சுடர் தொண்டைக் கொண்டைக் குருவி
சுடர் தொண்டைக் கொண்டைக் குருவி ( flame-throated bulbul) (Rubigula gularis) என்பது குருவி வரிசையில் உள்ள ஒரு பறவை ஆகும். இது கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது. இது கோவாவின் மாநிலப் பறவையாகும். இப்பறவை தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. முன்னர் இது கருங்குடுமி கொண்டைக் குருவியின் துணையினமாக சேர்க்கப்பட்டது. பின்னர் இது தனி இனம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதன் அடிப்பகுதி மஞ்சளாகவும் முதுகு ஆலிவ் பச்சையாகவும் உள்ளது. தொண்டையில் முக்கோண வடிவில் ஆரஞ்சு-சிவப்புத் திட்டும், கருப்பு தலையில் மாறுபட்டு காணப்படும் வெள்ளை விழிப்படலம் காணப்படுகிறது. இது காடுகளில் பழங்களையும் சிறு பூச்சிகளுக்காக கூட்டமாக உணவு தேடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இப்பறவையின் கரல் செம்மீசைச் சின்னானின் குரலைப் போலவே ஒலிக்கும். இந்த இனம் கடந்த காலத்தில் சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி மற்றும் கருந்தலை கொண்டைக் குருவி போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டது. ஆனால் அவை தெளிவற்ற பெயர்களாக கருங்குடுமி கொண்டைக் குருவி மற்றும் சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி போன்ற பிற இனங்களையும் குறிக்கும் பெயராக இருந்தது. விளக்கம்![]() சுடர் தொண்டை கொண்டைக் குருவி சுமார் 18 செ.மீ நீளம் இருக்கும். இதன் முதுகு ஆலிவ்-பச்சை நிறத்திலும், அடிப்பகுதி மஞ்சள் நிறத்திலும், கொண்டை இல்லாத சதுரமான கருப்பு தலையும், ஆரஞ்சு-சிவப்பு தொண்டையும் உள்ளது. வெள்ளையான விழிப்படலமானது இதன் கருத்த தலையில் மாறுபட்டுக் காணப்படும். கால்கள் பழுப்பு நிறமாகவும், அலகிடைப் பிளவு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். அலகு அடர் பழுப்பு முதல் கருப்பு வரை இருக்கும். இளம் பறவைகளின் இறகுகள் விவரிக்கப்படவில்லை.[3] பரவலும் வாழ்விடமும்தெற்கு மகாராட்டிரம் மற்றும் கோவாவில் இருந்து தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுடர் தொண்டை கொண்டைக் குருவி காணப்படுகிறது. காட்டுப் பறவையான இது காடுகளின் ஓரங்களில் அல்லது காபி தோட்டங்களுக்குள் அரிதாகவே காணப்படும்.[3] நடத்தையும் சூழலியலும்சுடர் தொண்டை கொண்டைக் குருவி சிறிய கூட்டங்களாக காணப்படும். இது பெரும்பாலும் நீரோடைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் கொண்ட பசுமையான காடுகளில் வாழ்கிறது. சுடர் தொண்டை கொண்டைக் குருவி பழங்களையும், பூச்சிகளையும் உண்கிறது, சில சமயங்களில் பிற இனப் பறவைகளுடன் கூட்டம் சேர்ந்து உணவு தேடும்.[4] மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் பருவகாலத்திற்கு ஏற்ப நகர்கிறது.[5] இவை பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் கூடு சிறிய கோப்பை வடிவில் இருக்கும். தரை மட்டத்திலிருந்து ஒன்று முதல் மூன்று மீட்டர் வரையிலான உயரத்தில் மரத்தில் கட்டுகிறது. இது தன் கூட்டை பொதுவாக மஞ்சள் நிற இலைகளால், சிலந்தி வலைகளால் பிணைத்து உருவாக்குகிறது.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia