டெர்ரி பாக்ஸ்
டெர்ரி பாக்ஸ் (Terry Fox) (July 28, 1958 – June 28, 1981) கனடாவைச் சேர்ந்த தடகள விளையாட்டாளர் மற்றும் புற்று நோய் ஆய்வு செயற்பாட்டாளர். இவர் புற்றுநோய் ஆய்வு மேம்பாட்டு விழிப்புணர்வுக்காகவும் அதற்கான பணம் திரட்டலுக்காகவும் 1980 இல் கனடாவில் ஒரு குறுக்குச்சாலை ஓட்டத்தில் ஈடுபட்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்டத் தனது வலதுகால் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த ஓட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் புற்றுநோய் அவரது நுரையீரல் வரை பரவி, ஓட்டத்தைத் தொடங்கி 143 நாட்களில் (5373 கிமீ) ஓட்டத்தை நிறுத்தவும், அவரது மரணத்துக்கும் காரணமானது. எனினும் அவரது ஓட்ட முயற்சி உலக முழுவதும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 1981 இல் நடந்த வருடாந்த டெர்ரி பாக்ஸ் ஓட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். தற்போது இந்த ஓட்டம் புற்றுநோய் ஆய்விற்காக நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய ஒருநாள் நன்கொடை திரட்டும் நிகழ்வாக உள்ளது. 500 மில்லியன் கனடிய டாலருக்கும் மேலான பணம் அவர் பெயரில் திரட்டப்பட்டுள்ளது. வாழ்க்கைக் குறிப்பு1958 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 28 ஆம் தேதியில் மானிட்டோபாவிலுள்ள வினிப்பெக்கில் பிறந்தார். இவரது பெற்றோர் ரோலண்ட் பாக்ஸ், பெட்டி பாக்ஸ் ஆவர். இவரது தந்தை கனடிய ரயில்வேயில் வேலை பார்த்தார்.[1] இவருக்கு ஒரு அண்ணன் (பிரட்), ஒரு இளைய சகோதரர் (டாரல்) மற்றுமொரு தங்கை (ஜூடித்) இருந்தனர்.[2] 1966 ஆம் ஆண்டு இவரது குடும்பம் பிரிட்டிசு கொலம்பியாவின் சுர்ரேவிற்கும் பின்னர் 1968 இல் போர்ட் கோகுவிட்லாமிற்கும் இடம் பெயர்ந்தது.[2] இவரது பெற்றோர், குறிப்பாக இவரது தாயார் தனது குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். எடுத்துக்கொண்ட எந்தவொரு செயலையும் முழு ஈடுபாட்டுடனும் விடாப்பிடியான அர்ப்பணிப்புடனும் செய்யும் பண்பை டெர்ரி பாக்ஸ் அவரது தாயாரிடமிருந்து பெற்றிருந்தார்.[3] டெர்ரி பாக்ஸ் என்றுமே தோற்றுப்போக விரும்பியதில்லை என்றும், ஒரு செயலில் வெற்றியடையும் வரை விடாது தொடர்ந்து முயல்வார் என்றும் அவரது தந்தை கூறியுள்ளார்.[4] சிறுவயதிலிருந்தே டெர்ரி பாக்சுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். காற்பந்தாட்டம், ரக்பி, பேஸ்பால் விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.[5] எனினும் அவருக்கு மிகவும் பிடித்தமானது கூடைப்பந்தாட்டமாக இருந்தது. தனது எட்டாவது கிரேடில் பள்ளியின் கூடைப்பந்தாட்டக் குழுவில் இடம் பிடித்தார். இவரது விளையாட்டு ஆசிரியர் இவர் தூர ஓட்டத்திற்குப் பொருத்தமானவர் என்றும் அதில் பங்கு கொள்ளும்படியும் ஆலோசனை கூறினார். டெர்ரிக்கு குறுக்குச் சாலை ஓட்டத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் தனது ஆசிரியர்மீது கொண்ட மரியாதையாலும் அவரை மகிழ்விக்கும் விதமாகவும் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.[6] பள்ளியின் கூடைப்பந்தாட்டக் குழுவில் பதில் ஆளாக மட்டும் இருந்தபோதிலும் கூடைப்பந்தாட்டம் விளையாடுவதையே விரும்பினார். கோடையில் நன்கு பயிற்சி செய்து ஒன்பதாவது கிரேடில் பள்ளியின் கூடைப்பந்தாட்டக் குழுவின் முறையான ஆட்டக்காரராகவும், பத்தாவது கிரேடில் தொடக்க ஆட்டக்காரராகவும் ஆனார்.[7] தனது 12 ஆவது கிரேடில் பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதைத் தனது உயிர் நண்பன் டக் ஆல்வர்டுடன் இணைந்து பெற்றார்.[2] பள்ளிப் படிப்பிற்குப்பின் தன் தாயின் விருப்பப்படி சைமன் பிரசெர் பல்கலைக்கழக்த்தில் விளையாட்டு ஆசிரியருக்கான படிப்பில் சேர்ந்தார்.[8] அங்கும் கூடைப்பந்தாட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.[2] புற்றுநோய் தாக்கம்1976 ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது வலது முழங்காலில் பட்ட காயத்துடன் தப்பினார். டிசம்பரில் அதே இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டாலும் கூடைப்பந்தாட்டப் பருவம் முடியும்வரை அவர் அந்த வலியைக் கவனிக்காது விட்டுவிட்டார்.[9] 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வலி அதிகமாகி மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு எலும்புப் புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டது.[2] விபத்தினால் பலவீனப்பட்டதால் தான் தனது முழங்கால் புற்றுநோய்க்குள்ளானதென அவர் நம்பினார். மருத்துவர்கள் அப்படியொரு தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறியும் அவர் தனது எண்ணத்தை விடவில்லை.[10] மருத்துவர்கள் அவரது காலைத் துண்டித்து வேண்டும்; பின்னர் வேதச்சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் இதில் அவர் பிழைத்தெழுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது எனவும் கூறினர். இதேபோன்ற பாதிப்புக்குள்ளான ஒருவர் பிழைத்தெழுவதற்கான வாய்ப்பு இரண்டாண்டுகளுக்கு முன்பு 15 சதவீதமே என்பதையும் இந்த முன்னேற்றம் புற்றுநோய்குறித்த ஆய்வினால் தான் சாத்தியமாயிற்று என்ற உண்மையும் அவரைச் சிந்திக்க வைத்தது.[11] கால் துண்டிக்கப்பட்ட பின்னர் மூன்று வாரங்கள் செயற்கைக் காலுடன் நடக்கத் தொடங்கினார்.[2] தன் தந்தையுடன் கோல்ஃப் விளையாடும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்தார்.[12] அவரது தன்னம்பிக்கைதான் அவர் வேகமாக நலமடையக் காரணம் என்று மருத்துவர்கள் கருதினர்.[13] அவருக்கு 16 மாதங்கள் வேதச்சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த காலத்தில் சக புற்றுநோயாளிகளின் வேதனையும் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.[14] தான் பிழைத்தது மருத்துவ முன்னேற்றத்தால் என்பதை உணர்ந்த பாக்ஸ், சிகிச்சை முடிந்தபின் தன் வாழ்க்கையைப் பிறருக்கு உதவும் வகையில் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.[15] 1977 ஆம் ஆண்டின் கோடையில், கனடாவின் சக்கர நாற்காலி விளையாட்டுச் சங்கத்துடன் பணிபுரிந்த ரிக் கேன்சென், பாக்சைத் தனது சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாட அழைத்தார்.[16] வேதச்சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போதும் பாக்ஸ் கொண்டிருந்த மனதிடம் கேன்செனைக் கவர்ந்தது.[2] இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலஅளவிலேயே அந்த விளையாட்டில் பயிற்சி பெற்று, எட்மன்டனில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் குழுவில் இடம் பெற்றார்.[17] அக்குழுவோடு சேர்ந்து மூன்று தேசிய பட்டங்கள் வென்றார்.[2] 1980 இல் வட அமெரிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட சங்கத்தால் சிறந்த விளையாட்டாளர் (an all-star) எனப் பாராட்டப்பட்டார்.[18] நம்பிக்கை நெடுந்தொலைவு ஓட்டம்![]() அறுவை சிகிச்சைக்கு முந்தின இரவு டெர்ரி பாக்ஸ், டிக் டிராம் என்பவரின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. புற்றுநோயின் பாதிப்பால் காலை இழந்த டிக் டிராம் நியூயார்க் நகரில் நெடுந்தொலைவு ஓட்டம் ஓடியவர்.[2] அக்கட்டுரையினால் உந்தப்பட்ட பாக்ஸ் 14 மாத பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது குடும்பத்தாரிடம் தான் ஒரு நெடுந்தொலைவு ஓட்டத்தில் பங்கெடுக்கப் போவதாக மட்டும் கூறிவிட்டு[1] தனக்குள் வேறொரு விரிவான திட்டத்துடன் இருந்தார். அவரது மருத்துவமனை அனுபவங்களிலிருந்து புற்றுநோய் ஆய்வுக்காகக் குறைவான பணமே செலவழிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டதால் கனடா முழுவதும் ஓடி புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். தொடக்கத்தில் இந்த எண்ணத்தைத் தனது நண்பன் டக்ளஸ் ஆல்வர்டிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டார்.[19] பயிற்சியின் தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்ட பாக்ஸ் விடாமுயற்சியுடன் வலியையும் தாண்டித் தனது செயற்கைக் காலுடன் ஓடப் பழகினார்.[20][21] 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பிரிட்டிசு கொலம்பியாவிலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் என்னுமிடத்தில் நடந்த நெடுந்தொலைவு ஓட்டத்தில் கலந்து கொண்டார். ஓட்டத்தில் கடைசி நபராக ஓடி முடித்தபோதும், சக போட்டியாளர்கள் அதனைக் கண்ணீருடனும் கைதட்டல்களுடனும் வரவேற்றனர்.[2] அந்த நெடுந்தொலைவு ஓட்டத்தைத் தொடர்ந்து அவர் தனது முழுமையான திட்டத்தைக் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.[22] அவரது தாயார் முதலில் ஒத்துக்கொள்ளவில்லையெனினும் பின்னர் தனது ஆதரவை அளித்தார். ’என்னிடம் நம்பிக்கை வைத்தவர்களில் நீங்கள்தான் முதலாமவரென நினைத்திருந்தேன், ஆனால் நீங்கள் அவ்வாறில்லை’ எனப் பாக்ஸ் கூறியதை நினைவுகூரும் அவரது தாய், அவருக்கு முழுமையாக ஆதரவைத் தராமல் போனோமேயெனப் பிறகு வருந்தினார்.[23] தொடக்கத்தில் 1 மில்லியன் டாலர்கள் திரட்டும் எண்ணம் கொண்டிருந்த பாக்ஸ், பின்னர் 10 மில்லியன் டாலர்கள் என்றும் இறுதியில் 24000 மில்லியன் மக்கட்தொகை கொண்ட கனடாவில் ஒவ்வொருவருக்கும் $1 எனும் குறிக்கோளையும் கொண்டார்.[23][24] முன்னேற்பாடு1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 15 ஆம் தேதியன்று கனடியன் கான்சர் சொசைடிக்குத் தனது நோக்கத்தையும் திட்டத்தையும் விவரித்து உதவும்படிக் கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தான் நினைத்ததைக் கண்டிப்பாகத் தன்னால் சாதிக்க முடியும் எனவும் ஓட முடியாமல் போனாலுங்கூட தவழ்ந்தாவது கடைசி மைல்களைக் கடப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். கான்சர் சொசைடிக்கு அவர்மேல் அவ்வளவாக நம்பிக்கை ஏற்படாவிட்டாலும், தேவையான புரவலர்களையும் ஓட்டத்தில் பங்குகொள்ளும் நிலையில் அவரது உடல்நிலை உள்ளது என்பதற்கான மருத்துவச் சான்றிதழையும் பெற்றபின் தங்களது ஆதரவைத் தருவதாகக் கூறினர். இதயத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே தனது ஓட்டத்தை நிறுத்திவிடுவேன் என்ற உறுதிமொழியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட பின்னர், மருத்துவர்கள் அவருக்குச் ஓட்டத்தில் பங்கேற்பதற்கானச் சான்றிதழை வழங்கினர்.[25] வாகனம், ஓடுவதற்கான சிறப்புக் காலணி, பிற செலவுகளுக்கான பணம் ஆகியவற்றுக்காக அவர் பல நிறுவனங்களுக்கு நன்கொடை கேட்டுக் கடிதம் எழுதினார்.[26] ஃபோர்டு மோட்டார் நிறுவனம் வாகனமும், இம்பீரியல் ஆயில் நிறுவனம் எரிபொருளும், அடிடாஸ் நிறுவனம் ஓட்டக் காலணியும் நன்கொடையாக அளித்தனர்.[3][27] தனது ஓட்டத்தினால் புற்றுநோய் ஆய்விற்கு மட்டுமே பலன்கிட்ட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததால், விளம்பரங்களுக்காக உதவியளிக்க முன்வந்த நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள பாக்ஸ் மறுத்துவிட்டார்.[3] கனடாவின் குறுக்கே பயணம்![]() 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று பாக்சின் நம்பிக்கை நெடுந்தொலைவு ஓட்டம் தொடங்கியது. நியூஃபவுண்ட்லேண்டின் செயிண்ட் ஜான்சுக்கு அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் தனது வலதுகாலை நனைத்த பாக்ஸ், இரண்டு பெரிய புட்டிகளில் அட்லாண்டிக் பெருங்கடல் நீரை நிரப்பித் தன்னுடன் எடுத்துக் கொண்டார். தனது ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துப் பிரிட்டிசு கொலம்பியாவின் விக்டோரியாவை அடைந்ததும், ஒரு புட்டியைத் தனது ஓட்டத்தின் நினைவாக வைத்துக் கொள்ளவும் மற்றொன்றின் நீரைப் பசிபிக் பெருங்கடலில் ஊற்ற விடவும் எண்ணியிருந்தார்.[24] பாக்சின் நண்பர் டக்ளஸ் ஆல்வர்டு பயண வாகனத்தை ஓட்டியதோடு மட்டுமில்லாது அவர்களுக்குத் தேவையான உணவையும் சமைத்தார்[27] ஓட்டத்தின் துவக்க நாட்களில் வேகமான காற்றையும் கனமழையையும் பனிப்புயல்களையும் பாக்ஸ் எதிர்கொள்ள நேர்ந்தது.[1] துவக்கத்தில் அவருக்கு அவ்வளவாக மக்களிடமிருந்து வரவேற்புக் கிடைக்காததால் மனந்தளர்ந்தாலும், நியூபவுண்ட்லேண்டின் போர்ட் ஆக்ஸ் பாஸ்க் சென்றதும் அங்குள்ள 10,000 மக்கள், $10,000 க்கும் மேல் நன்கொடையளித்தது அவருக்கு உற்சாகத்தை அளித்தது.[27] ஓட்டத்தின்போது சந்தித்த மக்களிடன் கோபத்தையும் விரக்தியையும் காட்டினார். நண்பர் ஆல்வர்டுடன் அடிக்கடி சண்டையிட்டு, நோவா ஸ்கோட்டியாவை அடைந்தபோது இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. இதனால் பாக்சின் 17 வயதான சகோதரர் டேரல் அவர்களுக்கிடையே இடையாளாக இருக்க நேர்ந்தது.[23] ஜூன் 10 ஆம் தேதி மேரிடைம்சிலிருந்து கிளம்பிய அவர்கள், கியூபெக்கை அடைந்ததும் பிரெஞ்சு மொழி பேசத் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டனர்.[28] பிற வாகன ஓட்டுனர்கள் அவரைச் சாலையை விட்டிறங்கிச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர்.[29] ஜூன் 22 ஆம் தேதி மொண்டிரியலை அடைந்த பாக்ஸ் தனது 8000 கிமீ தூர மொத்தப் பயணத்தில் மூன்றிலொரு பங்கைக் கடந்திருந்தார். அதே சமயம் $200,000 நன்கொடையாகத் திரட்டியிருந்தார்.[20] அந்தச் சமயத்தில்தான் இவரது ஓட்டம், ஃபோர் சீசன்ஸ் உணவு மற்றும் பொழுதுபோக்கு விடுதியின் நிறுவனர் இசாடோர் ஷார்ப்பின் கவனிப்புக்கு உள்ளானது. இசாடோர் ஷார்ப்பின் மகன் 1978 ஆம் ஆண்டு புற்றுநோயால் (melanoma) இறந்துவிட்டார்.[30] நல்லதொரு நோக்கத்திற்காகத் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது ஓட்டப் பயணம் மேற்கொண்ட பாக்சுக்கும் அவர் குழுவிற்கும் அவர்களின் ஓட்டப்பாதையில் அமைந்திருந்த தனது உணவு விடுதிகளில் இலவசமாக உணவும் தங்குமிடமும் அளித்தார் ஷார்ப். மிகக் குறைவாகவே மக்கள் நன்கொடை அளிக்க முன்வந்ததால் மனம் தளர்ந்திருந்த பாக்சுக்கு ஒவ்வொரு மைலுக்கும் $2 தான் தருவதாகக் கூறிய ஷார்ப், வேறு 1000 நிறுவனங்களும் அவ்வாறு தருவதற்கு ஏற்பாடு செய்தார்.[31] ஷார்ப்பின் இச்செயல் பாக்சுக்குத் தன் ஓட்டத்தைத் தொடர உற்சாகமளித்தது. ![]() ஜூன் மாதம் கடைசி சனிக்கிழமையன்று பாக்ஸ், ஒன்ராறியோவின் ஹாக்ஸ்பரி நகரை அடைந்தார். அவ்வூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் வரிசையாக நின்று அவரை உற்சாகப்படுத்த, ஒன்ராறியோ மாகாண காவற்துறையினர் அந்நகரைக் கடக்கும்வரை அவருக்கு வழித்துணைப் பாதுகாப்புத் தந்தனர்.[32] கோடை வெயில் வாட்டியபோதும் நாளொன்றுக்கு 26 மைல் எனத் தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்.[28] ஒட்டாவா சென்றடைந்த பாக்ஸ், கனடாவின் ஆளுநர் எட்வர்டு ஸ்க்ரெயெரையும் பிரதம மந்திரி "பியர் ட்ரூடீயையும்" சந்தித்தார். மேலும் அந்நகரில் நடைபெற்ற பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் மரியாதைக்குரிய விருந்தினராகக் கலந்து கொண்டார்.[32] டொரண்டோவில் 10,000 மக்கள் பாக்சைச் சந்திந்தனர். அங்குள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் அவர் கௌரவிக்கப்பட்டார். சதுக்கத்தை நோக்கிப் பாக்ஸ் ஓடியபோது அவருடன் சேர்ந்து பலர் ஓடினர். அவ்வாறு ஓடியவர்களில் புகழ்பெற்ற தேசிய ஹாக்கி வீரர் "டாரில் சிட்லெரும்" ஒருவர். அந்த ஒரு நாளில் மட்டும் கான்சர் சொசைடிக்குக் கிடைத்த நன்கொடை $100,000 ஆகும்.[2] தெற்கு ஒன்ராறியோவுக்குள் தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார். அங்கு அவரைச் சந்தித்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் "பாபி ஓர்", 25,000 டாலருக்கான காசோலையை அளித்தார். ஓரைச் சந்தித்திதைத் தனது பயணத்தின் சிறந்த நிகழ்வாகப் பாக்ஸ் கருதினார்[2] பாக்சின் புகழ் பரவியதும் கான்சர் சொசைடி அவரைப் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் சொற்பொழிவாற்றவும் ஏற்பாடுகள் செய்தது.[33] நிதி திரட்டக் கூடிய எந்தவொரு நிகழ்ச்சியானாலும் அது தனது பாதையிலிருந்து எவ்வளவு விலகி நடைபெறுவதாக இருந்தாலும் பாக்ஸ் ஒத்துக்கொண்டார்.[34] ஊடகங்கள் அவரது சொந்த விஷயங்களைப் பற்றித் தவறாகப் பரப்பியது அவருக்கு வருத்தத்தை அளித்தது.[35][36] தினந்தோறும் நெடுந்தொலைவு ஓடுவது அவரது உடல்நிலையைப் பாதிக்கத் தொடங்கியது. கான்சர் சொசைடியின் வேண்டுகோளின்படி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மொண்ட்ரியாலில் தங்கிய நாட்களைத் தவிர அவர் வேறெந்த நாட்களிலும் (தனது 22 ஆவது பிறந்த நாள் உட்பட) ஓட்டத்தை நிறுத்தவே இல்லை.[37] அடிக்கடி அவரது பாதிக்கப்பட்ட வலதுகாலில் வலியும் வீக்கமும் ஏற்பட்டது.[38] மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி பலர் கேட்டுக் கொண்டதையும் புறக்கணித்து விட்டார்.[39] ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில் ஓட ஆரம்பிக்கும் முன்னரே தான் களைப்படைந்திருப்பதை உணர ஆரம்பித்தார்.[40] செப்டம்பர் 1 ஆம் தேதி தண்டர் பே -க்கு வெளியில் நெஞ்சில் ஏற்பட்ட வலியாலும் விடாத இருமலாலும் சிறிது நேரம் தனது ஓட்டத்தை நிறுத்தினார். மக்கள் கூட்டம் ஆரவாரமாக உற்சாகப்படுதியதால் ஓட்டத்தை நிறுத்தமுடியாமல் தொடர்ந்து ஓடினார்.[41] சில மைல்களுக்குப் பின் நெஞ்சு வலியும் மூச்சுத் திணறலும் தொடர்ந்ததால் மருத்துவமனைக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி ஆல்வர்டிடம் கூறினார். தனது கடைசி கிமீ தூரத்தை ஓடியிருக்கிறோம் என்ற அச்சம் அவருள்ளே எழுந்தது.[42] அடுத்த நாள் செய்தியாளர்கள் கூட்டத்தில், தனக்குப் புற்றுநோய் நுரையீரல் வரை பரவி விட்டதால் ஓட்டத்தை 143 நாட்களில் (5343 கிமீ) நிறுத்த வேண்டியதாயிற்று என்பதை வருத்த்ததுடன் தெரிவித்தார்.[43] அவர் சார்பில் ஓடி, ஓட்டத்தை முடிக்க முன்வந்தவர்களையும் மறுத்து விட்டார்.[2] நாட்டு மக்கள் தந்த ஆதரவு![]() தனது ஓட்டத்தை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானபோது பாக்ஸ் திரட்டியிருந்த தொகை $1.7 மில்லியனாகும். கனடா மக்கள் புற்றுநோயின் விளைவுகளைப் புரிந்து கொண்டார்கள் என்பதைப் உணர்ந்த பாக்ஸ், கண்டிப்பாக மக்கள் தாராள மனதுடன் நன்கொடை அளிப்பார்களென நம்பினார்.[44] அவர் ஓட்டத்தை நிறுத்தி ஒரு வாரத்துக்குப் பின் பாக்ஸ் மற்றும் கேன்சர் சொசைடிக்கு ஆதரவாக, தொலைக்காட்சியில் (CTV), நாடுதழுவிய டெலித்தான் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.[45] கனடா மற்றும் பன்னாட்டுப் பிரபலங்களின் ஆதரவுடன் 5 மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியால் $10.5 மில்லியன் நன்கொடை கிடைத்தது.[2] இதில் பிரிட்டிசு கொலம்பியா அரசு மற்றும் ஒன்ராறியோ அரசு இரண்டும் ஒவ்வொன்றும் அளித்த $1 மில்லியனும் அடங்கும். இத்தொகையை, பிரிட்டிசு கொலம்பியா அரசு பாக்சின் பெயரில் ஒரு புதிய புற்றுநோய் ஆய்வகம் நிறுவவும், ஒன்ராறியோ அரசு ஒன்ராறியோ புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வு நிறுவனத்துக்கு அறக்கொடையாகவும் அளித்தன.[46] குளிர்காலம் முழுவதும் நன்கொடைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அடுத்து வந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் $23 மில்லியனுக்கும் மேல் சேர்ந்திருந்தது.[47] உலகம் முழுவதிலிருந்தும் ஆதரவு தெரிவித்து பாக்சிற்கு கடிதங்கள் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் போர்ட் கோகுவிட்லாமில் மற்ற அனைவருக்கும் வரும் கடிதங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமான கடிதங்கள் பாக்சுக்கு வந்து குவிந்தன.[48] "டெர்ரி பாக்ஸ், கனடா" என்ற முகவரி இருந்தாலே போதும், அந்த அஞ்சல் எளிதாக அவரைச் சென்றடையக் கூடிய அளவுக்கு அவர் புகழ் கூடியது[49] 1980 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பாக்சிற்கு "கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் கனடா" என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டது. இம்மரியாதையைப் பெற்றவர்களிலேயே பாக்ஸ் தான் இளையவர் என்பது சிறப்பு.[50][51] பிரிட்டிசு கொலம்பியாவின் லெப்டினன்ட் கவர்னரால் அம்மாநிலத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி டாக்வுட் விருதும்[52], 1980 ஆம் ஆண்டின் தேசத்தின் முதல் விளையாட்டு வீரர் என்ற தரத்தைத் தரும் லொ மார்ஷ் விருதும்[53] அளிக்கப்பட்டது. கனடாவின் ஹால் ஆஃப் ஃபேம், ஒரு நிரந்தர காட்சியகத்தை ஏற்படுத்தியது.[54] கனடாவின் 1980 ஆம் ஆண்டின் நியூஸ்மேக்கர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது பாக்சின் நெடுந்தொலைவு ஓட்டத்துக்கு அந்நாட்டு மக்கள் அளித்த ஆதரவை "கனடாவின் வரலாற்றிலேயே உணர்ச்சிமயமான, தாராள சிந்தனையுடனான சக்தி வாய்ந்த வெளிப்பாடுகளுள் ஒன்று" என ஒட்டாவா சிட்டிசன், வர்ணித்தது.[55] மரணம்தொடர்ந்து வந்த மாதங்களில் பாக்சிற்குப் பலமுறை வேதச்சிகிச்சை அளிக்கப்பட்டாலும் புற்றுநோய் பரவிக் கொண்டே வந்தது.[56] அவரது நிலைமை மோசமாக மோசமாக, கனடா மக்கள் ஏதாவது அதிசியம் நடந்து அவர் உயிர்பிழைத்து விடமாட்டாரா என்று எதிர்பார்த்தனர். போப் இரண்டாம் ஜான் பால் பாக்சுக்காகத் தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருப்பதாகக் கூறி, தந்தி அனுப்பினார்.[57] எலும்புப் புற்றுநோய்க்கு எவ்வித பலனளிக்கும் என்று தெரியாதநிலையிலும் மருத்துவர்கள் அவருக்கு இண்ட்டர்ஃபெரான் சிகிச்சை அளித்தார்கள்.[58] முதலில் அவருக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டாலும்.[59] சிறிது ஓய்வுக்குப் பின் மீண்டும் தொடரப்பட்டது.[60] 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 தேதியில் மீண்டும் இதயப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாக்ஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டார்.[61] ஆழ்மயக்கத்தில் வீழ்ந்த பாக்ஸ், 1981 ஆம் ஆண்டு ஜூன் 28 இல் தன் குடும்பத்தினர் சுற்றியிருக்க, மரணமடைந்தார்.[62][63] கனடா அரசு அவரது மரணத்துக்குத் துக்கம் அனுசரிக்கும் விதமாக நாட்டுக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டது. பொதுவாக இந்த மரியாதை நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒன்றாகும்.[64] அவரது இறுதிச் சடங்கில் 40 உறவினர்களும் 200 வெளியாட்களும் பங்கேற்றனர்.[65] இந்நிகழ்ச்சி தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அவர் மரணத்துக்காகக் கனடா முழுவதும் நூற்றுக்கணக்கான இரங்கற் கூட்டங்கள் நடத்தப்பட்டன.[66] ஒட்டாவாவின் பார்லிமெண்ட் ஹில்லில் ஒரு பொது இரங்கற் கூட்டம் நடத்தப்பட்டது.[67] கான்சர் சொசைடிக்கும் நன்கொடை வந்து குவிந்தவண்ணம் இருந்தது.[68] தாக்கம்![]() பாக்ஸ் இன்னமும் கனடாவின் நாட்டுபுறக் கதைகளில் பிரபலமானவாராக உள்ளார். அவரது துணிவும் உறுதியும் நாட்டையே ஒன்றாக்கி, அனைத்து மக்களையும் அவரது ஓட்டத்திற்கு ஆதரவளிக்கச் செய்தது. அவரது நினைவு அந்நாட்டின் எல்லாப் பகுதியிலும் உள்ள மக்களைப் பெருமிதமடைய வைத்தது.[69] 1999 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு தேசியக் கருத்துக் கணிப்பு, பாக்சை கனடாவின் மிகச் சிறந்த நாயகன் என்றது.[70] ஒரு சாதாரண மனிதனாகப் பாக்ஸ் இந்த அருஞ்செயலைச் சாதித்ததால்தான், அவர் ஒரு பெரும் வீரராகக் கருதப்படுகிறார்.[71][72] தொலைநோக்குப் பார்வை, நினைத்ததைச் சாதிக்கும் விடாமுயற்சி, அனுபவமின்மையால் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவையே அவர் சிறந்த நாயகனாகக் கருதப்படுவதற்குக் காரணங்கள் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்,[71][73] இறக்கும் முன் பேட்டில் ஆஃப் மராத்தான் செய்தியை வழங்கிய வரலாற்று நாயகன் பிடிப்பிடெசுடன் (Phidippides) பாக்சை ஒப்பிடுகிறார், ஊடகத்துறையைச் சேர்ந்த சூக்-யின் லீ. மேலும் கனடா நாட்டுக்குரிய நற்பண்புகளான கருணை, ஈடுபாடு, விடாமுயற்சி ஆகியவற்றின் உருவகமாகப் பாக்ஸ் விளங்கினார் என்றும், மறக்கவே முடியாத ஒரு நபராக உருவான பாக்ஸ், வழக்கமான பிரபலங்களுக்குரிய கட்டங்களுக்குள் மாட்டிக் கொள்ளவில்லை என்றும் லீ கூறுகிறார்.[74] பாக்ஸ் அனைவராலும் போற்றப்படும் நாயகனாக வளர்ந்திருந்தாலும் வழக்கமான நாயகன்கள் போலல்லாமல், தன்னிடம் குறைகளும் கொண்டவராக இருந்தார்.[75] கனடியன் ஃபேமிலி ஃபிசிஷியன் இல் வெளியான இரங்கல் செய்தியொன்று, பாக்சின் மனிதாபிமானத்தைச் சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் தனக்குப் புற்றுநோய் என்றறிந்த போது அவருக்குள் எழுந்த கோபம், ஊடகங்களின் தவறான புரிதலும், தனிமனிதச் சுதந்திரக் குறுக்கீடும் அவரைக் கோபம் கொள்ளச் செய்தது போன்றவை, அவரைப் புனிதர் நிலைக்குக் கொண்டு செல்லாமல், அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் அவரது செயல்களைக் காட்டுவதையும் சுட்டியது.[71] மாற்றுத்திறன் குறித்த அணுகுமுறைதனது நிலமை குறித்து பாக்சிற்குத் திடமான கருத்து இருந்தது. அவர் தன்னைக் குறைபாடுள்ளவராக எண்ணவேயில்லை,[76] மற்றவர்கள் யாரும் தன்னைப் பார்த்துப் பரிதாபப்படுவதையும் அவர் விரும்பவில்லை. டொரண்டோ வானொலியில், ஒரு காலை இழந்த பின் தன் வாழ்க்கை மேலும் பலனுள்ளதாகவும் சவால்கள் மிக்கதாகவும் உள்ளதெனக் கூறினார்.[71] பாக்சின் சாதனை, கனடியர்களின் மனதில் மாற்றுத் திறனாளிகள்குறித்த எண்ணத்தை மாற்றி, அவர்களும் சமுதாயத்தில் எல்லோரையும் போல் வாழ வகைசெய்தது.[77][78] மேலும் மாற்றுத்திறனாளிகளின் மனதில் அவர்களின் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை வளர்த்தது.[78][79] ”பாக்சின் ஓட்டம், ஒருவரிடமுள்ள குறையைவிட அவரிடமுள்ள திறமையைக் காண வேண்டும் என்ற செய்தியைச் சமுதாயத்தின் முன் வைத்துள்ளது; குறையாகக் கருதப்பட்டது பெரிய வாய்ப்பாக மாறிவிட்டது; மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக் கண்ணோட்டம் மாறிவிட்டது; அவர்கள் பெருமிதத்துடன் நடக்கிறார்கள்” என ரிக் கான்சென் விமரிசித்தார்.[80] எதிர்மறையான விமரிசனங்களுக்கும் ஆளானார் பாக்ஸ்.[81][82] புற்றுந்நோய் ஆய்விற்காகப் பணம் திரட்டியதும் மனிதனால் சாதிக்க முடியும் எனக்காட்டியதும் சரிதான், ஆனால் இது, பல மாற்றுத்திறனாளிகளிடையே பாக்சைப் போன்று தாங்களும் எதையாவது பெரிதாகச் சாதிக்க வேண்டும் இல்லாவிட்டால் தாங்கள் வாழ்வில் தோற்றவர்கள் என்ற எண்ணத்தை விதைக்கிறதென நடிகர் ஆலன் டாய் குறைகூறினார்.[81] பாக்ஸ் குறித்த ஊடகங்களின் கருத்துருவாக்கங்களும் எதிர்மறை விமரிசனத்துள்ளாகின.[83][84] டெர்ரி பாக்ஸ் ஒட்டம்பாக்சுக்குத் துவக்கத்தில் ஆதரவு தந்தவர்களுள் ஒருவர் ஃபோர் சீசன்ஸ் விடுதிகளின் சொந்தக்காரர் இசாடோர் ஷார்ப். இவர் தனது மகனைப் புற்றுநோயால் இழந்தவர். பாக்சின் ஓட்டப்பாதையில் அமைந்திருந்த தனது விடுதிகளில் பாக்சுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் இலவசமாக உணவும் தங்குமிடமும் தந்து உதவியதோடு மட்டுமல்லாது $10,000 பணமும் நன்கொடை அளித்து வேறு 999 நிறுவனங்களும் நன்கொடையளிக்கச் செய்தார்.[2][85] ஆண்டுதோறும் பாக்சின் பெயரால் ஒரு நெடுந்தொலை ஓட்டத்தை நடத்தி நன்கொடை திரட்ட ஷார்ப் விரும்பினார். அதற்குச் சம்மதம் தெரிவித்த பாக்ஸ், அது ஒரு ஓட்டப் போட்டியாக அமையக்கூடாதென்றும் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களென இருக்கக் கூடாது, அனைவரும் நடப்பது, ஓடுவது, வாகனங்களில் செல்வதென தங்களால் முடிந்த வழிகளில் பங்குபெறக் கூடியதாக ஓட்டமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.[86] ஷார்ப்பின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. செப்டம்பரில் இந்த ஓட்டம் நடந்தால், வழக்கமாக ஏப்ரலில் நடைபெறும் தங்களது பரப்புரைகளுக்குக் கிடைக்கும் பலன் குறையலாமென கான்சர் சொசைடி நினைத்தது. பிற அறக்கட்டளைகள் மற்றுமொரு நிதி திரட்டலால் தங்களது நிதி திரட்டும் பணிகள் பாதிக்கப்படுமென எண்ணின.[87] ஆனால் ஷார்ப்பின் விடாமுயற்சியால் ஷார்ப், அவரது ஃபோர் சீசன்ஸ் விடுதிகள் மற்றும் பாக்சின் குடும்பம் இணைந்து 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 தேதியில் முதல் டெர்ரி பாக்ஸ் ஓட்டத்தை ஏற்பாடு செயதனர்.[86] 300,000 பேருக்கும் மேல் பங்கேற்ற முதல் டெர்ரி பாக்ஸ் ஓட்டத்தினால் $3.5 மில்லியன் நிதி திரட்டப்பட்டது[85] 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 இல் நடந்த இரண்டாவது டெர்ரி பாக்ஸ் ஓட்டத்தில் கனடாவின் பள்ளிகளுக்கும் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டது.[88] அதிலிருந்து தொடர்ந்த பள்ளிகளின் பங்கேற்பால், தேசிய பள்ளிகள் ஓட்ட நாள் உருவானது.[89] முதல் ஆறு ஆண்டுகளில் நடந்த ஓட்டங்களில் $20 மில்லியன்களுக்கும் மேலாகப் பணம் திரட்டப்பட்ட நிலையில்,[87] இந்த ஓட்டம் ஒரு பன்னாட்டு நிகழ்வாக உருவெடுத்தது. 1999 ஆம் ஆண்டு 60 நாடுகளில் டெர்ரி பாக்சின் ஓட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல். கிடைத்த நன்கொடையோ அந்த ஆண்டில் மட்டும் $15 மில்லியன் ஆகும்.[90] 25 ஆவது டெர்ரி பாக்ஸ் ஓட்டத்தின்போது 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். டெர்ரி பாக்ஸ் அறக்கட்டளை, கனடிய அறிவியலாளர்கள் புற்றுநோய்குறித்த பலவகையான ஆய்வுகளில் முன்னேற்றம் காண நிதியுதவி செய்தது.[91] புற்றுநோய் ஆய்விற்காக நடத்தப்படும் ஒரு நாள் நன்கொடை திரட்டல்களில் உலகிலேயே மிகப் பெரியது டெர்ரி பாக்ஸ் ஓட்டம்.[92] அவர் பெயரில் $500 மில்லியனுக்கும் மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.[93] 30 ஆவது டெர்ரி பாக்ஸ் ஓட்டம் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 தேதியில் நடைபெற்றது.[94] சிறப்புகள்![]() கனடாவில் பாக்சின் பெயரிடப்பட்டுள்ள இடங்கள்:[95]
ஒருவர் இறந்து பத்து வருடங்களுக்குள் அவரது நினவு அஞ்சல் தலை வெளியிடக் கூடாது எனும் வழக்கத்தையும் மீறிக் கனடாவின் அஞ்சல் துறை 1981 இல் அவர் நினவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.[104] பாக்சின் நம்பிக்கை நெடுந்தொலைவு ஓட்டத்தினால் மனம் நெகிழ்ந்துபோன பிரித்தானிய ராக் இசைக் கலைஞர் ராட் ஸ்டூவர்ட் 1981 ஆம் ஆண்டு தனது ஆல்பத்தில் (Tonight I'm Yours) ஒரு பாட்டை (Never Give Up on a Dream) பாக்சுக்காக அர்ப்பணித்தார். மேலும் அவர் தனது 1981-1982 கனடா சுற்றுப்பயணத்திற்கு, "டெர்ரி பாக்ஸ் சுற்றுப்பயணம்" எனப் பெயரிட்டார்.[105] மாற்றுத்திறனாளிகள்ள் வாழ்க்கைச் சீரமைப்பில் பங்களித்த தனிநபர்களைச் சிறப்பிக்கும் விதமாக 1994 இல் "டெர்ரி பாக்ஸ் ஹால் ஆப் ஃபேம்" அமைக்கப்பட்டது[99][106] 25 ஆவது ஆண்டு நடந்த பாக்சின் நம்பிக்கை ஓட்டத்தின் நினைவாக ஒரு சிறப்பு கனடிய டாலர் நாணயம் வெளியிடப்பட்டது.[107] 2008 ஆம் ஆண்டு கனடா அரசால் டெர்ரி பாக்சிற்கு, கனடாவின் தேசிய வரலாற்று நபர் என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது.[108] 2010 இல் வான்கூவரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்சின் துவக்க விழாவில் ஒலிம்பிக் கொடியை ஏந்திச் செல்லும் 8 பேர்களில் ஒருவராகச் செல்லும் வாய்ப்பு பாக்சின் தாயாருக்குக் கிடைத்தது.[109] இந்த விளையாட்டின்போது சிரமங்களுக்கிடையிலும் மனஉறுதியும் பணிவும் காட்டிய விளையாட்டு வீரர்களுக்கு "டெர்ரி பாக்ஸ் விருது" வழங்கப்பட்டது.[110] பாக்சின் கதை தொலைக்காட்சித் திரைப்படமாகவும், திரைப்படமாகவும், ஆவணப் படமாகவும் எடுக்கப்பட்டது.[111][112][113][114][115][116] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia