அக்கி அம்மை![]() அக்கி அம்மை (herpes zoster , அக்கிப்புடை அல்லது சோசுட்டர் அம்மை) மனிதர்களுக்குப் பரவும் ஓர் நோயாகும். இந்த நோய் சின்னம்மைக்குக் காரணமான அதே தீநுண்மத்தால் ஏற்படுகின்றது. உடல்வலி, சிரங்கு, கொப்புளங்கள் இதன் நோய் உணர்குறிகளாம்.[1] பொதுவாக இந்தச் சிரங்கு ஒரு பட்டையாக உடல் அல்லது முகத்தின் இடது புறத்திலோ வலது புறத்திலோ ஏற்படும்.[2] சொறிப்பட்டை தோன்றுவதற்கு இரண்டிலிருந்து நான்கு நாட்கள் முன்னதாகவே அவ்விடத்தில் சொறியுணர்ச்சி காணப்படும்.[2][3] சிலநேரங்களில் சுரம், தலைவலி, உடற்சோர்வு தோன்றும்.[2][4] பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களில் தானே குணமாகிவிடும்.[5] இருப்பினும் சிலருக்கு நரம்புவலி பல மாதங்களுக்கோ ஆண்டுகளுக்கோ தொடரலாம். இவ்வாறு நரம்புமுனை பாதிக்கப்பட்டால் அதற்கு தீர்வில்லை; வலிகுறைக்கும் மருந்துகளே தரப்படும்.[2] நோயெதிர்ப்பு ஆற்றல் குறைபாடுள்ளவர்களுக்கு இந்நோய்ச்சிரங்கு உடலெங்கும் தோன்றலாம்.[2] இந்நோய் கண்ணில் தொற்றினால், பார்வைக் குறைபாடு ஏற்படும்.[5][6] பொதுவான தகவல்கள்அக்கி அம்மை சின்னம்மையை விளைவிக்கும் அதே சோசுட்டர் தட்டம்மை தீநுண்மத்தால் (VZV), ஏற்படுகின்றது. இதன் நோயுணர்குறிகள் ஏற்கெனவே முடங்கியுள்ள தீநுண்மத்தை கொண்டுள்ள நரம்புகளில் தோன்றுகிறது. இது ஓர் தொற்றுநோய் அல்ல. ஆனால், அக்கி அம்மை நோயாளியின் சிரங்குடன் நேரடித் தொடர்பு மூலம் சின்னம்மை வரக்கூடும். அக்கி அம்மை நோயாளிகள் பெரும்பாலோர் முதியவர்களே. சில நேரங்களில் இளையோரையும் தாக்குகிறது; குறைபட்ட நோய் எதிர்ப்பாற்றல் முறைமை உள்ளவர்களுக்கும் இது வரக்கூடும். முதலில் தோற்பகுதியில் கூச்சமாகவும், பின்னர் அரிப்பாகவும் பின்னர் வலியாகவும் நோய்த்தாக்கம் உள்ளது. சிலநாட்களில் கொப்புளத்துடன் சிரங்காக மாறுகிறது. இவை முகம் அல்லது உடம்பில் தோன்றுகிறது. கொப்புளங்களில் நீர் நிறைந்திருக்கும். இந்தக் கொப்புளங்கள் சில நாட்களில் உலர்ந்து பல நாட்களில் காய்கிறது. இந்த சிரங்கு உடலின் ஒருபகுதியில் மட்டுமே இருக்கிறது; மற்ற இடங்களுக்குப் பரவுவதில்லை. அக்கியம்மை தீநுண்மம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடித் தொடர்பு மூலமே தொற்றுகிறது. இக்காரணத்தால், நோய் வந்தவருடன் சின்னம்மைக்கான நோயெதிர்ப்பு குறைந்தவர்கள், குழந்தைகள், கருவுற்ற மகளிர் நேரடித்தொடர்பு கொள்ளாதிருத்தல் அவசியம். கருவுற்ற நேரத்தில் சின்னம்மை தொற்றுவது பிறக்கவுள்ள மழலைக்கு மிகவும் ஆபத்தானது. ஏற்கெனவே சின்னம்மை வந்திருந்தால் அவருக்கு மீண்டும் மற்றவரிடமிருந்து சின்னம்மை தொற்றாது. ஆனால் அக்கி அம்மை நோயாளியைத் தொட்டால் அது அவரது முடங்கிய சின்னம்மை தீநுண்மத்தை உயிர்ப்பித்து அவருக்கு அக்கி அம்மை வரக்கூடும். நோய்த்தடுப்பும் சிகிச்சையும்அக்கி அம்மை தடுப்பு மருந்து இந்நோய் வரும் வாய்ப்பை 50 முதல் 90% வரை தடுக்கிறது.[2][7] தவிரவும் நரம்புமுனைப் பாதிப்பை ஏற்படுத்துவதையும் மீறி ஏற்பட்டால் அதன் தீவிரத்தைக் குறைக்கவும் செய்கிறது.[2] அக்கி அம்மை தொற்றியபின் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் நோய்க்காலத்தை குறைக்கவும் தீநுண்ம எதிர்ப்பு மருந்துகள் பயன் தருகின்றன; நோய் உணர்குறிகள் கண்ட 72 மணிகளுக்குள்ளாக இந்த மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.[8] ஆனால் இந்த மருந்துகள் நரம்புமுனை பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதில் பயன்தருவதாகத் தெரியவில்லை.[9][10] கடும்வலி ஏற்பட்டால் பாராசித்தமோல், அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், அல்லது அபினி மருந்துகள் உதவலாம்.[8] நோய்ப்பரவலும் வரலாறும்மூன்றில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் அக்கி அம்மை தொற்றுவதாக மதிப்பிடப்படுகிறது.[2]ஓராண்டில் உடல்நலம் நன்குள்ள 1000 பேருக்கு 1.2 முதல் 3.4 பேருக்கும் 65 அகவை நிறைந்தோரிடை 1000க்கு 3.9 -11.8 பேருக்கும் நோய் புதியதாகத் தோன்றுவதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.[4] 85 அகவை நிறைந்தோரிடை குறைந்தது பாதி பேருக்காவது ஒருமுறை நோய் கண்டிருக்கலாம்.[2][11] இந்த நோயைக் குறித்த தகவல்கள் பண்டைக்காலத்திலும் காணப்படுகின்றன.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia