ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்
![]() ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் (Supreme Court of the United Kingdom) ஆங்கிலச் சட்டம், வட அயர்லாந்தின் சட்டம் மற்றும் இசுகாத்திய பொதுச் சட்டத்தின்படியான வழக்குகளுக்கான மீஉயர் நீதிமன்றமாகும். இதுவே ஐக்கிய இராச்சியத்தில் கடைசிகட்ட நீதிமன்றமும் மிக உயரிய மேல் முறையீட்டு நீதிமன்றமும் ஆகும்; இசுகாட்லாந்தில் மட்டும் குற்றவியல் வழக்குகளுக்கான மேல்முறையீடு நீதிமன்றமாக நீதியாட்சி உயர் நீதிமன்றம் விளங்குகிறது. உச்ச நீதிமன்றம் அதிகாரப் பரவலில் ஏற்படும் பிணக்குகளுக்கும் தீர்வு காண்கிறது. அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ள மூன்று அரசுகளின் (இசுகாட்லாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து) சட்ட அதிகாரங்கள் குறித்தும் இந்த சட்டப் பேரவைகள் இயற்றும் சட்டங்கள் குறித்தும் எழும் ஐயங்களுக்கும் தீர்வு காணும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சீர்திருத்த சட்டம், 2005இன் மூன்றாம் பாகத்தின்படி நிறுவப்பட்டு அக்டோபர் 1, 2009 முதல் செயல்படத் தொடங்கியது.[1][2] பிரபுக்கள் அவையின் சட்டப் பிரபுக்கள் அது வரை ஆற்றிவந்த இந்த சட்டப்பணிகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதிகாரப் பரவலில் ஏற்படும் பிரச்சினைகளை அதுவரை கவனித்து வந்த பிரைவி கவுன்சிலின் நீதிக்குழுவிடமிருந்தும் அந்தப் பொறுப்புகளை மேற்கொண்டது. நாடாளுமன்ற முடியாட்சி கோட்பாட்டினால் மற்ற நாட்டு உச்ச நீதிமன்றங்களைப் போலன்றி இதன் சட்ட மீளாய்வு அதிகாரம் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. நாடாளுமன்றத்தின் எந்த முதன்மையான சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தால் மேல்நீக்க முடியாது.[3] இருப்பினும், இரண்டாம்நிலை சட்டங்களை, முதன்மைச் சட்டங்களுக்குப் புறம்பாக இருந்தால், மேல் நீக்கம் செய்யவியலும். மேலும், மனித உரிமைகள் சட்டம், 1998இன் நான்காம் பிரிவின்படி, குறிப்பிடப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சந்திப்பின்படியான உரிமைகளில் ஒன்றிற்கு குறுக்கிடுவதாக பொருந்தாத அறிக்கை வெளியிடலாம்.[4] இது முதன்மை அல்லது இரண்டாம்நிலை சட்டத்திற்கு எதிராக வெளியிடப்படலாம்; இந்த அறிக்கை சட்டத்தை இரத்து செய்வதில்லை மற்றும் நாடாளுமன்றமோ அரசோ இந்த அறிக்கையை ஏற்க வேண்டியதில்லை. இருப்பினும் இதனுடன் உடன்பட்டால், அமைச்சர்கள் தகுந்த சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்.[5] தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைவராக அப்பட்சுபரி பிரபு டேவிட் நியுபெர்கர் பதவியேற்றுள்ளார். மேற்சான்றுகள்
வெளி வலைத்தளங்கள்
|
Portal di Ensiklopedia Dunia