சிலம்பரசன் (Silambarasan) (பிறப்பு 3 பிப்ரவரி 1983), சிம்பு அல்லது தனது பெயரின் முதலெழுத்தான எஸ்.டி.ஆர். மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டி. ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[2][3][4] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.[5]
முதன்மையாக தனது வெளிப்படையான தன்மை காரணமாக சிலம்பரசன் பல சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ளார்.[6][7]
சொந்த வாழ்க்கை
சிலம்பரசன் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் டி. ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு குறளரசன் என்ற தம்பியும் இலக்கியா என்ற சகோதரியும் உள்ளனர். சிறு வயதிலிருந்தே, இவர் சிவன் மீது தீவிர பக்தி கொண்டவராக உள்ளார்.[8]