அறிஞர்கள் அவையம்

அறிஞர்கள் அவையம் என்பது, சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்டிருக்கும் தமிழ் மொழி மேம்பாட்டிற்கான புதிய திட்டமாகும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்தோறும் நடத்தப்படும் என்று 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற, தமிழகச் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. [1]

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., தலைமையிலான குழுவினர் இதற்கான பணிகளைச் செய்து வருகின்றனர். அறிஞர்கள் அவையத்தின் வழியாக, திங்கள்தோறும் நிகழ்த்தப்பெற வேண்டிய முதன்மைப் பொருண்மைகளாக 1. இலக்கியவியல், 2. இலக்கணவியல், 3. அகராதியியல், 4. திருக்குறள், 5. மொழியியல், 6. மானிடவியல் - பண்பாட்டியல், 7. தொல்லியல் - நாணயவியல் - குறியீட்டியல், 8. சமூகவியல் - வரலாற்றியல், 9. நாட்டுப்புறவியல், 10. சுவடியியல்-கல்வெட்டியல்-பதிப்பியல், 11. ஒப்பிலக்கியவியல் - திறனாய்வியல் - ஆய்வியல் அணுகுமுறைகள், 12. பயன்பாட்டுத் தமிழியல் ஆகியவை 12 மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவைக்கேற்ப மாற்றங்கள் இருக்கலாம்.[2]

அறிஞர்கள் அவையத்தின் தொடக்கவிழா மற்றும் வல்லுநர்களின் முதல் கூட்டம், ‘தமிழ் அகராதியியல்’ எனும் பொருண்மையில் நடத்தப்பெற்றது. இக்கூட்டத்தில் 13 வல்லுநர்கள் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். [3]

இந்தத் திட்டத்தின் வழியாக, இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ் மொழி மற்றும் அதன் சிறப்புகளை அனைத்துத் துறைகளிலும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று, அதனைத் திட்டங்களாக நிறைவேற்ற உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பெறும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வல்லுநர் கூட்டத்தின் முடிவிலும், எடுக்கப் பெற்ற செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, வழிகாட்டும் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுவின் வழிகாட்டுதல்களுடன், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து ஆராயப்படும். [4]

தமிழ் மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும், இனி நிகழ வேண்டியவை குறித்தும் துறை சார்ந்த அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு, அதனைச் சிறந்த முறையில் செயல்படுத்த இத்திட்டம் உதவும். இத்திட்டம் தொடங்கப்பெற்றதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளம் வழியாக வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். [5]

மேற்கோள்கள்

  1. "உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000! அமைச்சர் அறிவிப்பு! - TN ASSEMBLY". ETV Bharat. 16 April 2025. https://www.etvbharat.com/ta/!state/minister-mp-saminathan-has-announced-rs-2000-monthly-scholarship-for-15-students-studying-in-five-year-integrated-tamil-pg-at-the-world-institute-of-tamil-studies-tamil-nadu-news-tns25041602124. 
  2. அறிஞர்கள் அவையம் (அனிச்சம் வலைப்பூ)
  3. அறிஞர்கள் அவையத்தைத் திறந்தார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் (தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்தில் இடம் பெற்றிருக்கும் செய்தி - 29-5-2025)
  4. "தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்". இந்து தமிழ்திசை. 30 May 2025. https://www.hindutamil.in/news/tamilnadu/1363530-arignargal-avayam-discussion-project-for-the-development-of-tamil-language.html. 
  5. "'அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் முதல்வர் வாழ்த்து". தினகரன். 30 May 2025. https://www.dinakaran.com/scholars_discussion_chief_minister_greetings. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya