சம்மு நகரம்(Jammu)இந்தியாவின்சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள சம்மு மாவட்டத்திலுள்ள ஒரு மிகப்பெரிய நகரமாகும். சம்மு காசுமீரின் குளிர்கால தலைநகரான சம்மு நகரம் தாவி ஆற்றின் கரையில் 26.64 சதுரகிலோமீட்டர் பரப்பளவிற்கு பரந்து அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு வடக்கில் இமயமலையும் தெற்கில் வடக்கு சமவெளிகளும் சூழ்ந்துள்ளன. சம்மு மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நகரம் சம்மு நகரமாகும்.
மாநகராட்சியான இந்நகரின் எல்லைக்குள் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் பழைய பள்ளிவாசல்களும் ஏராலமாக உள்ளதால் சம்மு நகரம் கோயில் நகரம் என அழைக்கப்படுகிறது. மேலும் இந்நகரம் தன்னுடைய எல்லைகளை அடுத்துள்ள சம்பா மாவட்டத்துடன் பகிர்ந்து கொள்கிறது.
பெயர்க் காரணம்
உள்ளூர் பாரம்பரியத்தின் படி சம்மு அதன் நிறுவனர் இராசா சம்புலோச்சனின் நினைவாக பெயரிடப்பட்டது. அவர் 9 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்டதாக நம்பப்படுகிறது [13]. உள்ளூர் பாரம்பரியம் நகரத்தை 3000 ஆண்டுகள் பழமையானது என்கின்றன ஆனால் இதை வரலாற்றாசிரியர்கள் ஆதரிக்கவில்லை [14].
புவியியல்
இந்நகரம் 32°44′N74°52′E / 32.73°N 74.87°E / 32.73; 74.87.[15] என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள இந்நகரின் நிலப்பரப்பு சிவாலிக் மலைத்தொடரின் உயரம் குறைந்த பகுதியில் அமைந்துள்ளது. சம்முவின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு திசைகளில் சிவாலிக் மலைத்தொடரும் வடகிழக்கில் திரிகுடா மலைத்தொடரும் சூழ்ந்துள்ளன. தோராயமாக புது தில்லியில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் சம்மு நகரம் அமைந்துள்ளது.
பழைய நகரமானது வடக்கு பகுதியில் தாவி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. புதிய நகரம் தென்பகுதியில் தாவி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. பழைய நகரையும் புதிய நகரையும் தாவி ஆற்றில் கட்டப்பட்டுள்ள நான்கு பாலங்கள் இணைக்கின்றன. நகரின் உயரமான பகுதியில் உள்ள தோக்ரா அரண்மனை பழைய நகரை பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளது.
வரலாறு
கிமு 900 இல் சம்மு நகரம் உருவானது என்று எழுத்தாளர் தாரிக்-இ-அசுமி கருத்து கூறுகிறார். . துர்கரா மாநிலமும் (நவீன வடிவங்கள் "துக்கர்" மற்றும் "தோக்ரா)") இந்த நேரத்திலிருந்ததாக சான்றளிக்கப்படுகின்றன[16][17]. அந்த நேரத்தில் துர்காரா மாநிலத்தின் தலைநகரம் நவீன பில்லாவருடன் அடையாளம் காணப்பட்ட வல்லபுரா என்று நம்பப்படுகிறது. கல்கனரின் ராசதரங்கினியில் உள்ள அரசர்கள் இதை திரும்ப திரும்ப கூருகிறார்கள்[18]. ராசதரங்கனியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு மாநிலம் தற்காலத்தில் பாபோர் எனப்படும் பாப்பாபுரா ஆகும். இதன் சில ஆட்சியாளர்கள் பிற்கால சம்மு ஆட்சியாளர்களின் குடும்ப ஆண்டு கணக்கு எனப்படும் வம்சாவளியில் தோன்றுகின்றனர். இந்த ஆட்சியாளர்கள் ஏறக்குறைய சுதந்திரமான தகுதியை அனுபவித்து தில்லி சுல்தான்களுடன் கூட்டணி வைத்ததாக நம்பப்படுகிறது. முபாராக் சாவின் ஆதரவாளராக ராசா பீம்தேவ் தில்லி காலக்கணக்கில் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறார் [19]
தைமூரின் காலவரிசையில் சம்மு நகரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆ. 1370–1406). இவர் 1398 ஆம் ஆண்டில் தில்லி நகருக்குள் ஊடுறுவி சம்மு வழியாக சாமர்கண்டிற்கு திரும்பிச் சென்றவராவார். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாபரின் முகலாய காலத்தில் சம்மு ஒரு சக்திவாய்ந்த மாநிலம் என்று பஞ்சாப் மலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனாசு இராசபுத்திரர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். பேரரசர் அக்பர் இப்பகுதியின் மலை இராச்சியங்களை முகலாய அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார், ஆனால் மன்னர்கள் கணிசமான அரசியல் சுயாட்சியை அனுபவித்தனர்.
சம்முவைத் தவிர கூடுதலாக பிராந்தியத்தின் பிற இராச்சியங்களான கிசுத்வார் மற்றும் ராயோரி ஆகியவை முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. முகலாய சாம்ராச்சியம் இந்த மலைத் தலைவர்களை பேரரசின் கூட்டாளிகளாகவும் பங்காளிகளாகவும் கருதியது என்பது தெளிவாகிறது [20]
18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேர்ரசு வீழ்ச்சியடைந்த பின்னர் யமுவால் குடும்பத்தைச் சேர்ந்த ராசா துருவ் தேவின் கீழ் சம்மு அரசு அனைத்து துக்கர் மாநிலங்களிடையேயும் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. மலையக மாநிலங்களிடையே பரவலாக மதிக்கப்படும் அவரது வாரிசான ராசா ரஞ்சித் தேவ் (1728-1780) ஆட்சியின் கீழ் அதன் ஏற்றம் உச்சத்தை எட்டியது. ரஞ்சித் தேவ் மத சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் ஊக்குவித்தார் [21][22]. இது சம்முவில் குடியேற பல கைவினைஞர்களையும் வணிகர்களையும் ஈர்த்தது, மேலும் இதனால் சம்முவின் பொருளாதார செழிப்புக்கும் வழியேற்பட்டது.
ரஞ்சித் தேவ் ஆட்சியின் இறுதிப் பகுதியில் சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு சம்முவை கைப்பற்றினர். பாங்கி, கண்கையா, சுகெர்சாக்கியா சிற்றரசுக்களிடையில் சம்முவை கைப்பற்ற போட்டி நடைபெற்றது. 1770 ஆம் ஆண்டில் பாங்கி சிற்றரசு சம்முவைத் தாக்கி, ரஞ்சித் தேவை ஒரு துணை நாடாக மாறும்படி கட்டாயப்படுத்தினார். ரஞ்சித் தேவின் வாரிசாக தொடர்ந்த பிரிச் லால் தேவை சிகெர்சாக்கியாவின் மகான்சிங் என்ற சிற்றரசர் தோற்கடித்தார். இதனால் சுற்றுபுற நாடுகளிடம் இருந்த சம்முவின் அதிகாரம் கைவிட்டுப் போனது[23] சம்மு 1808 ஆம் ஆண்டில் சீக்கிய பேரரசுடன் இணைக்கப்பட்டது. மகான் சிங்கின் மகன் மகா ராசா ரஞ்சித் சிங் ஆட்சியுடன் இணைக்கப்பட்டது[24]