காமன் பண்டிகை (விழா)

பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது. பழந்தமிழ் நூல்கள் பலவும் பெருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. காம தகனம் என்றும் அழைக்கப்படும் இவ்விழாவானது காமன் கூத்து என்ற பெயரில் இலங்கையின் மலையகப் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. தற்காலக் கொச்சை வழக்கில் 'காமாண்டி' எனவும் தமிழகத்தின் சில பகுதிகளில் வழங்கப்படுகிறது.

இலக்கியங்களில் காமன் பண்டிகை

பழங்காலத்தில் 'உள்ளிவிழா' எனவும் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. அகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்து கொங்கு நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தத்தமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1].

மன்மதனுக்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஆதியில் தமிழகத்தில் இருந்திருக்கிறது. மன்மதன் கோயில் காமட்டிக் கோயில் என்று சிற்றூர் மக்களால் குறிப்பிடப்படுகிறது.

புராணப் பின்புலம்

சிவபெருமானின் தவத்தை கலைக்க பார்வதியால் அனுப்பப்பட்ட மன்மதன் என்றழைக்கப்படும் காமதேவன் காமக்கணை தொடுப்பார். இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[2]. இதைக்கண்ட மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார். கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்[3].

விழா நடைபெறும் முறை

காமன் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வானது, 'காமன் பண்டிகை திடல்' அல்லது 'காமன் பண்டிகை திட்டு' என்று வழங்கப்படும் பொது இடத்தில் நடைபெறும்[4]. இசையும் நடனமும் பாட்டும் கலந்தது குழுவாக காமன் கூத்தை நிகழ்த்துவார்கள்.

* காமன் சிலை அமைப்பு

முதலில் கோவில் அருகிலோ அல்லது தெரு முனையிலோ ஒரு சிறிய இடத்தைத் தேர்வு செய்து நான்கு கால்கள் நிறுத்தி மன்மதனுக்காக பந்தல் அமைப்பார்கள். அவ்விடம் சாணம் இட்டு மெழுகப்படும். பந்தலின் நடுவே சிறிய கம்பு ஒன்று நடப்பட்டு, அதன் மேலே வைக்கோல் பிரி சுற்றப்பட்டு, அதன் தலையில் வரட்டி வைத்துக் கட்டப்படும். மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் உருவம் காமதேவன் மன்மதனை உருவகப்படுத்தும்.

* காமன் நாடகம்/பாடல்

அடுத்த வரும் நாட்களில் இந்த நிகழ்ச்சி இரவு உணவு உண்ட பின்னிரவு நேரத்தில் நடுநிசி வரை நடத்தப்படும். மன்மதன் மற்றும் ரதி என இரு குழுவாகப் பிரிந்து பாடுவார்கள். ரதிதேவியின் சொல்லொன்னா சோகங்களைச் சுமந்த காதல் சொட்டும் பாடல்களே இந்தக் காமன் பண்டிகையின் போது தமிழ் நாட்டில் பாடப்படுகின்றது[2]. சிலர் நேர்த்திக்கடனுக்காக ஏதாவது வேடமேற்று ஆடுவதும் உண்டு.

முதல் பத்து நாட்கள் இரவெல்லாம் 'காமன் கூத்து ' எனும் நாடகம் ஏற்பாடு செய்து காமன் கதை படிப்பார்கள். இந்நாட்களில் வருவோருக்கு சுண்டல். பொரி, கடலை வழங்கப்படும். மாசிப் பௌர்ணமி நாளில் காம தகனம் நடைபெறும். காமதேவனுக்காக அமைக்கப்பட்ட பந்தல் மற்றும் காமதேவன் உருவ பொம்மை எரிக்கப்படும். காமனை எரித்த இடத்தில் மண் லிங்கம் ஒன்றைச் செய்து வைப்பார்கள். இது காமனின் சமாதி ஆகும்[5].

* மன்மதன்-ரதி திருமணம்

காமதகனத்தன்று ஊரை ஒட்டியுள்ள ஆற்றுக்குப் போய் கலசத்தில் நீர் மொண்டு கொட்டு முழக்குடன் கொண்டு வருவார்கள். உடன் வந்திருக்கிற இளைஞர்களில் திருமணமாகாத இருவரை முன்னறிவிப்பின்றி நீரில் பிடித்துத் தள்ளி குளிக்க வைத்து ரதி மன்மதன் வேடமணிய வைப்பார்கள். முன்பே சொல்லிவிட்டால் யாரும் வேடம் தரிக்க முன் வரமாட்டார்கள். ரதிக்கு எண்ணெய் கலந்த மஞ்சள் வண்ண மும், மன்மதனுக்கு பச்சை வண்ணமும் முகத்திலும் உடலிலும் பூசப்படும். அந்த வேடத்துடனே அவர்கள் கலசத்துடன் காமதகனம் நடைபெறும் இடத்துக்கு வருவார்கள். ரதி மன்மதனுடன் நெற்றிக்கண்ணால் மதனை எரிக்கப் போகும் பரம சிவனுக்கும் ஒரு இளைஞனை வேடமிடச்செய்து காவியுடையுடன் கலசத்துடன் அழைத்து வருவார்கள்.

முன்பே பந்தலில் நடப்பட்டுள்ள ஆலங்கிளையின் அடியில் பரம சிவன் உட்கார்ந்து தபசில் ஆழ்வார். அருகில் சொக்கப்பனை போன்ற அமைப்பில் ஒரு கூம்பு வடிவத்தில் கட்டப் பட்டுள்ள துவரை மிளார்களின் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட்டுள்ள படம் வைக்கப்பட்டிருக்கும். பரமசிவம் தபசிருக்கும் ஆலங்கிளைக்கும் மன்மதன் படம் உள்ள கூம்புக்கும் இடையே இரட்டைவாணம் கோத்த கயிறு கட்டப்பட்டிருக்கும். தீபாராதனை முடிந்ததும் சகடையில் ரதி மன்மதன் சுதைச் சிற்பங்கள் ஏற்றப்பட்டு எதிரே ரதி மன்மதன் வேடமிட்டவர்கள் கைகளில் வில்லேந்தி முன்னே நடக்க ஊர்வலம் புறப்படும். மதுரை நகரத்தில் ரதி மன்மதன் இருவரும் பெரிய வெள்ளை நிற யானை மீதமர்ந்து பவனி வருவர்.

* பரமசிவன் துறவு கலைப்பு

மன்மதன் பரமசிவனின் தபசைக் கலைக்கப்போகிறான். ரதி அவனிடம் அப்படிச் செய்து தன் தந்தையாகிய சிவனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று இறைஞ்சுவாள். இந்தக் கட்டத்துக்காகவே அனைவரும் காத்திருப்பர். ரதி, மன்மதன் இருவர் பக்கத்திலும் அந்தக் கட்சிக்காகப் பாடுபவர்கள் கையில் நோட்டுடன் இருப்பார்கள். முதலில் ரதியின் உருக்கமான வேண்டுதல் தொடங்கும். பாடுகிறவர் வழக்கம் போல ஒவ்வொரு அடியாய்ப் பாட பறைக்கொட்டு தொடர்ந்து முழங்கும். அப்பாடல் முடிந்ததும் பறைகள் ஒரு உத்வேகத்தொடு முழங்க ரதி வேடமிட்டவர் கையில் வில்லுடன் மன்மதனை நோக்கிப் போய்ப் போய்த் திரும்புவார். பிறகு மன்மதனின் மறுப்புப் பாடல். அதற்கேற்றபடி கொட்டு - மன்மதனின் எதிர் நடை என்று தொடரும்.

இரண்டு பக்கங்களிலும் வலுவுடைய ஒருவர் கையில் நீளத் துண்டுடன் இருப்பர். அவர்கள் துண்டை எடுத்து மன்மதன் மற்றும் ரதி வேடமிட்டவர்களின் இடுப்பில் சுற்றி துண்டின் இரு முனைகளையும் தன் கையில் வைத்திருப்பார். ரதியின் கட்சிக்காகப் பாடும்போது, மன்மத ரதியின் அருகே வருவார். உடனே துண்டைக் கையில் வைத்திருப்பவர் அதை இழுத்து மன்மதனைக் கட்டுப்படுத்துவார். இது போலவே மன்மதனுக்காகப் பாடும்போது ரதி் பக்கமும் நடக்கும்.

மன்மதன் சிவனைப் பழித்து 'அடி! உங்கப்பன் பேயாண்டி......' என்று பாடும்போது ரதி வேடமிட்டவருக்கு ஆவேசம் வந்து விடும். அதற்காகவே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இருவர் அவர் கீழே விழுந்து விடாதபடி தாங்கிப் பிடிப்பார்கள். அவருக்கு மட்டுமல்ல, முந்தைய ஆண்டில் ரதி வேடமிட்டவர் அருகில் இருந்தாலும் மன்மதனின் ஏச்சைக் கேட்டு ஆவேசமடைந்து சாமியாடுவார்கள். அவர்களையும் தாங்கிப் பிடிப் பவர்களும் உண்டு. விழட்டும் என்று விட்டுவிடுவதும் உண்டு. இப்படி நான்கு பிரதான தெருக்கள் வழியில் ஊர்வலம் தொடரும். பந்தலுக்குத் திரும்பும்வரை ரதி மன்மதன் சம்வாதம் அருமையான பாடல்களில் தொடரும்.

* காமன் தகனம்

பந்தலுக்குத் திரும்பியதும் மன்மதன் தபசிருக்கும் சிவனை நோக்கி மலர் அம்பு எய்யும் விதமாக, மன்மதன் படம் இருக்கும் பக்கத்தில் தொங்கும் இரட்டை வாணம் பற்ற வைக்கப்படும். உடனே அது 'சுர்'ரென்று சீறியபடி சிவனை நோக்கிப் போகும். மறுமுனையை அடைந்ததும் இரட்டை வாணத்தின் மறுவாணம் தானாகவே பற்றிக் கொண்டு மன்மதனை நோக்கிச் சீறிப்பாயும். சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து காமனை எரிப்பதாக அர்த்தம். காமன் படத்தின் மீது கற்பூரத்தைக் கொளுத்துவார்கள். படம் பற்றியெரிய அதைத்தாங்கி நின்ற துவரை மிலாறும் 'சட சட' வென எரியும் . அதிர் வேட்டு முழங்கி காமதகனம் முடிந்ததை ஊருக்கு அறிவிக்கும்.

பிறகு ரதி, சிவனிடம் அழுது புலம்புவதும் மன்மதனை மீண்டும் உயிப்பிக்க வேண்டுவதுமான பாடல்கள் கொட்டு முழக்குடன் தொடரும். அது ஒப்பாரி வடிவில் வெகு உருக்கமாய் இருக்கும்.

* காமன் மீள உயிர்ப் பெறுதல்

மன்மதனின் சதியாகிய ரதிதேவி அடுத்த மூன்று நாட்கள் ஒப்பாரி வைத்துப் புலம்புவாள்.மூன்று நாள் முடிந்தவுடன் மன்மதனுக்கு சிவன் மீண்டும் உயிர் கொடுத் துவிட்டதாகக் கூறி மன்மதனுக்கு மலர் பந்தல் அமைக்கப்படும். காமதேவன் உருவ பொம்மை எரித்த இடத்தில், காமன் உயிர்பெற்றதற்கு அடையாளமாக மண் லிங்கம் எடுக்கப்பட்டு பச்சை மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து வழிபடுகிறார்கள். சிலர் பச்சை பப்பாளிச் செடியையும் நடுவர். மன்மதன் உயிரோடு மீண்டும் வந்துவிட்டதைக் கொண்டாடும் வகையில் பெண்கள் அனைவரும் மாவிளக்கு வைத்து வழிபடுவார்கள்.

* காமன் விருந்து கடைசி நாள் அன்று எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று போட்டிப் பாட்டுக் கச்சேரி நடக்கும். ஒருவர் “மன்மதன் சிவபெருமான் முன் நிற்க மாட்டாமல் எரிந்து சாம்பலாயினான். அவன் மீண்டும் பிழைத்து எழுந்திருந்திருக்க மாட்டான்” என்று பாட்டுக் கட்டுவார். மற்றொருவர் “மன்மதனுடைய செயலினால்தான் சிவபெருமான் உமையவளை மணந்து கொண்டார் என்பதால் காதலுக்கு ஒரு போதும் தோல்வியில்லை, வெற்றிதான்” என்று எதிர்ப் பாட்டு பாடுவார். இருவரும் டேப் அடித்துக் கொண்டு பாடுவார்கள். கேட்கிற ரசிகர்களும் ஆளுக்கொரு பக்கம் ஆதரவு தருவார்கள்[6]. முடிவில் மன்மதன் எரிந்து போகவில்லை என்ற முடிவை அனைவரும் ஏற்று மன்மதனைப் புகழ்ந்து பாடுவர். பெருத்த கோலாகலத்துடன், 'எரிந்த கட்சி, எரியாத கட்சி'த் தர்க்கப் பாடல், ரதி மன்மதன் தேர் ஊர்வலம் ஆகியவற்றுடன் பண்டிகை முடிவடையும்.

இது போல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகக் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கோவில் வழிபாடு

திருவையாற்றிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள திருநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் கர்கடேஸ்வரரை தனது கணவர் உயிர்பெற்று எழ வரமருளுமாறு வேண்டி, சிவனது அருள் பார்வையால் ரதியின் கோரிக்கை நிறைவேறியது. இதன் பொருட்டு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமி தினத்தில் இங்கு காமன் பண்டிகை சிறப்பாக நடைபெறுகிறது. இரண்டு துண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வழிபாடு நடத்துகிறார்கள். எட்டு தினங்களுக்குள் அச்செடி மீண்டும் துளிர்விட்டு தழைப்பது இத்தலத்தின் மகிமை[7].

மன்மத தகனம் தொடர்பான எல்லாக் காட்சிகளும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம் அருகே உள்ள மண்டபத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன[8].

திரைப்படச் சித்தரிப்பு

காமன் பண்டிகையின் சில கூறுகள் 'களவாணி' திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணைகள்

  1. http://www.sishri.org/kaaman.html
  2. 2.0 2.1 http://ootru.com/neer/2008/03/post_13.html
  3. http://www.eegarai.net/t103205-topic
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-10-05.
  5. http://www.penmai.com/forums/festivals-traditions/12348-2965%3B-3006%3B-2990%3B-2985%3B-3021%3B-2986%3B-2979%3B-3021%3B-2975%3B-3007%3B-2965%3B-3016%3B.html#ixzz2gqLivMmS
  6. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18403&Itemid=139
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-01. Retrieved 2013-10-05.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-28. Retrieved 2013-10-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya