வ. தா. சதீசன்
வடசேரி தாமோதரன் சதீசன் (V. D. Satheesan)(பிறப்பு 31 மே 1964) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த கேரள மாநில இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் பரவூர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 15வது கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்படுகிறார்.[2][3] 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசு தலைவர் ரமேஷ் சென்னிதாலாவைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக கேரள சட்டப்பேரவையில் சதீசன் பதவியேற்றார். கேரளப் பிரதேச காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.[2][3] இளமையும் கல்வியும்சதீசன், எர்ணாகுளம் மாவட்டம் நெட்டூரில் 31 மே 1964-ல் கே. தாமோதர மேனன் மற்றும் வி. விலாசினி அம்மா ஆகியோருக்குப் மகனாகப் பிறந்தார்.[4] பனங்காடு உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், தேவாரத்தில் உள்ள தூய இருதய கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்.[5] இதன் பின்னர் இவர் கேரள சட்ட அகாதமியின் சட்டக் கல்லூரியில் இளநிலை சட்ட படிப்பினையும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பினையும் முடித்தார்.[6] சிறிது காலம் சதீசன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.[6] இவர் ஆர். இலட்சுமி பிரியாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு உன்னிமயா என்ற மகள் உள்ளார்.[7] அரசியல்சதீசன் 1986-1987 காலகட்டத்தில் மகாத்மா காந்தி பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவராக இருந்தார். தேசிய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[8] சதீசன் 1996ஆம் ஆண்டு கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளர் பி.ராஜூவிடம் தோல்வியடைந்ததன் மூலம் அரசியலில் அறிமுகமானார். பின்னர் சதீசன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது 2001ஆம் ஆண்டு முதன்முதலில் கேரள சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில், கே. எம். தினகரனை எதிர்த்து பறவூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கேரள சட்டமன்றத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பன்னியன் இரவீந்திரனை 11349 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] 2016-ல், சதீசன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாரதா மோகனை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பறவூர் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] 12வது சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைமை கொறடாவாக பணியாற்றினார். 2021-ல், இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எம். டி. நிக்சனை 21,301 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பறவூர் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக மீண்டும் கேரள சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 22 மே 2021 அன்று, காங்கிரசு கட்சி, 15வது கேரள சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக சதீசனை அறிவித்தது.[13] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia