இசுட்ரோன்சியம் ஆக்சைடு(Strontium oxide) என்பது SrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இசுட்ரோன்சியா என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பர். இசுட்ரோன்சியம்ஆக்சிசனுடன் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் ஆக்சைடு உருவாகிறது. இசுட்ரோன்சியம் காற்றில் எரியும்போது இசுட்ரோன்சியம் ஆக்சைடும், இசுட்ரோன்சியம் நைட்ரைடும் சேர்ந்த கலவை தோன்றுகிறது. இசுட்ரோன்சியம் கார்பனேட்டு சிதைவடைவதாலும் இசுட்ரோன்சியம் ஆக்சைடு உருவாகிறது. இச்சேர்மம் ஒரு கார ஆக்சைடு வகையைச் சேர்ந்ததாகும்.
பயன்கள்
கிட்டத்தட்ட எதிர்மின் கதிர்க்குழாயின் எடையில் 8% இசுட்ரோன்சியம் ஆக்சைடு பயன்படுகிறது. 1970 ஆம் ஆண்டுகளிலிருந்து இசுட்ரோன்சியத்தின் முக்கியமான பயனாக இதுவே இருந்துவருகிறது[3]. வண்ண எதிர்மின் கதிர்க்குழாய் பயன்படுத்தப்படும் வண்ணத் தொலைக்காட்சிகள் மற்றும் இதர பொருட்களை விற்பதற்கு அமெரிக்காவில் சட்டப்பூர்வமான அங்கீகாரம் தேவையாகும். இக்கருவிகளிலிருந்து வெளிப்படும் எக்சு கதிர்களை தடை செய்ய இசுட்ரோன்சியத்தை பயன்படுத்த இந்த அங்கீகாரம் கோரப்பட்டது. குழாயின் கழுத்து, புனல் பகுதிகளில் ஈய(II) ஆக்சைடை பயன்படுத்த முடியும். ஆனால் இதை முகப்புத் தகடுகளில் பயன்படுத்துகையில் நிறச்சிதைவுக்கு காரணமாகிறது[4]
வினைகள்
வெற்றிடத்தில் இசுட்ரோன்சியம் ஆக்சைடுடன் அலுமினியத்தைச் சேர்த்து சூடாக்கினால் தனிமநிலை இசுட்ரோன்சியம் உருவாகிறது[1].