ஒஸ்கார் (காற்பந்தாட்ட வீரர்)
ஒஸ்கார் டோசு சான்டோசு எம்போபா ஜூனியர் (Oscar dos Santos Emboaba Júnior, தமிழக வழக்கு:ஆசுக்கார் டோசு சான்டோசு எம்போபா ஜூனியர், பிறப்பு 9 செப்டம்பர் 1991), பரவலாக ஒஸ்கார், பிரேசிலைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் ஆகும். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகம் செல்சீக்காகவும் பிரேசிலின் தேசிய அணிக்காகவும் நடுக்கள விளையாட்டாளராகவும் முன்னணி விளையாட்டாளராகவும் ஆடி வருகின்றார். ஓஸ்கார் தனது விளையாட்டு வாழ்வை சாவோ பாவுலோ காற்பந்துக் கழகத்தில் தொடங்கினார். 2008ஆம் ஆண்டில் இக்கழகம் பிரேசிலிய சீரீ ஏ கோப்பை வெல்ல துணை நின்றார். தமது ஒப்பந்தத்தில் இருந்த முறைகேடுகளுக்காக இக்கழகத்திற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்த சில சர்ச்சைகளுக்குப் பிறகு இசுபோர்ட்சு கிளப் இன்டர்னேனியோனலில் சேர்ந்தார். இக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினார். இவரது ஆட்டத்திறமையைக் கண்டு 2012இல் இங்கிலீஷ் பிரீமியர் லீக் காற்பந்துக் கழகம் செல்சீ இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஓஸ்கார் பிரேசிலின் சார்பாக 20 அகவையினருக்கு கீழான அணியிலும் 2012 ஒலிம்பிக்கிலும் தேசிய அணியிலும் விளையாடி உள்ளார். 20 அகவைக்கு கீழானவர்களுக்கான உலகக்கோப்பையில் ஆகத்து 20, 2011 அன்று போர்த்துகல்லிற்கு எதிரான இறுதியாட்டத்தில் மூன்று கோல்கள் அடித்து பிரேசிலுக்கு வெற்றி வாங்கித் தந்தார்.[3] இத்தகையோருக்கான உலகக்கோப்பையில் மூன்று கோல்கள் (ஹாட்றிக்) இட்ட முதல் விளையாட்டாளராக சாதனை படைத்தார்.[4][5] தமது தேசிய அணியில் முதன்முதலாக அர்கெந்தீனாவிற்கு எதிராக ஆடினார்; 4-3 என்ற கணக்கில் தோற்ற இந்த ஆட்டத்தில் பிரேசிலின் முதல் கோலை இவர் அடித்தார். இவரது விளையாட்டுப் பாணியும் திறனும் பிரேசிலின் புகழ்பெற்ற நடுக்கள வீரர் காகாவை ஒத்திருப்பதாகக் கருதுகின்றனர்.[6][7][8] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia