ஜேம்சுடவுன், வர்ஜீனியா
ஜேம்சுடவுன் (Jamestown) என்பது அமெரிக்காக்களில் இடம்பெற்ற ஆங்கிலேயர்களின் முதலாவது நிரந்தரமான குடியிருப்பு ஆகும். வில்லியம் கெல்சோவின் கூற்றுப்படி, ஜேம்சுடவுன் "பிரித்தானியப் பேரரசு ஆரம்பமான இடம்... இதுவே பிரித்தானியப் பேரரசின் முதலாவது குடியேற்றம்."[1] இலண்டன் வர்ஜீனியா கம்பனியினால் 'ஜேம்சு கோட்டை' (James Fort) என்ற பெயரில் (பழைய நாட்காட்டியில்) 1607 மே 4 அன்று, (புதிய நாட்காட்டி, 1607 மே 14) நிறுவபட்டது.[2]. இது நிரந்தரமான குடியேற்றமாக அறிவிக்கப்பட்டது. 1610 இல் சிறிது காலம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. ஜேம்சுடவுன் இக்குடியேற்ற நாட்டின் தலைநகராக 1616 முதல் 1699 வரை 83 ஆண்டுகள் வரை இருந்து வந்தது. ஜேம்சுடவுனின் பழங்குடியினர் ஆரம்பத்தில் குடியேறிகளை வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். ஆனாலும், மூன்று ஆண்டுகளுக்குள் இரு பகுதிகளுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டு, மோதல்கள் இடம்பெறலாயின. குறிப்பாக பசுப்பாகெக் மக்கள் 1611 ஆம் ஆண்டளவில் முற்றாகவே அழிக்கப்பட்டனர். அத்துடன், நோய், பஞ்சம் போன்றவற்றால் 80% குடியேறிகள் 1609-10 காலப்பகுதியில் இறந்தனர்.[3] 1608ஆம் ஆண்டில் வர்ஜீனியா கம்பனி இரண்டாவது தடவையாக கப்பல் ஒன்றை அனுப்பியது. இம்முறை போலந்து, மற்றும் செருமனியைச் சேர்ந்த எட்டுப் பேர் குடியேறிகளாக வந்தனர். இவர்களின் உதவியுடன் அங்கு ஒரு சிறிய கண்ணாடித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், செருமானியர்களும், வேறும் சிலரும் தமது ஆயுதங்களுடனும்ம் மற்றும் பொருட்களுடனும் பவுகாட்டன் என்ற உள்ளூர் இந்தியர்களுடன் இணைந்தனர்.[4][5][6][7] இந்த இரண்டாவது கப்பலில் முடற்தடவையாக இரண்டு ஐரோப்பியப் பெண்களும் வந்தனர்.[4][5] 1619 ஆம் ஆண்டில், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏறத்தாழ 50 ஆப்பிரிக்கர்கள் போர்த்துக்கீசக் கப்பல் ஒன்றில் அடிமைகளாக வந்தவர்கள் மேற்கிந்தியத் தீவுகளில் சிறைப்பிடிக்கப்பட்டு ஜேம்சுடவுனிற்குக் கொண்டு வரப்பட்டனர். ஆரம்பத்தில் இவர்கள் ஒப்பந்தக் கூலிகளாக புகையிலை வேளாண்மையில் ஈடுபடுத்தப்பட்டனர்.[8] இலண்டன் கம்பனியில் இரண்டாவது குடியேற்றத் திட்டமான பெர்முடா ஆங்கிலேயரின் புதிய உலகத்தின் மிகப் பழமையான "நகரம்" எனப் பெயர் பெற்றது. 1612 ஆம் ஆண்டில் பெர்முடாவின் சென் ஜோர்ஜசு நகரம் அதிகாரபூர்வமாக புதிய இலண்டன் என அழைக்கப்பட்டது. அதேவேளையில், வர்ஜீனியாவின் ஜேம்சு கோட்டை 1619 ஆம் ஆண்டிலேயே ஜேம்சுடவுனாகப் பெயர் மாற்றம் பெற்றது.[9] 1676 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒகிளர்ச்சியின் போது இந்நகரம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, சிறிது காலத்திலேயே மீளப் புனரமைக்கப்பட்டது. 1699 இல் இதன் தலைநகரம் வர்ஜீனியாவின் இன்றைய வில்லியம்சுபர்க் நகருக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து ஜேம்சுடவுனின் குடியேற்றத்திட்டம் அழிக்கப்பட்டு, இன்று அப்பகுதி ஒரு தொல்பொருட்காட்சியகமாகப் பேணப்படுகிறது.[10] மேற்கோள்கள்
உரிப்பு:
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia