே அகன்றிருப்போரின் உணர்ச்சி வெளிப்பாடு

மிதமாகவும் உள்ளது.

  • இயேசுவின் அருகே இடது புறமும் வலது புறமும் இருப்போர் அவரை விட்டு அகல்வதுபோலவும், இரு பக்கங்களிலும் வெளி ஓரங்களில் இருப்போர் அவரை நோக்கி நகர்வது போலவும் ஓவியர் வரைந்துள்ளார்.
  • ஒவ்வொரு திருத்தூதரின் உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்தும் வகையில் அவர்களது உடல்நிலை, முக பாவம், கையசைவு, கண்ணசைவு போன்ற ஒவ்வொரு அம்சத்தையும் லியொனார்டோ படம்பிடித்துக் காட்டுகிறார்.

திருத்தூதர் இருக்கும் இடம்

நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள திருத்தூதர்களை லியொனார்டோ கீழ்வருமாறு அமர்த்தியுள்ளார்:

  • குழு 1: இடது புறம் வெளிப்பகுதி (இடமிருந்து வலம்): பர்த்தலமேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, அந்திரேயா.
  • குழு 2: இடது புறம் உட்பகுதி (இடமிருந்து வலம்): யூதாசு இஸ்காரியோத்து, சீமோன் பேதுரு, யோவான்.
  • குழு 3: வலது புறம் வெளிப்பகுதி (வலமிருந்து இடது): தீவிரவாதி சீமோன், ததேயு, மத்தேயு.
  • குழு 4: வலது புறம் உட்பகுதி (வலமிருந்து இடது): பிலிப்பு, செபதேயுவின் மகன் யாக்கோபு, தோமா.

இப்பெயர்களை லியொனார்டோ தாமாகவே ஓவியத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் லியொனார்டோவின் மாணாக்கரான சேசரே தா செஸ்தோ (Cesare da Sesto) என்பவர் தம் குரு வரைந்த ஓவியத்தைத் துல்லியமாகப் பிரதி எடுத்தார். அப்பிரதி இன்று சுவிட்சர்லாந்தில் போன்டே கப்ரியாஸ்கா (Ponte Capriasca) என்னும் நகரில் புனித அம்புரோசு கோவிலில் உள்ளது. அந்த ஓவியத்தில் மேற்கூறியவாறு திருத்தூதர்களின் பெயர்கள் குறிக்கப்படுவதால் லியொனார்டோவும் அவ்வாறே கொண்டார் என்பது தெளிவு[2].

உடல்நிலைகள், சைகைகள், உணர்வுகள்

  • லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு ஓவியம் இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றினைச் சித்தரிக்கும் முறையில் மட்டுமே அமையவில்லை. மாறாக, ஓவியத்தில் வருகின்ற ஒவ்வொரு நபரும் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களுடைய உடல்நிலை, கை அசைவு, முகம், உதடு, வாய், கண் ஆகியவற்றின் வழியாக ஓவியர் எடுத்துரைக்கிறார்.
  • லியொனார்டோவின் ஓவியம் "சொற்களின்றிப் பேசுகின்ற கவிதை" எனலாம். அவரே தமது குறிப்புப் புத்தகத்தில் கீழ்வருமாறு விளக்குகின்றார்:

உணர்வுகளின் வெளிப்பாடுகள்

  • லியொனார்டோ தருகின்ற குறிப்புகளையும் நம் கண்களுக்கும் உள்ளத்திற்கும் தோன்றுகின்றவற்றையும் கருத்தில் கொண்டு இந்த ஓவியத்தை நாம் உள்வாங்கினால் அங்கே அச்சம், ஆச்சரியம், கோபம், நம்பவியலாத் தன்மை, மறுப்பு, ஐயம் போன்ற பல உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.
  • சீமோன் பேதுருவின் வலது கையில் கத்தி இருக்கிறது. இது மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் வழக்கமாக உள்ள சித்தரிப்புத் தான். அவர் இயேசுவை ஒருவர் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்பதை இயேசுவின் வாயிலிருந்து கேட்டதும், ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாமல், அருகிலிருக்கின்ற யோவானின் தோளைத் தம் இடதுகையால் பிடித்து அசைத்து, "யாரைப் பற்றிக் கூறுகிறாரெனக் கேள்" (யோவான் 13:24) என்று சொல்கிறார்.
  • "இயேசுவைக் காட்டிக் கொடுப்பவர் யார்" என்னும் கேள்வியைச் சீடர்கள் கேட்கின்றனர். தோமாவுக்கு இயேசு கேட்ட கேள்வியின் பொருள் என்னவென்று புரிந்துகொள்வதில் "ஐயம்" ஏற்படுகிறது. அவர் தம் கையைத் தூக்கி, சுட்டு விரலை உயர்த்தி, இயேசுவிடம் "விளக்கம்" கேட்பது போல் தோன்றுகிறார்.
  • பிலிப்பு இயேசுவின் சொற்களைக் கேட்டவுடன் இருக்கையிலிருந்து எழுந்து, இயேசுவைக் காட்டிக் கொடுப்பதன் விளைவு என்னவாகுமோ என்று "மலைத்துப்போய்" நிற்கிறார்.
  • பர்த்தலமேயுவும் (ஓவியத்தின் இடது ஓரம்) எழுந்து நின்று, அந்திரேயாவை நோக்கிக் கேள்வி எழுப்புகிறார். அவரோ, தமக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவதுபோலக் கைகளை விரிக்கிறார்.
  • திருத்தூதர்களில் சிலர் கேள்வி கேட்கின்றனர். மற்றும் சிலர் கோபம் கொண்டு, தாம் குற்றவாளிகள் அல்ல என்று கூறுகின்றனர்.
  • யூதாசு இஸ்காரியோத்து மட்டும் ஒதுங்கி இருக்கிறார். வழக்கம்போல அவரது ஒரு கையில் பணப்பை இருக்கிறது (காண்க: யோவான் 13:29). மறு கை அப்பத்தை நோக்கி நகர்கிறது. விரைவில் அவர் அப்பத்தை எடுத்து "இயேசுவுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பார்." அவரே இயேசுவைக் காட்டிக் கொடுப்பவர் (காண்க: மத்தேயு 26:23). ஓவியத்தில் உள்ள அனைவர் மீதும் ஒளி தெரிகிறது; ஆனால் யூதாசு மட்டும் "இருளில்" இருக்கிறார். அவரது முகமும் இறுகிப்போய் இருக்கிறது. இயேசு கூறிய வார்த்தைகள் தம்மைக் குறித்தனவே என்று உணர்ந்த யூதாசு அடைந்த அதிர்ச்சியில் பின்வாங்குகிறார்; உப்புக் குமிழைத் தட்டிப்போடுகிறார்.
  • லியோனார்டோ யூதாசைச் சித்தரிப்பதில் சில தனிப் பண்புகள் உள்ளன. பெரும்பான்மையான மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் யூதாசு ஒரு மூலையில் பணப்பையோடு இருப்பார். யூதாசுக்கு மட்டும் ஒளிவட்டம் இருக்காது. லியொனார்டோ அப்படிச் செய்யவில்லை. அவரது ஓவியத்தில் யூதாசு மற்ற திருத்தூதர்களுள் ஒருவராக, அவர்களோடு சேர்ந்தே இருக்கிறார். அவர் தம் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, தம் மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவராக நடக்க வேண்டும். அவர் சபிக்கப்பட்டவர் என்று முன் கூட்டியே விதி என்று ஒன்றும் இருக்கவில்லை என்னும் கருத்தை லியொனார்டோ ஓவியம் உணர்த்துகிறது.
  • இயேசுவின் தனிப்பட்ட அன்புக்கு உகந்தவராய் இருந்தவர் யோவான். அவரை இளைஞராகச் சித்தரிப்பது வழக்கம். லியொனார்டோவும் அப்படியே செய்துள்ளார். யோவான் இயேசுவைப் போலவே அமைதியாக இருக்கின்றார். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. அவர் சீமோன் பேதுருவின் பக்கம் திரும்பி அவர் கூறுவதற்குச் செவிமடுக்கின்றார். இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறக்கப் போகின்றார் என்பதை அறிந்தவர்போல அவரது முக பாவனை உள்ளது.

"த டா வின்சி கோட்" புதின சர்ச்சை

"த டா வின்சி கோட்" புதினம் தரும் விளக்கம்

2003ஆம் ஆண்டில் டான் பிரவுன் என்னும் அமெரிக்க பரபரப்புப் புனைகதை எழுத்தாளர் த டா வின்சி கோட்: ஒரு புதினம் (The Da Vinci Code: A Novel) என்னும் தலைப்பில் மர்ம-துப்பறியும் புனைகதை ஒன்றை வெளியிட்டார். அது புனைகதையாக இருந்தாலும் பல வரலாற்றுக் குறிப்புகளயும் உள்ளடக்கியிருந்ததால் கதையில் உள்ள எல்லா செய்திகளும் உண்மையே என்றொரு தவறான எண்ணம் உருவானது. புனைகதையின் ஆசிரியர், "இந்த நாவலில் வருகின்ற கலைப்பொருள்கள், கட்டடக் கலை, ஏடுகள், இரகசிய சடங்குகள் ஆகியவை பற்றிய எல்லா விவரிப்புகளும் சரியானவை" (All descriptions of artwork, architecture, documents, and secret rituals in this novel are accurate) என்று நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார்.

டான் பிரவுன் எழுதிய புனைகதை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்திற்குக் கற்பனை அடிப்படையில் விளக்கங்கள் தந்தது. அந்த விளக்கப்படி, லியொனார்டோ "சீயோன் மடம்" (The Priory of Sion) என்னும் ஐரோப்பிய இரகசிய குழுவின் உறுப்பினராக இருந்தார். அவர் வரைந்த ஓவியத்தில் இயேசுவின் வலப்புறம் அமர்ந்திருப்பவர் திருத்தூதர் யோவான் அல்ல, மாறாக, மகதலா மரியாதான் அவர். இயேசு மகதலா மரியாவை மணம் செய்திருந்தார். அவர் வழியாக ஒரு பெண்குழந்தைக்கும் தந்தை ஆனார். இயேசுவின் வாரிசைத் தாங்கிய மகதலா மரியாதான் "திருக் கிண்ணம்" (Holy Grail). லியொனார்டோ வரைந்த இராவுணவு ஓவியத்தில் "கிண்ணம்" இல்லை; ஆனால் "திருக் கிண்ணமாகிய" மகதலா மரியா இருந்தார்.

டான் பிரவுன் மேற்கூறிய கற்பனை ஊகத்தின் அடிப்படையில் விறுவிறுப்பானதொரு மர்ம-துப்பறியும் புனைகதை (mystery-detective novel) எழுதினார். அந்தப் புனைகதை நூலில் லியொனார்டோவின் ஓவியம்பற்றிய டான் பிரவுன் கற்பனை விளக்கங்கள் குறிப்பாக 55, 56, 58 அதிகாரங்களில் உள்ளன.

புனைகதை விளக்கத்திற்கு மறுப்பு

"த டா வின்சி கோட்" புனைகதை இயேசு பற்றிய உண்மையைத் திரித்தும், வரலாற்றுச் செய்திகளைத் தவறாக விளக்கியும், சில தகவல்களை மிகைப்படுத்தியும் எழுதப்பட்டதோடு, நூலில் வருவதெல்லாம் உண்மை போன்றதொரு பிரமையை உருவாக்கியது என்று கூறி, கிறித்தவ சபைகள் அந்நூலின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தன. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு பற்றிய உண்மையைத் தம் சமய நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ள கிறித்தவ சமயத்தை அடிப்படையின்றி விமர்சிப்பது ஏற்கத்தகாதது என்றும் கிறித்தவ சபைகள் கருத்துத் தெரிவித்தன.[3]

லியொனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம் ஒரு இரகசியத்தை உள்ளடக்கியிருந்தது என்றும், ஓவியர் அந்த இரகசியத்தை யாருக்கும் தெரியாமல் குறியீடுகள் வழியாக மறைத்துவைத்தார் என்றும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. நாவலாசிரியர் கற்பனை செய்து ஒரு கதையை உருவாக்கிவிட்டு, தம் கற்பனை லியொனார்டோவின் ஓவியத்தில் உள்ளதைத்தான் கண்டுபிடித்தது என்று கூறுவதைப் பகுத்தறிவு ஆய்வின்படி ஏற்கமுடியாது. இதை வேண்டுமானால் "இரகசியத் திட்ட எடுகோள்" (conspiracy theory)[4] என்று கூறலாமே ஒழிய வரலாற்று உண்மை என்பது தவறு.

மேற்கூறிய சமயம் தொடர்பான மறுப்பைத் தவிர, கலை வரலாற்றாசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள் போன்றோரும் டான் பிரவுன் லியொனார்டோ டா வின்சியின் ஓவியத்துக்கு அளித்த விளக்கம் தவறானது என்று நிறுவியுள்ளனர். இந்த மறுப்புப் பற்றிய விவரங்கள் இதோ:

  • டான் பிரவுன் 2003இல் "த டா வின்சி கோட்" என்னும் புனைகதையை எழுதுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் "த டெம்ப்ளார் ரெவலேஷன்" (The Templar Revelation) என்னும் புத்தகத்தை லின் பிக்னெட், க்ளைவ் ப்ரின்ஸ் என்போர் வெளியிட்டிருந்தனர்[5]. டான் பிரவுன் அப்புத்தகத்திலிருந்து பல தகவல்களை அப்படியே எடுத்து (குறிப்பாக, லியொனார்டோ ஓவியத்தில் மகதலா மரியா இயேசுவின் அருகில் அமர்ந்திருப்பது, அவர்கள் இருவருக்கும் உள்ள உறவு போன்ற ஊகங்கள்), அவற்றைத் தமது நாவலின் கதைக்கு அடித்தளமாகக் கொண்டார். அந்நூலில் உள்ள ஓர் அதிகாரத்தின் தலைப்பிலிருந்து டான் பிரவுன் தம் நாவலுக்கான தலைப்பைத் தேர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
  • டான் பரவுன் மேற்கூறிய நூலிலிருந்து தகவல்கள் பெற்றார் என்பதற்கு இன்னொரு காரணம் அவர் அந்நூலில் இருந்த தவறான சில வரலாற்றுத் தகவல்களை அப்படியே தமது நூலிலும் உண்மைத் தகவல்போலத் தருகிறார். எடுத்துக்காட்டாக, பாரிசில் உள்ள புனித சுல்ப்பீஸ் கோவில்பற்றிய தகவல்கள் தவறாகத் தரப்படுவதைக் குறிப்பிடலாம்.[6]"சீயோன் மடம்" என்னும் நிறுவனம் கற்பனையே என்றும் அதற்கும் சுல்ப்பீஸ் கோவிலுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் ஒரு அறிவிப்புப் பலகை அக்கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. டான் பரவுனின் புனைகதையை வாசித்த பலர் அதில் வரும் தகவல்களை உண்மையென நம்பி, பாரிசில் போய் அது தொடர்பான இடங்களைத் தேடியதைத் தொடர்ந்து மேற்கூறிய அறிவிப்புப் பலகை வைக்கவேண்டியதாயிற்று.
  • கலை வரலாற்றாசிரியர்களுள் மிகப் பெரும்பான்மையோர் கூறுவது: இறுதி இராவுணவு ஓவியங்களில் நற்செய்தி நூல்களைப் பின்பற்றி, இயேசுவும் அவருடைய பன்னிரு சீடர்களும் உணவருந்துவதாகச் சித்தரிப்பதே மரபு. லியொனார்டோவின் ஓவியத்தில் இயேசு உட்பட பதின்மூன்று பேர் மட்டுமே உள்ளனர். ஆகவே, பன்னிரு சீடரும் இயேசுவோடு இருந்தால் மகதலா மரியா அங்கே இருந்திருக்க முடியாது. டான் பிரவுன் (த டெம்ப்ளார் ரெவலேஷன் நூலிலிருந்து எடுத்த தகவல்படி) கூறுவது உண்மையானால் பன்னிரு சீடர்களுள் ஒருவர் இராவுணவின்போது இயேசுவோடு இருக்கவில்லை என்றாகும். ஆனால் இது நற்செய்தி நூல்களுக்கும் கிறித்தவ மரபுக்கும் மாறுபட்ட செய்தியாகும். எனவே, டான் பிரவுனின் கருத்து ஏற்கப்பட முடியாதது.
  • டான் பிரவுன் தமது புனைகதையில் கூறுவது: லியொனார்டோவின் ஓவியத்தில் சீமோன் பேதுருவுக்கு முன்னால், ஒரு கை கத்தியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கையின் உடைமையாளர் யார் என்று ஓவியத்திலிருந்து தெரியவில்லை. எனவே அது ஓவியத்தில் காட்டப்படாமல், இரகசியமாக மறைத்துவைக்கப்பட்ட ஒருவரின் கைதான்.

இதற்கு, கலை வரலாற்றாசிரியகள் தரும் விளக்கம்: லியோனார்டோவின்.ஓவியத்தின்.தெளிவான பிரதிகளைப் பார்க்கும்போது, கத்தியைப் பிடித்திருக்கின்ற கை பேதுருவின் கைதான் என்று ஐயமற நிறுவ முடியும். அவர் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, உள்ளங்கை தெரியுமாறு இருக்கின்றார். அக்கையானது பர்த்தலமேயுவை நோக்கி இருக்கின்றது. பர்த்தலமேயு கத்தியால் உயிருடன் தோலுரிக்கப்பட்டார் என்னும் மரபுச் செய்தியைக் குறிக்கும் விதத்தில் இதை லியொனார்டோ சேர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இயேசுவைக் கைதுசெய்ய வந்த ஒருவரைப் பேதுரு வாளால் தாக்கிய செய்தி நற்செய்தியில் உள்ளது: "சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார்" (யோவான் 18:10). இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் விதத்தில் லியொனார்டோ பேதுருவின் கையில் கத்தியை வைத்து ஓவியம் வரைந்திருக்கலாம். இப்பொருள் குறித்து விரிவான .ஆய்வு.உள்ளது. அதன்படி, கத்தியைப் பிடித்திருக்கும் கை பேதுருவுடையதே.[7]

  • டான் பிரவுன், இயேசு அணிந்திருக்கும் ஆடை போலவே அவர் அருகே இருப்பவரும் அணிந்திருக்கிறார் என்கிறார். அது உண்மையென்றால் இயேசுவைப் போலவே அவர் அருகே இருப்பவரும் ஓர் ஆண் என்று முடிவுசெய்ய வேண்டும்.[8]
  • லியொனார்டோ இராவுணவு ஓவியத்தை வரைந்த அதே காலத்தில் கஸ்தாஞ்ஞோ (Castagno), தொமேனிக்கோ கிர்லாண்டாயோ (Domenico Ghirlandaio) போன்ற ஓவியர்களும் இராவுணவுக் காட்சியை வரைந்தனர் (ஆண்டு: 1447; 1480). அவர்களும் வேறு எத்தனையோ ஓவியர்களும் இயேசுவின் வலப்புறத்தில் யோவான் திருத்தூதரை அமர்த்தியிருக்கின்றனர். யோவான் இளைஞராக, பெண்தோற்றம் கொண்டவராக, நீண்ட முடியுடையவராகக் காட்டப்படுகிறார்.[9] யோவான் மற்றெல்லாத் திருத்தூதர்களை விடவும் வயதில் இளையவர்; இயேசுவுக்கு இறுதிவரை விசுவாசம்.உடையவராக இருந்து, சிலுவை அடியில் நின்றவர்; "இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, 'ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?' என்று கேட்டவர்" (யோவான் 21:20) என்னும் தகவலை யோவான் நற்செய்தி மிகத் தெளிவாகவே தருகிறது.

டான் பிரவுன் தரும் விளக்கம்பற்றிய விமர்சனம்

இறுதி இராவுணவு ஓவியம். பகுதிப் பார்வை: பேதுரு, யூதாசு, யோவான்

லியொனார்டோ ஓவியத்திற்கு டான் பிரவுன் எழுதிய "த டா வின்சி கோட்" என்னும் புனைகதை தருகின்ற விளக்கம் கற்பனையே தவிர, அதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்பது கலை வரலாற்றாசிரியர்களின் முடிவு.[10]

மேலும், ஞானக் கொள்கை என்னும் தொடக்க காலக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான நூல்கள் இயேசு பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் துல்லியமாகத் தருகின்றன என்னும் முற்கோள் (assumption, premise) டான் பிரவுனின் நாவலின் அடிப்படையாக உள்ளது. அந்த அடிப்படையை வரலாற்றாசிரியர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

கிறித்தவ சபைகள் ஏற்கின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நற்செய்திகளில் இயேசு பற்றி வருகின்ற தகவல்களின் அடிப்படையில்தான் லியொனார்டோ இறுதி இராவுணவு என்னும் எழில்மிகு ஓவியத்தை வரைந்தார் என்னும் கருத்து மிகப் பெரும்பான்மையான கலை வரலாற்றாசிரியர்களால் ஏற்கப்பட்டுள்ளது.[11]

மேற்கோள்கள்

  1. டா வின்சி வரைந்த "இறுதி இராவுணவு" ஓவியம்
  2. லியொனார்டோ ஓவியத்தின் பிரதி
  3. "வரலாற்று உண்மையும் புனைவும்". Archived from the original on 2011-10-26. Retrieved 2011-10-19.
  4. இரகசியத் திட்ட எடுகோள்
  5. த டெம்ப்ளார் ரெவலேஷன்
  6. புனித சுல்ப்பீஸ் பற்றிய தவறான தகவல்கள்
  7. P.B. Barcilon and P.C. Marinin, Leonardo: The Last Supper, University of Chicago Press, 1999, p.19]
  8. "த டாவின்சி கோட் நாவலில் உண்மை". Archived from the original on 2011-11-08. Retrieved 2011-10-19.
  9. Anwender (2006-04-14). "St. John at the Last Supper". Home.arcor.de. Archived from the original on 2006-04-22. Retrieved 2011-10-19.
  10. "கலை வரலாற்றாசிரியர் தரும் சான்று பற்றிய இணையத்தளம்". Archived from the original on 2012-11-13. Retrieved 2012-12-08.
  11. "டான் பிரவுன் விளக்கத்தை மறுத்து, கலை வரலாற்றாசிரியர் தரும் சான்று". Archived from the original on 2012-11-13. Retrieved 2012-12-08.

மேல் ஆய்வுக்கு

  • Leo Steinberg, Leonardo’s Incessant Last Supper, New York: Zone Books, 2001.
  • Giorgio Vasari, Lives of the Painters, Sculptors and Architects, Trans. Gaston du C. de Vere, New York: Alfred A. Knopf, 1996.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya