ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்
பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் (Parliament of the United Kingdom of Great Britain and Northern Ireland),[3] என அலுவல்முறையாகவும் பொதுவாக பிரித்தானிய நாடாளுமன்றம் (British Parliament) எனவும் அறியப்படும் இவ்வமைப்பே ஐக்கிய இராச்சியம் மற்றும் இதன் ஆட்சிப்பகுதிகளில் சட்டமியற்றக்கூடிய மிக உயரிய சட்ட அமைப்பு ஆகும். இது இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இயங்குகிறது. ஐக்கிய இராச்சியத்திலும் அதன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசியல் அமைப்புக்களுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் தலைவராக அரசர் அல்லது அரசி, (தற்போது அரசர் சார்லசு III) விளங்குகிறார். நாடாளுமன்றம் ஈரவைகளுடன், ஒரு மேலவை (பிரபுக்கள் அவை), ஒரு கீழவை (மக்களவை), அமைந்துள்ளது.[4] அரசரால் சட்டவாக்கலின் மூன்றாம் அங்கமாக விளங்குகிறார்.[5][6] பிரபுக்கள் அவையில் இருவகை உறுப்பினர்கள் உள்ளனர்: "சமயப் பிரபுக்களும்" (இங்கிலாந்து திருச்சபையின் மூத்த ஆயர்கள்), "உலகியல் பிரபுக்களும்" (பியர்கள் என அழைக்கப்படுபவர்கள்) பிரதமரின் அறிவுரைப்படி அரசரால் நியமிக்கப்படுபவர்கள்.[7] அத்துடன் 92 மரபுரிமையான பிரபுக்களும் பிரதிநிதிகளாக உள்ளனர். அக்டோபர் 2009இல் உச்ச நீதிமன்றம் துவங்கப்படும்வரை பிரபுக்கள் அவை நீதி பராமரிப்பையும் சட்டப் பிரபுக்கள் மூலம் ஆற்றிவந்தது. காமன்சு என அழைக்கப்படும் மக்களவை மக்களாட்சி முறையில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுத்தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவையாகும்.[8] இலண்டனில் உள்ள நாடாளுமன்ற மாளிகை எனப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் தங்களுக்கான தனித்தனிக் கூடங்களில் இந்த இரு அவைகளும் கூடுகின்றன. அரசியலமைப்பு மரபின்படி பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மக்களவையின் உறுப்பினர்களாக, மிக அரிதாக பிரபுக்கள் அவை உறுப்பினர்களாக, உள்ளனர். இதனால் இந்த சட்ட அவைகளுக்கு அவர்கள் பொறுப்பானவர்களாக உள்ளனர். இங்கிலாந்தின் நாடாளுமன்றமும் இசுக்காட்லாந்தின் நாடாளுமன்றமும் ஒன்றிணைப்புச் சட்டங்களை நிறைவேற்றியபிறகு 1707இல் பெரிய பிரித்தானிய நாடாளுமன்றம் உருவானது. ஆனால் நடைமுறையில் இது தொடர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசுக்காட்லாந்திய எம்பிக்களையும் பியர்களையும் சேர்க்கப்பட்டனர். மேலும் 1800இல் ஒன்றிணைப்புச் சட்டத்திற்கு பெரிய பிரித்தானிய நாடாளுமன்றமும் அயர்லாந்து நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்த பின்னர் அயர்லாந்து நாடாளுமன்றம் மூடப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்றம் விரிவுபடுத்தப்பட்டது. காமன்சிற்கு 100 கூடுதல் உறுப்பினர்களும் பிரபுக்கள் அவைக்கு 32 உறுப்பினர்களும் கூட்டப்பட்டு பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உருவானது. உலகில் முதன்முதலாக வளர்ச்சியுற்ற நாடாளுமன்றமான இது, உலகின் பல்வேறு மக்களாட்சிகளுக்கான சீர்தரமாக அமைந்ததால் "அனைத்து நாடாளுமன்றங்களின் தாயாக" அழைக்கப்படுவதுண்டு.[9] கோட்பாட்டின்படி, உயரிய சட்ட அதிகாரம் நாடாளுமன்றத்தின் அரசருக்கு தரப்பட்டுள்ளது; நடைமுறைப்படி, அரசர் பிரதமரின் அறிவுரைப்படியே நடப்பதாலும் பிரபுக்கள் அவையின் அதிகாரம் வரையறுக்கப்பட்டிருப்பதாலும் உண்மையான அதிகாரம் மக்களவையிடமே உள்ளது.[10] 2017 சூன் 8 ஆம் நாள் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளின்படி "தொங்கு நாடாளுமன்றம்" அமைக்கப்படுகிறது. பழமைவாதக் கட்சி 318 உறுப்பினர்களுடனும், சனநாயக யூனியன் கட்சி 10 உறுப்பினர்களுடனும் இணைந்து பழமைவாதக் கட்சியின் தலைவர் தெரசா மே ஆட்சி அமைக்கிறார்.[11][12] மேற்சான்றுகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் ![]() விக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: en:UK Constitution and Government
|
Portal di Ensiklopedia Dunia