திருமலை ரெகுநாத சேதுபதி

திருமலை சேதுபதி

திருமலை ரெகுநாத சேதுபதி (கி.பி. 1645 - 1676) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார்.[1] இவர் தளவாய் சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்து 31 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவர் தளவாய் சேதுபதியின் தங்கை மகனாவார்.

வாரிசு உரிமை

தளவாய் சேதுபதி மன்னர் ஆண்வாரிசு இல்லாமல் இறந்து போனதால் சேதுநாட்டின் அரசுரிமை யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. சேதுபதிப் பட்டத்திற்கு மறைந்த மன்னர் தளவாய் சேதுபதியின் தங்கை மக்களான தனுக்காத்த தேவர், நாராயணத் தேவர், திருமலைத் தேவர் ஆகிய மூவர்களில் ஒருவரை சேது மன்னராக ஆக்குவதற்கு அரண்மனை மூத்தவர்கள் ஏற்பாடுகளைச் செய்துவந்தனர். இதனை அறிந்த கூத்தன் சேதுபதியின் மகனும் இதற்கு முன்பே மன்னர் பதவிக்கு உரிமை கோரியவருமான தம்பித்தேவர் மதுரை திருமலை நாயக்க மன்னரிடம் தன்னை சேதுநாட்டின் மன்னராக ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி திருமலை நாயக்கர் சேதுநாட்டு அரசியலில் தலையிட்டார். தம்பித் தேவரையும் அவரது எதிர்த் தரப்பினரான தனுக்காத்த தேவர் முதலியோரையும் அழைத்துப் பேசி திருமலை நாயக்கர் தன் சமரசத் தீர்வை அவர்களிடம் முன்வைத்தார். இதன்படி ஏற்கனவே காளையார் கோவில் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த தம்பித் தேவருக்கு அந்தப் பகுதியினை ஆளும் உரிமையினையும், தனுக்காத்த தேவருக்கு சேதுநாட்டின் வடகிழக்குப் பகுதியான அஞ்சுகோட்டை பகுதியையும், திருமலை ரெகுநாதத் தேவர் இராமநாதபுரம் கோட்டை உள்ளிட்ட தென் பகுதியையும் ஆள வேண்டும் என சேதுநாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்தார்.

இதன்படி தங்களது ஆட்சியினை மூவரும் தொடங்கினார்கள். ஆனால் கொஞ்ச காலத்தில் காளையார் கோவிலில் தம்பித்தேவரும், அஞ்சுக்கோட்டையில் தனுக்காத்தத் தேவரும் அடுத்தடுத்து, காலமானார்கள். அவர்களுக்கு உரிய வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அந்த இரு பகுதிகளும் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சியின் கீழ் வந்தன.

போர்கள்

மதுரை திருமலை நாயக்கரின் எழுபத்து இரண்டு பாளையக்காரர்களில் ஒருவரான எட்டையபுரத்துப் பாளையக்காரர் மதுரை மன்னருக்கு எதிராக தன்னுடன் சில பாளையக்காரர்களை அணி திரட்டி கலகக்கொடி உயர்த்தினார். இவர்களை முறியடிக்க திருமலை நாயக்க மன்னரின் அழைப்பையடுத்து திருமலை ரெகுநாத சேதுபதி தன் படைகளுடன் சென்று, எட்டயபுரம் பாளையக்காரரையும் அவரது கூட்டணியையும் முறியடித்து எட்டையபுரம் பாளையக்காரரைக் கைது செய்து மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் நிறுத்தினார்.

கி.பி. 1658ல் திருமலைநாயக்கர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தார். அப்போது மைசூரிலிருந்து மாபெரும் கன்னடப் படையொன்று மதுரையைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் வந்துகொண்டிருந்தது. இதையடுத்து திருமலை ரெகுநாத சேதுபதி 15,000 மறவர்களுடன் மதுரைக்கு விரைந்தார். மதுரைப் படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று கன்னடப் படைகளை அம்மைய நாயக்கனுரை அடுத்த பரந்த வெளியில் கன்னடியரின் பிரம்மாண்டமான படை அணிகளைத் தாக்கி அழித்து வெற்றி கொண்டார். இதனால் மனம் மகிழ்ந்த திருமலை நாயக்கர் மதுரைக் கோட்டையில் திருமலை ரெகுநாத சேதுபதிக்கு மிகச் சிறந்த வரவேற்பினை வழங்கிப் பரிசுப் பொருள்களை அளித்துப் பாராட்டினார். மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய மதுரை அரசின் பகுதிகளையும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பித்தார். மேலும் ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் மதுரை மாநகரில் திருமலைநாயக்க மன்னர் நடத்தி வந்த நவராத்திரி விழாவினைச் சேது நாட்டிலும் நடத்தி வருமாறு சொன்னதுடன் அந்த விழாவிற்கு மூலமாக அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மனின் பொன்னாலான சிலை ஒன்றினையும் சேதுபதி மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

நாட்டு எல்லை விரிவாக்கம்

சேதுபதி மன்னர் தன் நாட்டு எல்லையை விரிவாக்கும் நோக்கில் சேதுநாட்டின் வடபகுதி கிழக்குக் கடற்கரை வழியாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டைச் சீமைகளைக் கடந்து திருவாரூர்ச் சீமை, கள்ளர் சீமை ஆகியவைகளையும் சேதுநாட்டில் இணைத்துச் சேதுநாட்டின் பரப்பை விரிவுபடுத்தினார்.

திருப்பணிகள்

இந்த மன்னர் தன் முன்னோர்களைப் போல இராமேஸ்வரம் கோயில் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டினார். குறிப்பாக இந்தக் கோயிலின் நீண்ட விசாலமான இரண்டாவது பிரகாரத்தினை அமைக்க முடிவு செய்தார். அதன்படி இலங்கை கண்டி இராச்சிய மன்னரின் அனுமதியுடன், திரிகோணமலைக்கு ஸ்தபதிகளையும், கல் தச்சர்களையும் அனுப்பி அங்கேயே திருப்பணிக்கு தேவையான கல்துண்களையும், பொதிகைக் கட்டைகளையும், மூடு பலகைகற்களையும் தயாரித்துப் பெரிய தோணிகளில் இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து இறக்கி திருப்பணி வேலைகள் செய்தார். இந்தப் பணிகளைக் கண்காணிக்க ஏதுவாக இராமேஸ்வரம் வடக்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு அரண்மனை ஒன்றை தனது இருப்பிடமாக அமைத்தார். ஆண்டில் பெரும்பாலான பகுதியை மன்னர் இந்த மாளிகையிலேயே கழித்தார்.

மறைவு

இந்த மன்னர் கி.பி. 1676ல் இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணித் திருக்கோயிலின் தேர்த் திருவிழாவில் வடம்பிடித்துப் பெருமாளையும், தாயாரையும் வணங்கிய நிலையில் மரணமடைந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. "Sethupathi Tondaimans". The History of Tamil Nadu.
  2. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி". நூல். சர்மிளா பதிப்பகம். pp. 31–39. Retrieved 21 சூன் 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya