இலக்னோ அல்லது இலக்னௌ (இந்தி: लखनऊ, உருது: لکھنؤ) இந்தியாவின்உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 123.45 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. 310.1 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 22,07,340 ஆகும். சராசரிக் கல்வியறிவு 68.63%. இலக்னோ வட இந்தியாவின் கலைநேர்த்திக்கும் பண்பாட்டுக்கும் சிறந்த இடமாக 18-ஆவது, 19-ஆவது நூற்றாண்டுகளில் புகழ் ஈட்டிய நகரம்.[1] இன்றும் இது தொடர்ந்து வணிகம், வானூர்திநுட்பம், நிதிநிறுவனங்கள், மருந்தாலைகள், நுட்பத்தொழிலகங்கள், சுற்றுலா, வகுதி (design), பண்பாடு, இசை, இலக்கியம் ஆகிய பல துறைகளுக்கும் முன்னணி நகரமாகத் திகழ்கின்றது.[2] இது உத்திரப் பிரதேசத்திலேயே பெரிய நகரம், வட, நடு இந்தியாவில் தில்லிக்கு அடுத்தாற்போல் பெரிய மாநகரம், இது தவிர இந்தியாவிலேயே 11-ஆவது பெரிய நகரமும் ஆகும்.