வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
வியட்நாம் கம்யூனிஸ்டுக் கட்சி (Communist Party of Vietnam) என்பது வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஒரேயொரு சட்டபூர்வ அரசியல் கட்சி ஆகும். இது 1930 இல் ஹோ சி மின் என்பவரால் நிறுவப்பட்டது, 1954 இல் வடக்கு வியட்நாமின் ஆளும் கட்சியானாது. பின்னர் 1975 இல் சைகோன் வீழ்ச்சியைத் தொடர்ந்து தெற்கு வியட்நாமிய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வியட்நாம் முழுவதுமாக ஆளும் கட்சியாக மாறியது. இது பெயரளவில் வியட்நாமிய தந்தைநாட்டு முன்னணியில் இருந்தாலும், இது ஒரு ஒற்றையாட்சி அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறது. அத்துடன் அரசு, இராணுவம் மற்றும் ஊடகங்கள் மீது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இக்கட்சியின் மேலாதிக்கம் தேசிய அரசியலமைப்பின் 4-ஆவது பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதுது. வியட்நாமிய மக்கள் பொதுவாக கம்யூனிசக் கட்சியை "கட்சி" (Đảng) அல்லது "நம் கட்சி" (Đảng ta) என்று குறிப்பிடுகின்றனர். உருசிய மார்க்சியப் புரட்சியாளர் விளாதிமிர் லெனினால் உருவாக்கப்பட்ட சனநாயக மத்தியத்துவக் கொள்கையின் அடிப்படையில் வியட்நாம் கம்யூனிசக் கட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதன் மிக உயர்ந்த நிறுவனம் கட்சியின் தேசிய காங்கிரசு ஆகும், இது மத்திய குழுவைத் தேர்ந்தெடுக்கிறது. கட்சிக் காங்கிரசுகளுக்கு இடையில் கட்சி விவகாரங்களில் மத்தியக் குழு மிக உயர்ந்த அமைப்பாகும். ஒரு கட்சி மாநாட்டிற்குப் பிறகு, மத்திய குழு பொலிட்பீரோ எனப்படும் அரசியல் குழுவையும் செயலகத்தையும் தேர்ந்தெடுத்து, கட்சியின் மிக உயர்ந்த அலுவலகமான பொதுச் செயலாளரை நியமிக்கிறது. மத்திய குழுவின் அமர்வுகளுக்கு இடையில், கட்சி விவகாரங்களில் பொலிட்பீரோ மிக உயர்ந்த அமைப்பாகும். இருப்பினும், மத்திய குழு அல்லது கட்சியின் தேசிய காங்கிரசால் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகளை செயல்படுத்த முடியும். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, 12வது பொலிட்பீரோவில் 19 உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி "சோசலிச-சார்ந்த சந்தைப் பொருளாதாரம்", 'ஹோ சி மின் சிந்தனை' ஆகிய கொள்கைகளை முன்னெடுக்கிறது. பனிப்போர்க் காலத்தில் சோவியத் ஒன்றியத்துடனும் அதன் நட்பு நாடுகளுடனும் இணைந்தது, 1986 ஆம் ஆண்டில் 'டோய் மோய்' எனப்படும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, வியட்நாமில் திட்டமிட்ட பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தியது. 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களிலும் கலப்புப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கட்சி அதன் ஏகபோக கருத்தியலையும் தார்மீக சட்டப்பூர்வத்தன்மையையும் இழந்துவிட்டதாக வாதிடப்பட்டது.[2] அண்மைய ஆண்டுகளில், கட்சி ஒரு குறிப்பிட்ட வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்தி விட்டது, மாறாக தொழில்முனைவோரை உள்ளடக்கிய "முழு மக்களின் நலன்களை" முன்னிறுத்தியது.[2] 2006-ஆம் ஆண்டில், கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டபோது, வகுப்புத் தடை முழுமையாக நீக்கப்பட்டது.[3] மார்க்சியம்-லெனினியத்தை வலியுறுத்தாமல், கட்சி வியட்நாமிய தேசியவாதம், வளர்ச்சிவாதம், அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளின் கருத்துக்கள், ஹோ சி மின்னின் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.[4] கம்யூனிஸ்ச, தொழிலாளர் கட்சிகளின் ஆண்டு பன்னாட்டுக் கூட்டத்தில் வியட்நாம் கம்யூனிசக் கட்சி பங்கேற்கிறது. மேற்கோள்கள்
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia