இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
உலர்தாவரகத் தாள்(Gnetum africanum)
தாவரமொன்று அல்லது அதன் முக்கிய பகுதிகள் அனைத்தையும் அழுத்தி, உலர்த்தப்பட்டு, தாளில் ஒட்டப்படும். அந்த அட்டையில்/ தாளில், தாவரவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஏதாவதொரு தாவரவியல் வகைப்பாட்டின் படி குறிக்கப்படும். இத்தகைய முறையில் பேணப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்ட உலர் தாவரத்தொகுப்பை, தன்னகத்தே கொண்டிருப்பவை உலர்தாவரகம்[சான்று தேவை] (ஆங்கிலம்:Herbarium) என்றழைக்கப்படுகின்றன. இச்சொல்லானது உலர் தாவரத்தொகுப்புகளைப் பராமரித்து, ஆய்வு மேற்கொள்ளும் நிலையங்களையும் குறிக்கும். (எ.கா.) இந்தியத் தாவரவியல் உலர் தாவரகம், கோயம்புத்தூர்.
சொற்பிறப்பு
தாவரவியல் பெயரான எர்பாரியம் (herbārium) இலத்தீன் மொழியில் இருந்து உருவானது. அம்மொழியில் எர்பாரியசு (herbārius) 'தாவரவியலாளர்' என்றும் பொருள். எர்பா (herba) 'புல், தாவரத்தொகுதி' என்றும் பொருள் அமைகிறது. இந்த இருசொற்களையும் அடிப்படையாகக் கொண்டு, ஏர்பாரியம் என்ற சொல் (herbārium) உருவாக்கப்பட்டது.
செய்முறை
புதர்ச் செடி, கொடி, மரம் போன்றத் தாவரங்களிலிருந்து, இலைகள், மலர்கள், மஞ்சரியுடன் கூடிய ஒரு சிறு கிளை போன்ற முக்கியபகுதிகள் கவனத்துடன் பிரித்தெடுத்துப்படுகின்றன. சிறு தாவரமாயிருப்பின், உடல் பகுதியும், இனப்பெருக்கப் பகுதியும் இருத்தல் வேண்டும். இவ்வாறு கொண்டு வரப்பட்டத் தாவரங்களை, பழைய செய்தித்தாள்களின் இதழ்களிடையே வைத்து, அழுத்தப்பட்ட நிலையில் உலரச் செய்ய வேண்டும்.
தாவர பாகங்கள் முழுமையாக உலரும் வரை, குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்தி தாள்களை மாற்ற வேண்டும். தாவரபாகங்களுடன் கூடிய செய்தி தாள்களை, உலர்தாவர அழுத்தக்கருவியில் வைத்து, அழுத்தப்பட்ட நிலையில் உலரவைக்க வேண்டும்.
தாவர அழுத்தக்கருவி, இரண்டு பலகைத் தட்டையும், குறுக்கு சட்டங்களையும் கொண்டதாகும். இரு பலகைத் தட்டுகளுக்கிடையே, தாவரப் பகுதிகளுடன் கூடிய செய்தி தாள்கள் வைக்கப்பட்டு இறுக்கமாக கட்டப்படுகின்றன. அவ்வாறு அழுத்தும் போது தாவரப்பகுதிகள், நன்கு தட்டையாக, சீராக அழுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
உலர்த்தப்பட்ட தாவர மாதிரி, நிர்ணயிக்கப்பட்ட நிலையான 41 செ.மீ X 29 செ.மீ. அளவுள்ள உலர்தாவரத் தாளில் ஒட்டப்படும் நிகழ்ச்சிக்கு உலர்தாவரப்பொருத்துதல் என்று பெயர்.
பாதுகாப்பு
பூஞ்சைக் கொல்லி மருந்து 0.1 சதவீத மெர்குரிக் குளோரைடு கரைசலை, அனைத்து உலர் தாவரமாதிரிகளின் மீதும் தெளிக்க வேண்டும்.
பூச்சிகளின் தாக்குதலிலிருந்து, உலர் தாவரமாதிரிகளை பாதுகாக்க, பூச்சிகொல்லி மருந்துகளான, பூச்சியுருண்டை(Naphthalene), கார்பன்-டை-சல்பைடு போன்றவைகளை பயன்படுத்தலாம். தாவரங்களின் கடினமான பாகங்களான கனிகளையும், விதைகளை சிறுகாகித உறைகளிலிட்டு உலரத்தாவரத்தாள்களுடன் இணைக்கலாம்.
மூல உலர்தாவர மாதிரி:தாவர சிற்றினத்திற்கு புதிய பெயர் சூட்டும்போது, அந்த தாவரத்தின் உலர் தாவரத்தாளை, ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஒரு உலர்தாவரக நிறுவனத்தில் முறையாக பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்படும் தாவரபகுதி, மூல உலர் தாவரமாதிரி எனப்படும். தாவரக்குடும்பத்தின் பெயர் மட்டும், பேரினத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இந்த மூல உலர் தாவர மாதிரிகள், உலர்தாவரகத்திற்கு மிகவும் முக்கியமானவை. எனவே இவைகளை அதிகக் கவனத்துடன், தீப்பற்றாதபெட்டகங்களில் பாதுகாக்கப்பட வேண்டும்.
உலர்தாவரகத்தின், உலர் தாவரமாதிரிகளை மிகக் கவனமாக கையாண்டு வந்தால், அவைகளை நல்ல நிலையில் நீண்ட காலத்திற்கு சேமிக்கலாம். பூஞ்சைகளிலிருந்தும், பூச்சிகளிலிருந்தும் இவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விவரச் சீட்டு ஒன்று, உலர்தாவரகத் தாளுடன் இணைந்தே காணப்படும். இதில் தாவரத்தின் பெயர், குடும்பம், வளரியல்பு, தாவரமாதிரி எடுக்கப்பட்ட இடம், மாதிரி எடுக்கப்பட்ட நாள், தாவர மாதிரி எடுத்த நபரின் பெயர் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
பயன்பாடுகள்
இத்தாவரகத்தில் பேணப்படும் விதைகள், அதன் இயல்புமாறாமல், நிலைத்திருக்கத்தக்கதாய் இருப்பதால், ஆராய்ச்சிகளுக்கு, எக்காலத்திலும் மிகவும் பயனுள்ளதாகா அமைந்துள்ளது.[1]
ஒரு நாட்டின் அல்லது குறிப்பிட்ட இடத்தின் தாவரங்களைப் பற்றி முழுமையாக அறிய, அந்த இடம் அல்லது நாடு முழுவதும் பயணம் செய்து, அலைந்து, அதன் தாவரங்களை அறிய தேவையில்லை. மிக குறைந்த காலத்தில் அத்தாவர வளத்தை அறிவதற்கு, இந்த உலர்தாவரகம் மிகவும் பயனாகிறது.
உலர்தாவரகத்தில் ஒரு தாவரம் குறித்த அனைத்து விவரங்களும் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் ஆராய்ச்சி செய்பவருக்கோ, கற்க முற்படுபவருக்கோ பிறரின் உழைப்பு எளிதில் கிடைக்கிறது.
தாவரமாதிரிகளைக் கண்ணால் காண இயலுவதால், களப்பணியாளர்களின் நோக்கம் மிகவும் எளிதாக கட்புலனாகி, நிறைவுறுகிறது.
200 ஆண்டுகள் வரை சேமிக்கப்பட்டுள்ள உலர்தாவரமாதிரித்தாள்களிலுள்ள மகரந்தத்தூள்களின் பண்புகள், புறஅமைப்புக்குறித்த குறிப்புகள், தாவரவகைப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
செல்லியல்(cytology), DNA-வின் அமைப்பு, எண்ணியில் வகைப்பாடு, வேதிமுறை வகைப்பாடு போன்ற ஆராய்ச்சிகளுக்கு, இந்த உலர்தாவரகம் அடிப்படை மூலமாக அமைகிறது. மரபணு ஆய்வுகளுக்கு, இது மிக அடித்தளமான சேமிப்பகமாக செயல்படுகிறது.
ஒரு நாட்டின் உலர்தாவரக வளம், அந்நாட்டின் தாவரவளத்தைப் போற்றவும், பேணவும், வளர்க்கவும், கலப்பினங்களை உருவாக்கவும் அதிகம் பயன்படுவதால், பல்வேறு வளர்ந்த நாடுகளில் இவை குறித்த விழிப்புணர்ச்சி அதிகம் இருக்கிறது. தாவரங்களின் நிலைக்காட்சியகம் என்று உலர்தாவரகத்தை அழைக்கலாம்.
உலர்தாவரகங்கள்
பின்வருபவை, முக்கியமான அனைத்துலக உலர்தாவரகங்கள் ஆகும். பிறவற்றை இங்கு காணலாம்.