சியோங்னு[ɕjʊ́ŋ.nǔ] (சீனம்: 匈奴; வேட்-கில்சு: ஹ்ஸியுங்-னு) என்பவர்கள் பண்டைய சீன ஆதாரங்களின் படி கிழக்கு ஆசிய புல்வெளியில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு வரை இருந்த நாடோடி மக்களின் பழங்குடியின கூட்டமைப்பு[6] ஆகும். கி. மு. 209 க்கு பிறகு சியோங்னு பேரரசை அவர்களது உச்ச தலைவர் மொடு சன்யு நிறுவியதாக சீன ஆதாரங்கள் கூறுகின்றன.[7]
கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் போது அவர்களது முந்தைய பிரபுக்களான உயேசி, நடு ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்த பிறகு வட கிழக்கு ஆசியாவின் புல்வெளிகளில், பிற்காலத்தில் மங்கோலியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் சியோங்னு முக்கிய சக்தியாக உருவாயினர். தற்போதைய சைபீரியா, உள் மங்கோலியா, கன்சு மற்றும் சிஞ்சியாங் ஆகியவற்றின் பகுதிகளிலும் சியோங்னு செயல்பாட்டில் இருந்தனர். அண்டை நாடுகளான தென் கிழக்கில் இருந்த சீன அரசமரபுகளுடன் இவர்களது உறவு முறையானது சிக்கலானதாக இருந்தது. சண்டை மற்றும் அமைதியான காலங்கள் மாறி மாறி வந்தன. இவர்களுக்கு இடையில் கப்பம் கட்டுதல், வணிகம் மற்றும் திருமண ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
16 ராஜ்யங்களின் சகாப்தத்தின் போது இவர்கள் ஐந்து காட்டுமிராண்டிகளில் ஒருவராகக் கருதப்பட்டனர். 5 காட்டுமிராண்டிகளின் எழுச்சி என்று அழைக்கப்பட்ட சீன ஆட்சிக்கு எதிரான எழுச்சியில் இவர்கள் பங்கேற்றனர்.
சியோங்னுவை மேற்காசிய புல்வெளிகளின் பிற்கால குழுக்களுடன் அடையாளப்படுத்தும் முயற்சிகள் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. இவர்களுக்கு மேற்கில் சிதியர்கள் மற்றும் சர்மதியர்கள் இருந்தனர். சியோங்னுவின் மைய இன அடையாளமானது பல்வேறுபட்ட கருதுகோள்களின் பாடமாக உள்ளது. ஏனெனில் முக்கியமாக பட்டங்கள் மற்றும் தனிநபர் பெயர்கள் போன்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே சீன ஆதாரங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. சியோங்னு என்ற பெயர் ஹூனர்கள் அல்லது ஹுனா மக்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[8] இது ஒரு சிலரால் மறுக்கப்பட்டாலும் இவ்வாறு கருதப்படுகிறது.[9][10] பிற மொழியியல் தொடர்புகள் - அவையும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன - ஈரானிய அறிஞர்கள் உள்ளிட்டோரால் பரிந்துரைக்கப்படுகின்றன[11][12][13] மங்கோலிய,[14] துருக்கிய,[15][16] உரலிக்,[17] எனிசை,[9][18][19] திபெத்தோ-பருமிய[20] அல்லது பல இன மொழிகள்.[21]
↑Harmatta 1994, ப. 488: "அவர்களது தேசிய பழங்குடி இனங்கள் மற்றும் அரசர்கள் (ஷன்-யீ) ஈரானிய பெயர்களை கொண்டுள்ளனர். சீனர்களால் குறிப்பிடப்பட்டுள்ள சியோங்னு வார்த்தைகள் அனைத்தும் ஈரானிய மொழியான சகா மொழியிலிருந்து விளக்கப்படக் கூடியவை ஆகும். எனவே பெரும்பாலான சியோங்னு பழங்குடி இனங்கள் கிழக்கு ஈரானிய மொழியை பேசின என்பது தெளிவாகிறது."
↑Zheng Zhang (Chinese: 鄭張), Shang-fang (Chinese: 尚芳). 奴 – 上古音系第九千六百字 [奴 – The 9600th word of the Ancient Phonological System]. ytenx.org [韻典網] (in சீனம்). Rearranged by BYVoid.