இசுட்ரோன்சியம் சல்பேட்டு(Strontium sulphate) என்பது SrSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இசுட்ரோன்சியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் படிகத்தூளாகக் காணப்படுகிறது. இயற்கையில் செலசுடின் என்ற கனிமமாகக் கிடைக்கிறது. தண்ணிரில் மிகக்குறைவாக அதாவது 8800 பகுதியில் ஒரு பகுதி அளவுக்கே கரைகிறது. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலத்திலும், நைட்ரிக் அமிலத்திலும் நன்கு கரைகிறது. சோடியம் குளோரைடு போன்ற காரக் கரைசல்களில் குறிப்பிடத்தக்க அளவு கரைகிறது.
கட்டமைப்பு
இசுட்ரோன்சியம் சல்பேட்டு ஒரு பலபகுதிச் சேர்மமாகும். பேரியம் சல்பேட்டின் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அகாந்தாரியா என்றழைக்கப்படும் ரேடியோலாரிய புரோட்டோசோவா உயிரினங்களின் உடற்கூடு சிக்கலான படிகமாகிய இசுட்ரோன்சியம் சல்பேட்டின் கட்டமைப்பிலுள்ளன.
பயன்பாடுகள்
அதிகப் பயன்கள் கொண்ட மற்ற இசுட்ரோன்சியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது இயற்கையில் தோன்றுகிறது. தொழிற்துறையில் இச்சேர்மம் கார்பனேட்டாக மாற்றப்பட்டு பீங்கான் உற்பத்தியில் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நைட்ரேட்டாக மாற்றப்பட்டு வானவெடிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது [4].
↑Krystek, M. (1979). "Lattice Parameters of (BaxSr100-x)SO4 Doped with Europium". Physica Status Solidi (a)54 (2): K133. doi:10.1002/pssa.2210540256.
↑J. Paul MacMillan, Jai Won Park, Rolf Gerstenberg, Heinz Wagner, Karl Köhler, Peter Wallbrecht “Strontium and Strontium Compounds” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a25_321.