திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயமாகும். இக்கோயில், மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே 71 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பண்டைய மட்டக்களப்பின் முதற்பெரும் "தேசத்துக் கோவிலாக" விளங்கிய இக்கோவில், மட்டக்களப்பு மன்னரும், கிழக்கிலங்கை மக்களும் தம் தேசத்துக்கே உரிமை கொண்டாடிப் போற்றிய பழம்பெருமை வாய்ந்தது.[1] வேர்ப்பெயரியல்"திருக்கோவில்" என்ற பெயர், சாதாரண வழக்கில், சைவ -வைணவத் தமிழரால், தம் வழிபாட்டிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாடல் ஆகும். மட்டக்களப்புப் பகுதியில் ஆகமவிதிப்படி எழுந்த முதலாவது இறைகோட்டம் என்ற பொருளிலேயே, இ்க்கோவிலுக்குத் திருக்கோவில்" என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.[1] கோவிலின் சிறப்பால், அது அமைந்த தலமும் பிற்காலத்தில் 'திருக்கோவில்' என்ற பெயரைப் பெற்றது. கோவில் மட்டுமன்றி, இங்கு ஊரே திருக்கோவில்" என்று அழைக்கப்படுவது, இந்தியத் திருத்தலங்களுக்குக் கூட இல்லாத பெருமையாகவும் புனிதமாகவும் கருதப்படுகின்றது.[1](பக்.60) இவ்வாலயம் மூன்று கோபுரங்களைக் கொண்டிருந்ததால், "திரிகோவில்" என்று தமிழில் அழைக்கப்பட்டதாக இன்னொரு குறிப்புச் சொல்கின்றது.[2] திருக்கோவில் எனப் பெயர்சூட்டப்பட முன்பு, இத்தலத்தின் பெயர், "நாகர்முனை" என்பதாகும். கிழக்கிலங்கைச் சரித்திர நூலாகக் கொள்ளப்படும் மட்டக்களப்பு மான்மியம் கூட, இக்கோவிலை, "நாகர்முனை" என்றும், "கண்டபாணத்துறை" அல்லது "கந்தபாணத்துறை" என்றும் அழைக்கின்றது.[3][4] ஈழத்துப் பழங்குடிகளான இயக்கர், நாகர் என்போரில், நாகர்கள் பெருமளவு வசித்துவந்ததால், இப்பகுதி "நாகர்முனை" எனப் பெயர்பெற்றிருக்கின்றது.[5] கந்தபாணத்துறை என்பது, கந்தனின் பாணமான (ஆயுதம்) வேல் கோயில் கொண்ட துறைமுகம் ஆகலாம். வரலாறு![]() இக்கோயில் எப்போது அமைக்கப்பட்டது என்பதற்கான சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும், வாய்மொழி மரபுரைகள், திருக்கோவில், மண்டூர், உகந்தை ஆகிய மூன்று ஆலயங்களையும் சமகாலத்தவையாகக் காட்டுவதுடன், சூரபதுமனுடனும், இராவணனுடனும் இக்கோவிலைத் தொடர்புறுத்துவதுண்டு. சூரபதுமனை வதைத்தபின், மாணிக்க கங்கையில் மூழ்கியெழுந்த வேலிலிருந்து, மூன்று ஒளிக்கதிர்கள் சிந்தியதாகவும், அவை மேற்கூறிய மூன்று கோயில்களிலும் அமர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது.[1] அதைக்கண்ட அப்பகுதியில் வாழ்ந்த வேடர்கள் அவ்வேலுக்குக் கொத்துப்பந்தரிட்டு வழிபட்டு வந்ததாகவும், பின் "மனுராசா" எனும் அரசன் இன்றைய கோயிலைக் கட்டியதாகவும் அம்மரபுரை நீள்கின்றது. வேடர்களால், மிகப்பழங்காலந்தொட்டே வேல் வழிபாடு இடம்பெற்று வந்த தலம் இது என்பது மேற்கூறிய மரபுரையால் பெறப்படுகின்றது. நாகர்முனை சுப்பிரமணியர் கோவிலை, "மநுநேய கயவாகு" எனும் மன்னனே முதலில் கற்கோயிலாகக் கட்டியதாக மட்டக்களப்பு மான்மியமும் கூறுவதால், மனுராசா பற்றிய மூதிகமும் உண்மை ஆகலாம். பெரும்பாலும், இலங்கை, சோழராட்சியின் கீழிருந்த 10ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டிலேயே, இக்கோவில் கற்றளியாகக் கட்டப்பட்டிருக்கின்றது எனக்கொண்டால் அது தவறாகாது. சோழரை அடுத்து வந்த மாகோன், பாண்டியர் போன்றோருடன் இவ்வாலயம் அதிகளவு சேர்த்தே சொல்லப்படுவதால், இது உண்மையே என உறுதிகூறலாம்.[1] திருக்கோவில் விமானத்தில், பாண்டியர் கலை மரபைக் காணமுடிவதும், இவ்வாதத்துக்கு வலுச்சேர்க்கின்றது. பின், மட்டக்களப்புச் சிற்றரசர்களாலும், இலங்கையைப் பிற்காலத்தில் ஆண்ட கண்டி மன்னர்கள், கோட்டை மன்னர்கள் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர். கோட்டை மன்னர்களில் ஒருவனான ஏழாம் விஜயபாகுவால் (1513–1521) அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு "வோவில்" எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது.[6] கடலோரத்தில் கம்பீரமாக அமைந்திருந்த இக்கோவில், இலங்கையைக் காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்த ஒல்லாந்தரையும் போர்த்துக்கேயரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. ஒல்லாந்து வரைபடங்களும், ஆங்கிலேயப் பயணக் குறிப்புகளும் இக்கோவிலை "ட்ரிங்கோலி பெகோடா", "பெகோடா ட்ரிகோய்" என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.[7][8] 1610-20களில், போர்த்துக்கேய தளபதி ஜெரனிமோ டி.அசவீடோவால் ஆலயப் பூசகர்கள் கொன்றழிக்கப்பட்டு, இவ்வாலயம் இடித்துக் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.[2] எனினும், கற்றளிக் கருவறை, இன்றும் பெருஞ்சேதாரமின்றிக் காணப்படுவதால், முன்பு குறிப்பிட்ட புகழ்பெற்ற மூன்று கோபுரங்களுமே இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன என்று கொள்ளமுடியும். தேசத்துக் கோவில்![]() முழு மட்டக்களப்புத் தேசமுமே உரிமைகொண்டாடிய கோவில் என்பதால், இது ""தேசத்துக்கோவில்" என்று அழைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் பூசனை புரியும் உரிமை பெற்ற மக்கள், தெற்கே பாணமையிலிருந்து, வடக்கே கல்லடி நாவற்குடா வரை வாழ்ந்து வந்ததை பழைய குறிப்புகள் சொல்கின்றன.[9] மட்டக்களப்பின் இன்னொரு தேசத்துக் கோவிலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் கருதப்படுகின்றது. தேசத்துக் கோவில் மாத்திரமன்றி, திருக்கோவில் "திருப்படைக் கோவில்"களிலும் ஒன்றாகும். திருப்படைக் கோவில் என்பது, மட்டக்களப்புச் சிற்றரசரின் மானியம் பெற்று வந்த பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களாகும். தான்தோன்றீச்சரம், சித்தாண்டி, மண்டூர், உகந்தை, கோவில் போரதீவு, வெருகல், திருக்கோவில் ஆகிய ஏ்ழு ஆலயங்களும், மட்டக்களப்பின் ஏழு திருப்படைக்கோயில்களாகக் கொள்ளப்பட்டுகின்றன.[1] இவற்றில் தான்தோன்றீச்சரம் தவிர்ந்த ஆறும் முருகன் கோவில்கள் என்பது சிறப்பு. தீர்த்தம்திருக்கோவில் ஆலயத்தின் திருவிழா, ஆடி அமாவாசைக்கு பதினெட்டு நாட்கள் முன்தொடங்கி, அமாவாசை அன்று, தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறுகின்றது. ஆடி அமாவாசையன்று, இலட்சக்கணக்கில் திருக்கோவிலில் அடியார் கூடும் இந்நிகழ்வு, தென்கிழக்கிலங்கையில் "தீர்த்தம்" அல்லது "தீர்த்தக்கரை" என்றே அறியப்படுவதுடன், அன்று, திருக்கோவில் சமுத்திரத்தில் நீராடுவது, புண்ணியம் சேர்க்கும் என்ற நம்பிக்கையும் அடியவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. கி.பி 1602 யூலை மாதத்தில் இவ்வாறு இடம்பெற்ற திருக்கோவில் தீர்த்தத்திற்கு மட்டக்களப்பு மன்னரும் மக்களும் சென்றுவிட்டதால், தம்மால் வாணிபம் செய்ய முடியவில்லை என்ற குறிப்பை, ஒல்லாந்துப் பெருவணிகரான "யொகான் ஃகேர்மன் வொன் வ்ரீ" என்பவரின் நாட்குறிப்பில் காணமுடிகின்றது.[8] மேலும் பார்க்கஅடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia