இடி மின்னல் காதல் (Idi Minnal Kadhal) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். புதிர் தொடர்பான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் எழுதி இயக்கியிருந்தார். பாவகி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்தது.[1] இதில் சிபி புவன சந்திரன், பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ஜெய் ஆதித்யா, ஜெகன், ராதாரவி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2][3][4][5]
2022 மார்ச் மாதம் சென்னை, ஏலகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இப்படத்தின் தயாரிப்பு தொடங்கியது. கடுமையான மூன்று மாதகால அட்டவணையைத் தொடர்ந்து, 2022 சூலை மாதம் இத்திரைப்படப் படப்பிடிப்புப் பணிகள் நிறைவுபெற்றது.[6]
இத்திரைப்படம் 2024 மார்ச் 29 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர் பிக்சர்சு வாங்கியது.
ஆர். மாதவனின் அறிமுக இயக்கமான ராகெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தில் இணைவதற்கு முன்னர், பாலாஜி மாதவன் நான்கு ஆண்டுகளாக மிசுகினுக்கு உதவியாளராக இருந்தார்.[7] இக்காலகட்டத்தில், பாலாஜி மாதவன் விரைவில் இடி மின்னல் காதல் திரைப்படம் உருவாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். பின்னர் அவரின் குழந்தைப்பருவ நண்பரான ஜெயச்சந்தர் பின்னாம்னேனியிடம் இப்படத்தை வழங்கினார். அவர் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் உள்ளார்.[7] இவர்கள் ஒரு சில முதலீட்டாளர்களைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து படத்தை தயாரித்தனர். முன் - தயாரிப்புப் பணிகள் 2022 மார்ச் மாதம் முதல் 2022 மே மாதம் வரை நடந்தது.[8]
மே 2022 இல், படத்தின் பூசையில் மையக் கதாபாத்திரங்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. ஜெயச்சந்தர் பின்னாம்னேனி ஒளிப்பதிவு செய்யவிருந்தார். இசை, படத்தொகுப்பு ஆகியவை முறையே விருது பெற்ற சாம் சி. எஸ்., அந்தோனி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.[3][9] சென்னை, ஏலகிரி ஆகிய இடங்களில் 3 அட்டவணைகளாக 27 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.[10] படத்தின் அனைத்து இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகளும் 2022 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரையிலான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டன.[10]
இத்திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருந்தார். 2024 மார்ச்சு 21 அன்று படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் முதல் தனிப்பாடலான "ஓ சிறகாட்சி பூவே பூவே" பாடல் வெளியிடப்பட்டது.[11] பாடல் வரிகளை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார்.
பாடல்கள்"
#
பாடல்
பாடகர்(கள்)
நீளம்
1.
"ஓ சிறகாட்சி பூவே"
கபில் கபிலன், பிரியங்கா என். கே
3:30
2.
"ஆகாயம் இல்லாமலே"
மது பாலகிருஷ்ணன்
4:02
3.
"அடிக்கடி அடி"
மாளவிகா சுந்தர், சத்ய பிரகாஷ்
3:50
4.
"நேற்று கண்டேன்"
ஆர்.பி. கிரிஷாங்
3:35
மொத்த நீளம்:
14:57
வெளியீடு
இடி மின்னல் காதல் 2024 மார்ச்சு 29 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[12] இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர் பிக்சர்சு வாங்கியது.
வரவேற்பு
டைம்ஸ் நவ் விமர்சகர் ஒருவர், ஐந்திற்கு மூன்று நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு, "இடி மின்னல் காதல் ஒரு சரியான அதிரடிப் பொழுதுபோக்காக இருக்காது. ஆனால் அது எந்த வகையிலும் சலிப்பை ஏற்படுத்தாது. வேறுவிதமாகக் கூறினால், இது ஒரு புதிய கதையை விவரிக்கும் ஒரு நல்ல முயற்சி. ஒரு குறிப்பிடத்தக்க செய்தியைக் கொடுக்கிறது".[13] என்று எழுதினார்.
சினிமா எக்சுபிரசின் சிறீசித் முள்ளப்பில்லி, "இடி மின்னல் காதலில் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரம் யாசுமின் பொன்னப்பாவின் அஞ்சலி" என்று கூறினார்.[14]