கனடிய நாடாளுமன்றம்
கனடிய நாடாளுமன்றம் (Parliament of Canada, French: Parlement du Canada) கனடாவின் கூட்டாட்சி சட்டவாக்க அவை ஆகும். இது ஒன்ராறியோ மாநிலத்தில் தேசியத் தலைநகர் ஒட்டாவாவின் நாடாளுமன்றக் குன்றில் அமைந்துள்ளது. இந்த அமைப்பின் அங்கங்களாக கனடிய அரசர் சார்பாளரான கனடியத் தலைமை ஆளுநர், ஓர் மேலவை—கனடிய செனட்டு, மற்றும் ஓர் கீழவை—கனடிய மக்களவை விளங்குகிறது.[1] ஒவ்வொன்றிற்கும் தனியான அமைப்பும் அலுவலர்களும் உள்ளனர். பிரதமரின் பரிந்துரைப்படி தலைமை ஆளுநர் செனட்டின் 105 உறுப்பினர்களையும் அழைத்துப் பொறுப்பளிக்கிறார். மக்களவையின் 308 உறுப்பினர்களும் நேரடியாக வாக்குரிமை உடைய கனடிய மக்களால் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கனடிய மக்களவைத் தொகுதிகள் பொதுவழக்கில் ரைடிங் என்றழைக்கப்படுகின்றன. அரசமைப்பு வழமைப்படி மக்களவையே நாடாளுமன்றத்தின் முதன்மையான அங்கமாக விளங்குகிறது; மேலவையோ அரசரோ அரிதாகவே அதன் செயற்பாடுகளை எதிர்க்கின்றனர். மக்களவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுகள் அரசர் அல்லது அவரது சார்பாளரின் ஒப்புமை பெற்று சட்டங்களாகின்றன. தமைமை ஆளுநர் நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்; அரசரோ சார்பாளரோ நாடாளுமன்ற அமர்வை தள்ளி வைக்கவோ கலைக்கவோ கூடும். இருவருமே அரியணை உரையை ஆற்றவியலும். 1867இல் உருவான கனடிய கூட்டமைப்பிற்குப்பிறகு 41வது நாடாளுமன்றமான தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வை தலைமை ஆளுநர் டேவிடு சான்சுட்டன் சூன் 2, 2011 அன்று கூட்டினார். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia