அய்யப்பனும் கோஷியும்
அய்யப்பனும் கோசியும் (Ayyappanum Koshiyum) என்பது 2020ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தை இயக்குநர் சச்சி எழுதி இயக்கியிருந்தார் (இது இயக்குநராக இவரது கடைசி படம்). இரஞ்சித் மற்றும் பி. எம். சசிதரன் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். அய்யப்பனும் கோஷியும் 7 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 2020ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாக இருந்தது. உலகளவில் ₹52 கோடியை வசூலித்தது. 68வது தேசிய திரைப்பட விருதுகளில் சச்சிக்கு சிறந்த இயக்கம், பிஜு மேனனுக்கு சிறந்த துணை நடிகர், நஞ்சியம்மாவிற்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகர் மற்றும் மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் மற்றும் ராஜசேகர் ஆகியோருக்கு சிறந்த சண்டைப் பயிற்சி உள்ளிட்ட 4 விருதுகளைப் பெற்று தந்தது. இப்படம் பவன் கல்யாண் மற்றும் ரானா தக்குபாடி நடிப்பில் தெலுங்கு மொழியில் பீம்லா நாயக் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு 25 பிப்ரவரி 2022 அன்று வெளியிடப்பட்டது.[2] கதைச்சுருக்கம்இந்திய ராணுவத்தின் முன்னாள் அவில்தார் கோஷி குரியன் தனது ஓட்டுநர் குமாரனுடன் உதகமண்டலத்திலிருந்து கட்டப்பனை செல்லும் வழியில் இராணுவ உணவகத்தில் இருந்து வாங்கிய மதுகுப்பிகள் நிறைந்த ஒரு பெட்டியை தனது தானுந்தின் பின் இருக்கையில் வைத்துக் கொண்டு கோயம்புத்தூர் வழியாக பொதுப் பாதைக்கு பதிலாக, மது தடை செய்யப்பட்ட பகுதியான அட்டப்பாடி வழியாகச் செல்கின்றனர். போக்குவரத்து சோதனையின் போது வாகனம் தடுத்து நிறுத்தப்படுகிறது. இது மாதம் ஒருமுறை கலால் துறையும் காவல் துறையும் சேர்ந்து நடத்தும் வழக்கமான ஒரு சோதனையாகும். சோதையில் மதுபானம் இருப்பதைக் கண்ட கலால் அதிகாரிகள் கோஷியை கடிந்து கொள்கிறார்கள். இதனால் கோபமடைந்த கோஷி, கலால் அதிகாரியான ஃபைசலைத் தாக்குகிறார். இதைப் பார்த்த காவல் உதவி ஆய்வாளர் அய்யப்பன் நாயர் கோஷியை தடுத்து நிறுத்துகிறார். கோஷி உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. சில நிமிடங்களில், கோஷியின் திறன்பேசியில் நன்கு அறியப்பட்ட அரசியல் மற்றும் ஊடக பிரமுகர்களின் பெயர்களைக் கண்டு அதிகாரிகள் திகைக்கிறார்கள். கோஷி தான் கட்டப்பனையில் வசிக்கும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி எனவும், குரைன் ஜான் என்ற செல்வாக்குமிக்க அரசியல் தலைவரின் மகன் எனவும் தன்னை வெளிப்படுத்துகிறார். கோஷி, தான் நத்தார் பண்டிகைக்காக 5 நாட்கள் வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்குமாறு அய்யப்பனிடம் கேட்கிறார். ஆனால் அய்யப்பன் மறுத்து கோஷி மீது பிணை ஆணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வீட்டிற்குச் செல்ல முடியாது என்றும் கூறுகிறார்.. இதிலிருந்து தப்பிப்பதைப் பற்றி யோசித்த கோஷி தான் மதுவிற்கு அடிமையானவன் என்றும் தன்னால் மது இல்லாமல் இருக்க முடியாது என்றும் தனக்கு சிறிதளவு மதுவைத் தருமாறும் அய்யப்பனைக் கேட்டுக்கொள்கிறார். அய்யப்பனும் தனது பெண் காவலரான ஜெஸ்ஸியின் உதவியுடன் கோஷிக்கு மதுவை அளிக்கிறார். இந்த நிகழ்வுகளை அய்ய்ப்பனுக்குத் தெரியாமல் கோஷி நிகழ்படமாக எடுத்துக் கொள்கிறார். பின்னர் கோஷி பாலக்காடு துணை சிறையில் 12 நாட்களுக்கு காவலில் வைக்கப்படுகிறார். 12 நாட்களுக்குப் பிறகு, அட்டப்பாடி காவல் நிலையத்தில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளுக்கு ஒரு முறை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கோஷி பிணை ஆணை பெறுகிறார். விடுவிக்கப்பட்டதும், தான் எடுத்த நிகழ்ப்படத்தை வெளியிடுகிறார். இதைக் கண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அய்யப்பனையும் ஜெஸ்ஸியையும் பணியிடை நீக்கம் செய்கின்றனர். அய்யப்பன் கைது செய்யப்பட்டு, அவரது காவலர் பதக்கங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த நாள் காலையில் இருவரும் சமரசம் செய்து கொள்ள கோஷி தனது நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜார்ஜுடன் அய்யப்பனைச் சந்திக்க செல்கிறார். அங்கு இருவரும் ஒருவருக்கொருவர் வீண் தர்க்கங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் “தான் என்ற அகங்காரம்” காரணமாக, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொள்கிறார்கள். ஒருமுறை இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. கோஷியும் அய்யப்பனும் தங்கள் அகங்காரத்தால் என்ன ஆனார்கள் என்பதை மீதிக் கதை கூறுகிறது. இசைஇந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார். பாடல்களை பி. கே. ஹரிநாராயணன், ரபீக் அகமது மற்றும் நஞ்சியம்மா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.[3][4] ஒலிப்பதிவு இசைத் தொகுப்பு 10 பிப்ரவரி 2020 அன்று மனோரமா மியூசிக் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. வெளியீடுஅய்யப்பனும் கோஷியும் பிப்ரவரி 7,2020 அன்று வெளியிடப்பட்டது. படத்தின் செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யா தொலைக்காட்சி விற்கப்பட்டன. வரவேற்புபிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பிஜு மேனன் நடிப்பு, கதை, இயக்கம், வசனங்கள், ஒளிப்பதிவு மற்றும் கேரள கலாச்சாரத்திற்கான அதன் பாரம்பரியம் ஆகியவற்றிற்காக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[5]தி நியூ இந்தியன் எக்சுபிரசு இயக்குநர் சச்சியையும் படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பையும் பாராட்டி எழுதியது.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia