மனித சடைப்புத்துத் தீ நுண்மம்
மனித சடைப்புத்துத் தீ நுண்மம் (HPV - human papillomavirus) என்பது மனிதரில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் ஆற்றலுள்ள சடைப்புத்து வகை பபில்லோமா குடும்பத்தை சேர்ந்த (papilloma family) தீ நுண்மங்கள் ஆகும். இவை பரவலாகக் காணப்படும் ஒரு தொற்றுயிரி வகை ஆகும். இவை தோலில் அல்லது சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் மேற்பரப்பில் இருக்கும் புறவணியிழையத்தில் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இவற்றில் 200 உக்கும் மேற்பட்ட தீ நுண்மங்கள் உள்ளன. அவற்றில் அநேகமானவை எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. சில பருக்கள் அல்லது பாலுண்ணிகளை ஏற்படுத்தும். ஏனையவை பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும்[1]. பெண்களில் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், குதப் புற்றுநோய், யோனிப் புற்றுநோய், யோனி இதழ் புற்றுநோய் போன்றவற்றையும், ஆண்களில் குதப் புற்றுநோய், ஆண்குறிப் புற்றுநோயையும் உருவாக்கும் தன்மையுள்ளன. இவற்றில் 30-40 தீ நுண்மங்கள் பாலுறவு மூலமே தொற்றுக்கு உட்படுகின்றன. இத் தீ நுண்மத்தில் இருக்கும் E6, E7 என அழைக்கப்படும் இரு புரதங்களே புற்றுநோய் உருவாக்கத்திற்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது[2]. கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணி இதுவாகவே கொள்ளப்படுகின்றது[3][4]. ஆனாலும் தற்போது தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மனித சடைப்புத்துத் தீ நுண்ம தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 70 % மான கருப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கும் இத் தீநுண்மத்தின் இரண்டு குலவகைகளுக்கு எதிராக மிகவும் திறம்பட செயல் புரிவதாக ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற இடங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது[5][6]. மேலும் தலை, கழுத்துப் பகுதியில் (வாய்க் குழி, மூக்குக் குழி, தொண்டை, குரல்வளை, உதடு போன்ற பகுதிகள்) ஏற்படும் புற்றுநோய்க்கும் (Head and Neck cancer) இந்த தீ நுண்மம் ஒரு காரணியாக இருப்பது அறியப்பட்டுள்ளது[7][8]. வாய்த் தொண்டைப் (Oropharynx) பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோய் இத் தீநுண்மத்தின் வகை 16, மற்றும் வகை 18 உடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் அறியப்பட்டுள்ளது[9]. இதயக் குழலிய நோய் உருவாவதற்கான சூழிடரை அதிகரிப்பதிலும் இந்த தீ நுண்மத்திற்குத் தொடர்பிருப்பதாக அண்மையில் வெளிவந்த ஆய்வொன்று கூறுகின்றது[10]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia