சோ. ந. கந்தசாமி![]() சோ. ந. கந்தசாமி (பிறப்பு: திசம்பர் 15, 1936) சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர். இவர் 2013-2014 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர்[1] வாழ்க்கைக் குறிப்புஅறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கில வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் தமிழ்நாடு, அரியலூர், உடையார்பாளையம் வட்டம், செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் செங்குந்தர் மரபில் பிறந்தார். பெற்றோர் சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளாதாரம்) (1958) பயின்றார். எம்.லிட் (1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ. பொ. மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் (1979-85), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர். கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை துணைவியாக ஏற்றுக்கொண்டவர். கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும், பெண்மக்கள் நால்வரும் உள்ளனர். இயற்றிய நூல்கள்இவர் இந்து நாளிதழில் முப்பத்தைந்து ஆண்டுகளாக நூல் மதிப்புரைகளை எழுதி வருகிறார். இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கலாம். இலக்கிய நூல்கள்
திறனாய்வு
மொழிபெயர்ப்பு
இலக்கணம்
மொழியியல்
தத்துவம்
வேறு பணிகள்அறிஞர் சோ.ந.கந்தசாமி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிந்துள்ளார். இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார். விருதுகள்இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர். திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவரது நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருதும் பெற்றார். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி, குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர், திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி, மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு இந்தியக் குடியரசுத்தலைவர் 2013-2014 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதை அளித்தார்[1] ஓய்வுஅலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும்,எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள இவர் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia