சமர்கந்து
சமர்கந்து (உசுபேகியம்: Samarqand; தாஜிக்: Самарқанд; Persian: سمرقند; சொகிடிய மொழியில்: "கற்கோட்டை" அல்லது "கல் நகரம்") என்பது உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பட்டுப் பாதையின் நடுவில் உள்ள இதன் அமைவிடம் காரணமாகவும் இசுலாமிய அறிவியலின் மிக முதன்மையான தளமாகவும் இருப்பதால் இவ்வூர் புகழ்மிக்கதாயிருக்கின்றது. 14-ஆம் நூற்றாண்டில் சமர்கந்து நகரம், தைமூர்ப் பேரரசின் தலைநகரமாயிருந்தது. தைமூரின் அடக்கத்தலமும் இவ்வூரிலேயே இருக்கிறது. இங்குள்ள புகழ்மிக்கக் கட்டிடங்களில் பீபி-கானிம் பள்ளிவாசல் குறிப்பிடத்தக்கது. 'ரசிசுத்தான்' என்பது இவ்வூரின் பண்டைய நகர மையமாகும். 2001-ஆம் ஆண்டு, சமர்கந்து - பண்பாடுகளின் கூடல் என்ற தலைப்பில் இவ்வூர் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. பெயர்க் காரணம்சமர்கந்து என்ற பெயரின் தோற்றம்பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. கல் அல்லது பாறை எனப் பொருள்படும் பழைய பாரசீகச் சொல்லான அஸ்மாரா என்பதிலிருந்து தோன்றியதே சமர்கந்து என்பதாகப் பாரசீகக் கோட்பாடுகள் கூறுகின்றன. அவ்வாறே கோட்டை அல்லது நகரம் எனப் பொருள்தரும் கந்து என்னும் சொகிடிய மொழிச் சொல்லிலிருந்து இது தோன்றியது என்ற கருத்தும் நிலவுகிறது. பாரசீக மொழியில் சமர் (முற்றம்) மற்றும் கந்து (வெல்லக்கட்டிகள்) என்ற பொருளில் அமைவதாயும் உள்ளது.[1] மக்கட்தொகை1939-ஆம் ஆண்டில் பெறப்பட்ட கணக்கெடுப்பின்படி, சமர்கந்தின் மக்கட்தொகை 134,346 ஆக இருந்தது.[2] பின்னர் 2005-இல் பெறப்பட்ட கணக்கெடுப்பின்படி, 384,000 ஆக வளர்ச்சியடைந்துள்ளது. புகாராவுடன் சேர்த்து சமர்கந்து நகரமும் நடு ஆசியாவில் தாஜிக்கு இனத்தினர் செறிந்து வாழும் இடங்களில் ஒன்றாகும்.[3] வரலாறுசமர்கந்து நகரம் உலகில் மிகப் பழைய காலந்தொட்டே மக்கள் குடியிருப்பு தொடர்ச்சியாக இருந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். இதன் அமைவு சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பண்டைய பட்டுப் பாதையில் அமைந்திருப்பதால் இவ்வூர் வணிகத்தில் பெரு வளம் கொண்டதாக இருந்தது. சில காலங்களில் சமர்கந்து நகரம் நடு ஆசியாவின் மிகப் பெரும் நகரங்களுள் ஒன்றாகவும் இருந்துள்ளது. பண்டைய வரலாறுபொதுக் காலத்துக்கு முன் 700-ஆம் ஆண்டுகளில் சொகிடியர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்நகரம் இதன் தொடக்க காலத்திலிருந்தே பாரசீகப் பண்பாட்டின் சிறப்புமிகு ஊராகத் திகழ்ந்துள்ளது. மகா அலெக்சாந்தர் கி.மு. 329-இல் இவ்வூரை வெற்றி கொண்ட போது இவ்வூரே ககாமனிசியப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த சொகிடியர்களின் தலைநகராக இருந்தது. கிரேக்கர்கள் இவ்வூரை மர்சந்தா என்ற பெயர் கொண்டு அழைத்தனர்.[4]
![]() ![]() ![]() இது பாரசீக மொழி பேசும் பகுதியாக இருந்தாலும், சாசானியப் பேரரசின் தொடக்க காலம் தவிர, செலூசியப் பேரரசுக் காலத்துக்கும் அரபு வெற்றிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒரு போதும் ஈரானியப் பகுதிகளுடன் அரசியல் அடிப்படையில் இணைக்கப்படவில்லை.[5] ஆறாம் நூற்றாண்டில், சமர்கந்து நகரம் துருக்கிய இனத்தினரின் கொகுதுருக்கி அரசின் கீழிருந்தது.[6] 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமர்கந்து நகரம் அரபியரின் கீழ் வந்தது. அப்பாசியக் கலீபகத்தின் ஆட்சியின் கீழ் சமர்கந்து இருந்த வேளை பொ.கா. 751-ஆம் ஆண்டு நிகழ்ந்த தலாசுப் போரில் கைதியாகப் பிடிபட்ட கான் சீன இனத்தினர் இருவரிடமிருந்துதான் அரபியர் காகித உற்பத்தியின் நுணுக்கத்தை அறிந்து கொண்டனர்[7]. அதன் காரணமாகவே இசுலாமிய உலகின் முதலாவது காகித ஆலை சமர்கந்தில் நிறுவப்பட வழியேற்பட்டது. அதன் பின்னரே இசுலாமிய உலகெங்கிலும் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் காகித உற்பத்தியின் நுணுக்கங்கள் தெரிய வரலாயின. ஆறாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலுமான காலப்பகுதியில் இன்றைய சமர்கந்து நகரின் அளவிலும் பார்க்க மக்கட்தொகை கூடியதாயும் அளவிற் பெரியதாயும் இவ்வூர் வளர்ச்சியடைந்தது. 1220-ஆம் ஆண்டு மொங்கோலியப் பேரரசன் செங்கிசு கான் சமர்கந்து நகரின் மீது படையெடுத்து இவ்வூரை அழிப்பதற்கு முற்பட்ட அக்காலப்பகுதியில் சமர்கந்து நகரம் மேலைத் துருக்கியர், இப்பகுதியை இசுலாமிய சமயத்துக்கு மாற்றியோரான அராபியர், பாரசீகரான சாமானியர், கான் அரசினரான துருக்கியர், சல்ஜூக்கியர், காரா கித்தானியர் மற்றும் குவாரிசமியர் ஆகியோரினால் ஆளப்பட்டது. செங்கிசு கான் இவ்வூரை அழித்தபின்னர் இவ்வூரின் மக்கட்தொகையின் மிகச் சிறிய பகுதியொன்றே தப்பிப் பிழைத்தது. அதன் பின்னர் மற்றொரு மங்கோலியரான சகத்தை கான் தன்னுடைய படைக்கு ஊதியம் வழங்குவதற்காக இவ்வூரின் வளங்களைக் கொள்ளையடிக்கும் நோக்குடன் இவ்வூரின் மீது படையெடுத்து அழித்தான். அதன் பின்னர் சமர்கந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்குப் பல பத்தாண்டுகள் கழிந்தன. மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற நூலில் மார்க்கோ போலோ பட்டுப் பாதை வழியேயான தன் பயணத்தைக் குறிப்பிடுகையில் சமர்கந்து "ஒரு மிகப் பெரிய ஒளி மயமான நகரம்..." என்று குறிப்பிடுகிறார். சமர்கந்தின் கிறித்தவ ஆலயம் தன் நடுத் தூண் நீக்கப்பட்ட பின்னரும் விழுந்து விடாமல் உறுதியாக நின்றது பற்றியும் அவர் கூறுகிறார். 14-ஆம் நூற்றாண்டுசமர்கந்தில் மொங்கோலிய ஆட்சிக்கு எதிரான கலவரமொன்று இங்கு 1365-ஆம் ஆண்டு இடம்பெற்றது.[8] இந்தியாவிலிருந்து துருக்கி வரை பரந்து விரிந்திருந்த தன் பேரரசின் தலைநகரமாக மாற்றுவதற்குத் தைமூர் 1370-இல் முடிவு செய்திருந்தார். அதன் பின்னரான 35 ஆண்டு காலப்பகுதியில் தைமூர் தாம் வெற்றிகொண்ட பகுதிகளிலிருந்தெல்லாம் கலைஞர்களையும் வடிவமைப்பாளர்களையும் கொண்டு வந்து நிறைத்து சமர்கந்து நகரை மேலும் மெருகூட்டினார். கலைகளுக்கு அனுசரணை வழங்குபவராகவே தைமூர் அப்போது புகழ் பெற்றிருந்தார். அக்காலத்திற் சமர்கந்து நகரம் எல்லாக் கலைகளினது தலைநகராகவும் விளங்கியது. அப்போது இந்நகரின் மக்கட்தொகை 150,000 ஆக இருந்தது.[9] 15-ஆம் நூற்றாண்டுசமர்கந்தில் வாழ்ந்த மிகப் பெரும் வானியலறிஞரான உலுக் பெக் 1424-1429 வரையான காலத்தில் சமர்கந்து வானிலை அவதான நிலையத்தைத் தோற்றுவித்தார். அக்காலத்தில் அதுதான் உலகின் மிகப் பெரிய வானிலை அவதான நிலையமாகத் திகழ்ந்தது.[10] எனினும், மதத் தீவிரவாதிகளால் மேற்படி வானிலை அவதான நிலையம் 1449-ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது.[10] புது வரலாறு1500-ஆம் ஆண்டு உசுபெக்குத் துருக்கியர் சமர்கந்து நகரைக் கைப்பற்றினர்.[9] அக்காலப் பகுதியிற்றான் சைபானியர் உசுபெக்கு இனத் தலைவர்களாகத் தோற்றம் பெற்றனர். 16-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியில், சைபானியர் தம் தலைநகராகப் புகாராவை மாற்றியதுடன் சமர்கந்தின் சிறப்பு குறைவடையத் தொடங்கியது. 1720-ஆம் ஆண்டளவிற் பாரசீக மன்னர் நாதிர் ஷா நிகழ்த்திய தாக்குதலின் பின்னர் இந்நகர் வளம் குன்றியது.[11] 1599 முதல் 1756 வரையான காலப்பகுதியில் சமர்கந்து நகரம் புகாராவின் ஆட்சியாளரான அசுத்தர்கானியர் மரபினரால் ஆளப்பட்டது. அதன் பின்னர் 1756 முதல் 1868 வரையான காலப்பகுதியில் இந்நகரம் புகாராவின் ஆட்சியாளரான அமீர்களான மங்கீத்து மரபினரால் ஆளப்பட்டது.[2] அதன் பின்னர் 1868-ஆம் ஆண்டு சமர்கந்து நகரின் கோட்டை உருசியர்களால் கைப்பற்றப்பட்டதுடன் இந்நகரம் உருசிய ஆளுகையின் கீழ் வந்தது. அதனைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட உருசியப் படை ஒரு முற்றுகையைச் சந்தித்தது. அப்போதைய புகாராவின் அமீரின் மூத்த மகனான அப்துல் மலிக் துரா என்பவரால் நிகழ்த்தப்பட்ட அம்முற்றுகை முறியடிக்கப்பட்ட போதிலும் உருசியப் படை பெரும் இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது. அதன் பின்னர் உருசியக் குடியேற்றங்கள் சமர்கந்து பழைய நகரின் மேற்குப் புறமாகச் சரௌசான் ஆற்றின் மருங்கில் ஏற்படுத்தப்பட்டன. 1886-ஆம் ஆண்டு சமர்கந்து நகரம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட உருசியத் துருக்கிசுத்தான் பெருவட்டத்தின் தலைநகரமாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1888-ஆம் ஆண்டு இந்நகரினூடு காசுப்பியன்-ஊடு தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டது. உசுபெக்கு சோவியத்து சமவுடைமைக் குடியரசின் தலைநகரமாக 1925-இல் சமர்கந்து நகரம் மாறியது. அதன் பின்னர் 1930-இல் தாஷ்கந்து நகருக்கு மாற்றப்பட்டது. மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளித் தொடுப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia