கதுவா பாலியல்வன்முறை வழக்கு என்பது 2018 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சம்மு காசுமீர் மாநிலத்தில் கதுவா அருகே உள்ள ரசானா கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல்வன்முறை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கினைக் குறிக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி பாக்கர்வால் நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர். கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அவரது இறந்த உடலை கண்டுபிடிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் காணாமல் போனார்.[1][2][3][4]
2018 ஏப்ரலில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது இந்நிகழ்ச்சி ஊடங்கங்களில் தலையங்கச் செய்திகளாக இடம்பெற்றது. குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்களாய் இருந்ததால், வலதுசாரி இந்துக் குழுக்கள் கைது நடவடிக்கையைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தின. அத்தகைய ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் இருவர் பின்னர் சிக்கல் தீவிரமானதால் பதவி விலகினர். சம்மு காசுமீரின் தேசிய சிறுத்தைகள் கட்சியின் தலைவர் பீம்சிங் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வேண்டி செய்த முறையீடு இந்திய உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.[5][6][7] வன்புணர்வு, கொலை மற்றும் குற்றவாளிக்களுக்கு காட்டப்பட்ட ஆதரவு ஆகியவை மக்கட்சமுதாயத்தில் பரந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.[8][9][1]
விவரம்
முறையீடு
சம்மு காவற்துறை மூத்த கண்காணிப்பாளர் தாக்கல் செய்துள்ள 5600 வார்த்தைகள் கொண்ட குற்றப்பத்திரிக்கையின்படி,
2018 ஜனவரி 12 ஆம் நாளன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தனது 8 வயது மகளைக் காணவில்லை என்று ஹீராநகர் காவல்நிலையத்தில் முறையீடு செய்துள்ளார். அவரது புகாரின் படி அவரது 8 வயது மகள் ஜனவரி 10, 2018 அன்று நண்பகலுக்கு 30 நிமிடங்கள் முன்னர் குதிரை மேய்ச்சலுக்குச் சென்றாள். பிற்பகல் 2 மணியளவில் அவள் காணப்பட்டாள் என்றும் மாலை 4 மணியளவில் குதிரைகள் வீடு திரும்பியபோது அவள் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவளைக் காணாததால் அவரது தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது.[10][11]
கண்டுபிடிப்பும் கைதும்
ஜனவரி 17, 2018 அன்று சிறுமியின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டு பிணக்கூறு ஆய்வு செய்வதற்கு காவற்துறையால் கையகப்படுத்தப்பட்டது. அதே நாளன்று பிற்பகல் 2.30 மணியளவில் கதுவா மாவட்ட மருத்துவமனையில் ஒரு மருத்துவர் குழுவால் ஆசிபாவின் உடல் பிணக்கூறாய்வு செய்யப்பட்டது. ஜனவரி 22, 2018 அன்று இவ்வழக்கு சம்மு காசுமீரின் குற்றப்பிரிவுத்துறைக்கு மாற்றப்பட்டது.[10][11] நான்கு காவற்துறை அதிகாரிகள் மற்றும் 7 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாகக் காவற்துறை வெளியிட்ட ஒரு குறிப்பு தெரிவித்தது.[9] இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[12][13]
சான்றுகளை அழிக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரு காவற்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.[9] ஏப்ரல் 9, 2018 அன்று குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 302, 376, 201, 120-B ஆகிய ரன்பீர் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு சிறுவன் மீதான குற்றப்பத்திரிக்க தாக்கல் செய்யப்படவுள்ளது.[14]
தடயவியற்சான்று
பிணக்கூறாய்வில் அச்சிறுமியின் உயிரற்ற உடலில் குளோனாசிபம் (Clonazepam) இருந்தது கண்டறியப்பட்டது.[13] வன்புணர்வுக்கும் கொலை செய்யப்படுவதற்கும் முன்னர் அச்சிறுமிக்கு மயக்க மருந்து தரப்பட்டிருந்தது கூறாய்வு செய்த மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரால் பல நாட்களாக அச்சிறுமி ஒரு வழிபாட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தக்கலாமென தடயவியற்சான்றுகள் பரிந்துரைக்கின்றன. வழிபாட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்ட முடிக்கற்றைகள் அப்பெண்ணின் முடியோடு ஒத்துள்ளதும் கண்டறியப்பட்டது.[9] ஆசிபா பலமுறை பல்வேறு நபர்களால் வன்புணரப் பட்டிருப்பதாகவும் சாகும்வரை கழுத்து நெறிக்கபட்டிருப்பதாகவும், தலையில் கனமான கல்லால் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தடயவியற்சான்றுகள் கூறுகின்றன.[1]
பின்விளைவுகள்
ஜெர்மனியின்மியூனிக் நகரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பு கதுவா வன்புணர்வுக்குப் பலியான சிறுமிக்கு நினைவஞ்சலி
ஏப்ரல் 15, 2018 இல், புது தில்லியின் பார்லிமென்ட் தெருவில் கதுவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள்.[15]
கண்டன எதிர்ப்புகளும் எதிர்வினைகளும்
2018 ஏப்ரலில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது இந்நிகழ்ச்சி ஊடங்கங்களில் தலையங்கச் செய்திகளாக இடம்பெற்றது. குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்களாய் இருந்ததால், வலதுசாரி இந்துக் குழுக்கள் கைது நடவடிக்கையைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தின. அத்தகைய ஒரு போராட்டத்தில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் இருவர் கலந்து கொண்டனர்.[8] ஏப்ரல் 9, 2018 அன்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கெதிரான குற்றப்பத்திரிக்கையை குற்றப் பிரிவு காவற்துறையினர் கதுவா குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் முன்னிலையில் பதிவு செய்தபோது வழக்கறிஞர்கள் அதனை எதிர்த்தனர். இந்து ஏக்தா மாஞ்ச் குழுவிற்கு (Hindu Ekta Manch) ஆதரவாக, வழக்கறிஞர்கள் குற்றத் தாக்கல் செய்வதைத் தடுத்தனர். எனினும் காவற்படையினர் வரவழைக்கப்பட்டு வழக்கறிஞர்களின் எதிர்ப்பு முறியடிக்கப்பட்டது; குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
[16] வன்புணர்வுக் குற்றவாளிக்களுக்கு ஆதரவான இந்த செயற்பாடு மக்கட்சமுதாயத்தில் பரந்த கோப அலையை உண்டாக்கியது.[8]
இந்த 8 வயது சிறுமியின் வன்புணர்வு மற்றும் கொலை நிகழ்ச்சி மக்களின் பெரும் கண்டனத்துக்குள்ளானதால், சம்மு காசுமீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி வழக்கினை விசாரிக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்[17][18] சிறுவர் (minor) வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினார்.[19]
ஜனவரி 18, 2018 அன்று இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர் கட்சிகள் மக்களவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.[24] சம்மு காசுமீரிலும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.[25]
கதுவா மற்றும் உன்னாவ் பாலியியல் வன்முறைக் குற்றங்கள் இரண்டுமே ஒரே சமயத்தில் வெளிச்சத்துக்கு வந்ததால் அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, புது தில்லி உட்பட நாட்டின் பல இடங்களிலும் நடைபெற்றது.[30][31][32][33]
இனப் பதட்டம்
இந்நிகழ்வு சம்மு காசுமீரில் பரவலான கோபத்தைத் தூண்டியது. எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பின் அழுத்தத்தால் சம்மு காசுமீர் மாநில அரசு இவ்வழக்கின் விசாரணையை மாநிலக் குற்றவியல் பிரிவிற்கு மாற்றியது.[9] குற்றஞ்சாட்டப்பட்டவரின் தனிப்பட்டப் பழிவாங்கும் எண்ணத்தாலும் பாக்கர்வால் நாடோடி மக்களை வெளியேற்றுவதற்காக விடப்பட்ட எச்சிரிக்கையாகவும் திட்டமிட்டு இக்குற்றம் நடத்தப்பட்டுள்ளதாகக் காவற்துறை பதிவு செய்த குற்றப்பத்திரிக்கையின் படி அறியப்படுகிறது.T[9] பாக்கர்வால் நாடோடிகள், இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் வசிக்கும் இசுலாமிய மக்களாவர்.[19] உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அரசியல் அழுத்தத்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் கோரினர்.[13] பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள சம்மு காசுமீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி இக்கோரிக்கையை நிராகரித்து விட்டார்.[9]மத்தியப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இந்த வன்புணர்வுக்கும் கொலைக்கும் பாக்கித்தான் இராணுவத்தினர் தான் காரணம் என்று கூறியது கடுமையான கண்டனத்துள்ளானது.[34] இந்து ஏக்தா மாஞ்ச் அமைப்பினர் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானவர்கள் குற்றவாளிகளே இல்லை என்று வாதிடுகின்றனர். [16]
வன்புணர்வு பாதிப்புக்குள்ளான சிறுமியின் சமூகம் அக்கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வாங்கியிருந்த இடத்திலுள்ள மயானத்தில் சிறுமியின் உடலை புதைக்கத் திட்டமிட்டனர். ஆனால் உடலைப் புதைக்க முற்படும்போது வலதுசாரி இந்து செயற்பாட்டாளர்களின் மிரட்டலால் தாங்கள் வேறு கிராமத்தில் தன் மகளின் உடலைப் புதைக்க நேர்ந்தது என்று சிறுமியின் தந்தை தெரிவித்தார்.[3]
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள்
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்துக்கள் கைதானதை எதிர்த்து வலது சாரி இந்துக் குழுக்கள் போராட்டங்கள் நடத்தின. பாரதிய ஜனதா கட்சியின் இரு அமைச்சர்களான வனத்துறை அமைச்சர் லால் சிங் சௌத்ரி, தொழிழ்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் இருவரும் இந்தப் போராட்டங்களில் ஒன்றில் கலந்து கொண்டனர்.[8] இக்கைது தங்களது சமயத்திற்கு இழுக்கு என்றும் கைதானவர்கள் விடுதலைச் செய்யப்படவில்லை என்றால் தாங்கள் தீக்குளிப்போம் என்றும் போராட்டக்காரர்களில் ஒருவர் த நியூயார்க் டைம்ஸ் இதழுக்குப் பேட்டியளித்தார்.[35] ஏப்ரல் 9, 2018 அன்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கெதிரான குற்றப்பத்திரிக்கையை குற்றப் பிரிவு காவற்துறையினர் கதுவா குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் முன்னிலையில் பதிவு செய்தபோது சில வழக்கறிஞர்கள் அதனை எதிர்த்தனர். இந்து ஏக்தா மாஞ்ச் குழுவிற்கு (Hindu Ekta Manch) ஆதரவாக வழக்கறிஞர்கள் குற்றத்தாக்கலைத் தடுக்க முயற்சித்தனர். எனினும் காவற்படையினர் வரவழைக்கப்பட்டு வழக்கறிஞர்களின் எதிர்ப்பு முறியடிக்கப்பட்டது; குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.[16] குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு காட்டப்பட்ட இந்த ஆதரவு மக்களிடம் கோப அலையை ஏற்படுத்தியது.[8]
வழக்கின் விசாரணை
கதுவா கொலை மற்றும் வன்புணர்வு வழக்கின் விசாரணை சம்மு காஷ்மீரில் ஏப்ரல் 1, 2018 அன்று, கதுவா முதன்மை அமர்வு நீதியரசரின் முன் துவங்கியது. இரண்டாம் கட்ட விசாரணை ஏப்ரல் 28, 2018 இல் நடைபெறவுள்ளது.[36][37] இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 27, 2018 அன்று சண்டிகருக்கு மாற்றுவது தொடர்பாக சம்மு காஷ்மீர் அரசின் கருத்தினை இந்திய உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.[38]
வழக்கினை சிபிஐக்கு மாற்றும்படி ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியினரால் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது.[39][40][41]