ஒலிச்சேர்க்கை

ஒலிச்சேர்க்கை (Dubbing) என்பது திரைப்படத் தயாரிப்பிலும், நிகழ்படத் தயாரிப்பிலும், படப்பிடிப்புக்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது, முதலில் செய்த ஒலிப்பதிவுக்குக் கூடுதலான அல்லது குறைநிரப்பு ஒலிப்பதிவு இடம்பெறுகிறது. இந்தச் செயல்முறை, தன்னியக்க உரையாடல் பதிலீடு அல்லது கூடுதல் உரையாடல் பதிவு என்பதையும் உள்ளடக்குகிறது. இச்செயல்முறையின் போது, படத்தில் நடித்த நடிகர்களின் உரையாடல்களை மீள்பதிவு செய்கின்றனர். இசை பெரும்பாலும் ஒலிச்சேர்க்கை மூலமே திரைப்படத்தில் இணைக்கப்படுகின்றது. திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்குப் பதிலாக இன்னொருவர் அதே மொழியில் குரல் கொடுப்பதும், திரைப்படங்களை மொழிமாற்றம் செய்யும்போது நடிகர்களுக்குப் பிற மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பதும் ஒலிச்சேர்க்கையுள் அடங்குவதே.[1][2]

தற்பொழுது வெளிநாட்டு விநியோகத்திற்காக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அனிமே மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகள் ஆகியவை மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. இந்தியா நாட்டை பொறுத்தவரையில் பெருமபாலான வெளிநாட்டுத் திரைப்படங்கள் மற்றும் உள்நாட்டுத் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.

தோற்றம்

முற்காலத்தில் படத்தில் நடிக்கும் நடிகருக்குப் பாடும் குரல் வளம் இல்லாதபோது பாடல்களை வேறொருவர் மூலம் பாடி இணைப்பதற்கே ஒலிச்சேர்க்கை பெரிதும் பயன்பட்டது. தற்காலத்தில், பல்வேறு தேவைகளுக்கு ஒலிச்சேர்க்கை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஒலி-ஒளித் தயாரிப்புகளை உலகின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யும்போது அவ்வவ்விடங்களின் உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யவேண்டியுள்ளது. இதற்கும் ஒலிச்சேர்க்கை நுட்பங்கள் பயன்படுகின்றன.

வழிமுறைகள்

தன்னியக்க உரையாடல் பதிலீடு

தன்னியக்க உரையாடல் பதிலீடு அல்லது கூடுதல் உரையாடல் ஒலிப்பதிவு என்பது, படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், படத்தில் நடித்த நடிகர்கள் தமது உரையாடல்களை மீள்பது செய்யும் ஒரு செயற்பாடு ஆகும். ஒலித்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், உரையாடலில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இது அவசியமாகின்றது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் இருக்கக்கூடிய சொற் தெளிவு, நேர இசைவுக் குறைபாடு, உச்சரிப்புக் குறைபாடு போன்றவற்றை நீக்குவதற்கும் இந்த முறை பயன்படுகின்றது.

வழமையான படத் தயாரிப்புக்களின்போது, படப்பிடிப்பு ஒலிப்பதிவாளர் படப்பிடிப்பின்போதே உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வார். ஆனாலும், கருவிகளிலிருந்து எழும் ஒலி, போக்குவரத்து ஒலி, காற்று மற்றும் சூழலிலிருந்து எழுகின்ற பிற ஒலிகள் போன்றவற்றினால், களத்தில் செய்யப்படும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு உதவாதவையாக ஆகிவிடுகின்றன. படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டத்தில், ஒரு ஒலிப்பதிவு மேற்பார்வையாளர் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மீள ஒலிப்பதிவு செய்யவேண்டிய பகுதிகள் எவை என முடிவு செய்வார்.

உரைத்துணை

மேற்கோள்கள்

  1. "Glossary - Television". Archived from the original on 24 மே 2015. Retrieved 9 July 2015.
  2. Craig, Benjamin (21 February 2005). "What is ADR?". filmmaking.net. Retrieved 27 December 2013.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya