டேல் ஸ்டெய்ன்
டேல் வில்லியம் ஸ்டெய்ன் (Dale Willem Steyn (/ˈsteɪn/; பிறப்பு :27 சூன், 1983) என்பவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர் ஆவார். இவர் இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியுள்ளார். டைடன்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் மணிக்கு 145 முதல் 146 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுவார். 2010 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சார்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மணிக்கு 156.2 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதே இவரின் அதிகவேக பந்துவீச்சு ஆகும். சனவரி 3, 2015 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 155.7 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதே சர்வதேச போட்டிகளில் இவரின் அதிகவேக பந்துவீச்சு ஆகும். இதன்மூலம் நான்காவது அதிவேக பந்துவீச்சு வேகமான லசித் மாலிங்காவின் சாதனையை சமன் செய்தார்.[1]மார்ச் 2, 2008 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவிரைவாக 100 இலக்குகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார் .[2] அனைத்துக் காலத்திற்குமான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.மேலும் இவரின் தலைமுறை வீரர்களில் சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் வரலாற்றில் 10,000 பந்துகளுக்கும் மேல்வீசிய பந்து வீச்சாளர்களில் சிறந்த சராசரியைக் கொண்டுள்ளார்[3]. 2007-2008 ஆம் ஆண்டில் 78 இலக்குகளை வீழ்த்தினார். பந்து வீச்சு சராசரி 16.24 ஆகும்.[4] இதன்மூலம் ரவிச்சந்திரன் அசுவின் சாதனையை சமன் செய்தார். மேலும் இதே ஆண்டிற்கான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் விருதினைப் பெற்றார்[5]. 2013 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.[6] சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விசுடன் வீரருக்கான விருதை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் வழங்கியது.[7][8][9] 2008 முதல் 2014 ஆம் ஆண்டிற்கு இடையிலான 263 வாரங்கள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வலது கை புறத்திருப்ப பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் 214 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான அலன் டொனால்ட் , வெர்னன் ஃபிலான்டெர், மோர்னி மோர்க்கல் மற்றும் ஸ்டெய்ன் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த விரைவு வீச்சாளர்கள் எனக் கூறியுள்ளார்.[10] 2014 ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான பிளெண்டட் எனும் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.[11] இந்தியன் பிரீமியர் லீக்இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் மூன்று பருவகாலங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். இதன் நான்காவது பருவகாலத்தில் மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி இவரை 1.2 மில்லியனுக்கு ஏலத்தில் எடுத்தது. பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடினார். 2016 இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் லயன்சு அணி இவரை 22.3 மில்லியனுக்கு ஏலத்தில் எடுத்தது.[12] ஐ பி எல்லில் இவரின் பந்துவீச்சு சராசரி 6.72 ஆகும். இந்தியன் பிரீமியர் லீக் தரவரிசையில் சராசரி அடிப்படையில் இவர் ஏழாவது இடத்தில் உள்ளார்.[13] சான்றுகள்
வெளியிணைப்புகள்கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: டேல் ஸ்டெய்ன் |
Portal di Ensiklopedia Dunia