ஜஸ்டின் துரூடோ
ஜஸ்டின் பியேர் யேம்சு துரூடோ (Justin Pierre James Trudeau; பிறப்பு: 25 திசம்பர் 1971) ஒரு கனடிய அரசியல்வாதி. இவர் 2015 முதல் மார்ச் 2025 வரை கனடாவின் 23-ஆவது பிரதமராகப் பதவியில் இருந்தார். கனடா லிபரல் கட்சியின் உறுப்பினரான இவர், அக்கட்சியின் தலைவராக 2013 முதல் 2025 வரை பணியாற்றினார். 2008 முதல் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். துரூடோ ஒண்டாரியோ, ஒட்டாவாவில் பிரதமர் பியேர் துரூடோவிற்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[1] மக்கில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், பிரிட்டீசுக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வியியல் இளங்கலைப் பட்டமும் பெற்றார். அதன் பின்னர் வான்கூவரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] 2002 இல் மேற்படிப்பிற்காக மொண்ட்ரியால் திரும்பினார். துரூடோ கட்டிமாவிக் என்ற இளைஞர் தொண்டு நிறுவனத்தின் தலைவராகவும், இலாப நோக்கற்ற கனடிய பனிச்சரிவு சங்கத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.[3][4] 2006 ஆம் ஆண்டில், அவர் லிபரல் கட்சியின் இளைஞர் செயலாக்கக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5][6] 2008 நாடாளுமன்றத் தேர்தலில், பாப்பினோவ் தொகுதியில் போட்டியிட்டுத் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[7] 2009 இல் இளைஞர் மற்றும் பன்முக கலாச்சாரத்திற்கான லிபரல் கட்சியின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் திறனாய்வளராக இருந்தார்; 2013 இல், துரூடோ லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[8] 2015 தேர்தலில் கட்சியை பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இட்டுச் சென்று, கனேடிய வரலாற்றில் இரண்டாவது இளைய பிரதமரானார்.[9][10] துரூடோ தனது முதல் பதவிக்காலத்தில் மேற்கொண்ட முக்கிய அரச முயற்சிகளில், கனடியக் குழந்தை நலனை நிறுவுதல், இறப்பதில் மருத்துவ உதவியை சட்டப்பூர்வமாக்குதல், கஞ்சா சட்டத்தின் மூலம் பொழுதுபோக்கு கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குதல், செனட் நியமனங்களுக்கான சுயாதீன ஆலோசனைக் குழுவை நிறுவுவதன் மூலம் செனட் நியமன சீர்திருத்தத்தை முயற்சித்தல், கூட்டாட்சி கார்பன் வரியை நிறுவுதல் ஆகியவை அடங்கும். வெளியுறவுக் கொள்கையில், துரூடோவின் அரசாங்கம் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம், டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மைக்கான விரிவான, முற்போக்கான ஒப்பந்தம் போன்ற வணிக ஒப்பந்தங்ககுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2019 கூட்டாட்சித் தேர்தலில் துரூடோவின் லிபரல் கட்சி சிறுபான்மை அரசாங்கமாகப் பதவியேற்றது. அவரது அரசாங்கம் கோவிட்-19 தொற்றுநோய்த் தாக்கத்தை சமாளித்தது. 2020 நோவா ஸ்கோசியா தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக "தாக்குதல் பாணி" ஆயுதத் தடையை அறிவித்தது, மேலும் ஒரு நாளைக்கு $10 என்ற தேசிய குழந்தை பராமரிப்பு திட்டத்தைத் தொடங்கியது. WE அறக்கட்டளை ஊழலில் அவர் செய்த பங்கிற்காக நெறிமுறைகள் ஆணையரால் துரூடோ மூன்றாவது முறையாக விசாரிக்கப்பட்டார், ஆனாலும் குற்றங்களில் இலிருந்து விடுவிக்கப்பட்டார். 2021 தேர்தலில், லிபரல் கட்சியை மற்றொரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு வழிநடத்தினார். 2022 ஆம் ஆண்டில், சுதந்திரக் கூட்டாட்சி போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தினார். உருசியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உக்ரைனுக்கு இராணுவ உதவியை அங்கீகரிப்பதன் மூலம் உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பிற்குப் பதிலளித்தார். இவரது கட்சி 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய சனநாயகக் கட்சியுடன் (NDP) ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட வருமான வரம்பை பூர்த்தி செய்யும் குடியிருப்பாளர்களுக்கான கனேடிய பல் பராமரிப்புத் திட்டம், தேசிய மருந்தகத்திற்கான கட்டமைப்பு ஆகியவற்றை அமுலாக்கினார்; 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சனநாயகக் கட்சி ஒப்பந்தத்தை நிறுத்த முடிவு செய்தது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டோனால்ட் டிரம்ப் இரண்டாவது தடவையாக அறிவித்த வரிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, துரூடோ $30 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு 25% வரிகளை அறிவித்தார். திசம்பர் 2024 இல் துணைப் பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்டின் திடீர் பதவி விலகல், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை அடுத்து, 2025 சனவரி 6 அன்று, துரூடோ பிரதமர் மற்றும் லிபரல் கட்சியின் தலைவர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைமைப் போட்டியை நடத்திய அதே நேரத்தில், மார்ச் 24 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு ஆளுநருக்கு அவர் அறிவுறுத்தினார். மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்படும் வரை துரூடோ தலைவராக இருந்தார்.[11] 44-ஆவது கனடிய நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது துரூடோ நாடாளுமன்ர உறுப்பினராக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்.[12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia