தம்பிலுவில் கல்வெட்டு![]() தம்பிலுவில் கல்வெட்டு என்பது, கிழக்கிலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் கிடைத்த தூண் கல்வெட்டு ஆகும். இது, ஏழாம் விஜயபாகு மன்னனால் சிவஞான சங்கரர் கோவிலுக்கு "வோவில்" எனும் நீரேரி தானமாக வழங்கப்பட்டமையைக் குறிப்பிடுகின்றது.[1][2] கண்டுபிடிப்புதம்பிலுவில் அம்மன் கோவிலில் கேட்பாரற்றுக் கிடந்த இக்கல்வெட்டை, 1800களின் பிற்பகுதியில், பிரித்தானிய இலங்கை அரசில் பணி புரிந்த "கியூ நெவில்" என்பவர் அடையாளங்கண்டுகொண்டார்.[1] கல்வெட்டில் மயில் பொறிக்கப்பட்டிருப்பதால்,இது திருக்கோவில் முருகன் கோவிலைக் குறிக்கும் என்று கருதி, கியூ நெவில், இக்கல்வெட்டை எடுத்துச் சென்று, அம்மன் கோவிலுக்கு சற்றுத் தள்ளியுள்ள திருக்கோவில் ஆலயத்தில் கொண்டுசென்று வைத்திருக்கிறார்.[3] இன்றும், அது அங்குள்ள ஏனைய கல்வெட்டுகளுடன் வைத்துப் பேணப்படுகின்றது. கல்வெட்டுசுமார் ஐந்தடி உயரமான சற்சதுர வடிவான கற்றூணொன்றின்.ஒருபுறம் வேலும் சூலமும், மறுபுறம் மயிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றது. எஞ்சிய இருபுறங்களில் இதன் கல்வெட்டு வாசகம் காணப்படுகின்றது. "ஸ்ரீ சங்கபோதி பருமரான திறிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விசயபாகு தேவற்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் 20 தியதி,சிவஞான சங்கரர் கோவிலுக்குக் கொடுத்த வோவில். இந்த தன்மத்துக்கு அகித்தம் செய்தானாகில் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடையக் கடவராகவும்"[4] வாசகம் பற்றிய கருத்துவிசயபாகு எனும் மன்னன், "வோவில்" என்பதைத் தன் பத்தாம் ஆட்சியாண்டின் தை இருபதாம் நாளில், சிவஞான சங்கரர் கோவிலுக்குத் தானம் கொடுத்ததை இச்சாசனம் குறிப்பிடுகின்றது. கோட்டை இராச்சியத்தை பொ.பி 1509-1521 வரை ஆண்ட ஏழாம் விஜயபாகு மன்னனே இச்சாசனத்தை அமைத்ததாக, பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1][3][5] இக்கல்வெட்டு கிடைத்த தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம், முன்பு "சிவஞானசங்கரர் கோவில்" என்ற பெயரில் சிவன் கோவிலாக விளங்கியதா என்பதை உறுதிப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை.[6] இதிற் குறிக்கப்பட்டுள்ள "வோவில்" என்பது, மட்டக்களப்பின் அக்கரைப்பற்றுப் பகுதியில், தம்பிலுவில்லில்இருந்த மிகப்பெரிய நீரேரி எனும் குறிப்பு, ஒல்லாந்தர் கால இலங்கை வரைபடங்களில் காணப்படுகின்றது.[7] மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலிலும், சங்கமன்கண்டியருகே மனுநேய கயவாகு மன்னனால், முப்பத்திரண்டு மதகுகளுடன் இருபத்தாறு ஏரிகளை இணைத்து பெரும் ஏரி அமைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்ட குறிப்பொன்று காணப்படுகின்றது.[8][9] இன்று உவர்நீரேரியாகக் காணப்படும் "தாண்டியடிக் களப்பே" இந்த "வோவில்" ஏரி ஆகலாம். இதை விசயபாகு மன்னன் மீண்டும் கோவிலொன்றுக்குத் தானம் செய்யவேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. கோவிலுக்கு உரித்தான விவசாய நிலத்தையும், இவ்வேரியையும் வேறு யாரும் அடாத்தாகப் பிடித்திருக்கலாம்.அவர்களிடமிருந்து மன்னன் ஏரியைப் பறிமுதல் செய்து கோவிலுக்கு மீள ஒப்படைத்து, அறம் மீறினால் கங்கையோரம் பசுவைக் கொன்ற பாவம் பெறுவீர் எனத் தீச்சொல்லிட்டு இக்கல்வெட்டை மன்னன் அமைத்திருக்கலாம். மேலும் பார்க்கஅடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia