பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூவிருந்தவல்லி என்ற பூந்தமல்லி ஊரில் அமைந்துள்ளது. மூலவர்: வரதராஜ பெருமாள். தாயார்: புட்பவல்லி. பூவிலிருந்து அவதரித்த வல்லி என்று தாயாரின் திருநாமத்தாலேயே 'பூவிருந்தவல்லி' என்று இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இதுவே மருவி பூந்தமல்லி என அழைக்கப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. திருவிழாபுஷ்பபுரி என்றும் அழைக்கப்படுகிற பூவிருந்தவல்லியில் கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு வரதராஜ பெருமாள். இந்தக் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறும். பிரம்மோற்சவத்தில், வரதராஜ பெருமாள் தினமும் வீதியுலா எழுந்தருள்வார். (இத்தலத்துப் பெருமாளுக்கு ஆலவட்ட(விசிறி)க் கைங்கர்யம் செய்தவர் திருக்கச்சி நம்பிகள். இவர், உடையவர் சிறீமத் இராமாநுஜரின் குரு. திருக்கச்சி நம்பிகள் கி.பி. 1009-ஆம் ஆண்டு மாசி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தார்.) ஆனால், இந்த திவ்ய பிரம்மோற்சவத்தில் திருக்கச்சி நம்பிகளே பிரதானம். பத்து நாட்கள் உற்சவம் முழுவதும் நம்பிகள் மட்டுமே உற்சவராய் எழுந்தருள்வார். இந்த உற்சவத்திற்காக பந்தக்கால் நடும் வைபவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, சில நாட்களில் திருக்கச்சி நம்பிகள் ஆஸ்தானத்திலிருந்து மஞ்சத்திற்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். மறுநாள் உற்சவம் தொடங்கும். காலையில் ஒய்யாளி சேவையும், தொடர்ந்து சுவாமி மேனா திருவீதி புறப்பாடும் நடைபெறும். மாலையில் திருமஞ்சனமும், இரவு பத்தி உலாவும் நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யாளி வாகனம், சந்திர பிரபை வாகனம், சேஷ வாகனம், அம்ச வாகனம், குதிரை வாகனம், தங்கமுலாம் பூசிய மங்களகிரி வாகனம், யானை வாகனம் என நாளொரு வாகனத்தில் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருள்வார். திருக்கச்சி நம்பிகளின் திருநட்சத்திரத் தினமான மிருகசீரிஷம் அன்று சாற்றுமுறை உற்சவம் நடைபெறும். அதிகாலை மூலவருக்குத் திருமஞ்சனமும், பகலில் திருக்கைத்தல சேவையும், ஒய்யாளி சேவையும் நடைபெறும். மாலையில் சுவாமி தங்கப் பல்லக்கில் திருவீதி புறப்பாடும், இரவு திருக்கச்சி நம்பிகளுக்கு விசேட திருமஞ்சனமும் நடைபெறும். மங்களகிரி வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். அடுத்த நாள் காலை சாற்றுமுறை உற்சவம், திருப்பாவை சாற்றுமுறை, தீர்த்த விநியோகம் நடைபெறும். இக்கோயில் பெருமாளின் தலைக்குப் பின்புறம் சூரிய பகவான் அருள்வதால் இது சூரியத் தலமாகக் கருதப்படுகிறது.[1] மற்ற சன்னதிகள்திருப்பதி வெங்கடேசர், சிறீரங்கம் அரங்கநாதர், காஞ்சி வரதராஜ பெருமாள் சன்னதிகள் இங்கு உள்ளன. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடப்பது சிறப்பு.[2] அமைவிடம்திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி என்ற பூந்தமல்லி ஊரில் அமைந்துள்ள இக்கோயில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 47 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 13°03'04.1"N, 80°05'50.1"E (அதாவது, 13.051140°N, 80.097243°E). இக்கோயிலின் அருகிலுள்ள ஊர்கள் திருமழிசை, குமணன் சாவடி, கந்தன் சாவடி, வேலப்பன் சாவடி, திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், ஐயப்பன் தாங்கல், போரூர் ஆகியவை ஆகும். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்து சேவைகள் இக்கோயிலை, சென்னை, ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் என சாலை வழியாக, சென்னை மாவட்ட அனைத்து ஊர்களையும் இணைக்கின்றன. மேலும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளும், இக்கோயில் வழியில் புறநகர் பேருந்து சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சுமார் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இக்கோயில். கோயில் வரலாறுதிருமாலுக்கு விசிறி சேவை செய்ய விரும்பிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாகச் சொல்லி விட்டார். பின்னர், திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசரோ, தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாகக் கூறினார். அதன்பின் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார். பூந்தமல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளுக்கு விசிறி சேவை செய்து வந்தார். அதோடு பூந்தமல்லியில் நந்தவனம் அமைத்து, மலர்களைத் தொடுத்து, மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் செல்வார். அவரது தள்ளாத வயதைக் கருத்தில் கொண்ட வரதராஜ பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து திருக்கச்சி நம்பிகளுக்குக் காட்சி தந்தார். அவர் காட்சி தந்த இடத்தில் தான் தற்போதைய ஆலயம் இருப்பதாக தல வரலாறு கூறுகிறது.[3] தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜ பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருவிழாசிறீமத் இராமானுசரின் அவதாரத் திருத்தலம் திருப்பெரும்புதூர். அங்கு அவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும் போது, பூந்தமல்லி வரதராஜ பெருமாள் ஆலயத்திலிருந்து மாலை, பரிவட்டம், பட்டு ஆகியவை கொண்டு செல்லப்படும். அதேபோல் இங்கு திருக்கச்சி நம்பிக்கு திருநட்சத்திர விழா நடக்கும் போது, அங்கிருந்து மாலை, பரிவட்டம், பட்டு முதலியவை கொண்டு வரப்படும். புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகின்றனர். இந்தத் தாயாருக்கு, வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, புஷ்ப யாகம் நடக்கிறது. அரங்கநாதர், வேங்கடேசர், வரதராஜ பெருமாள் மூவருக்கும் இக்கோயிலில் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடக்கும் போது, அவர்கள் மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருட சேவை காட்சி தருவர். மற்ற கோயில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும் நிலையில், பூந்தமல்லியில் மட்டும் தான் மூன்று கருட சேவைகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[4] கோயில் நேரங்கள்பக்தர்களுக்காக காலையில் 06.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலையில் 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். படத்தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia