திருவருள் காளீசுவரர் சுப்பிரமணியசுவாமி கோயில், மலையக்கோயில்

திருவருள் காளீசுவரர் சுப்பிரமணியசுவாமி கோயில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில், நற்சாந்துபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் மலையக்கோயில் என்னுமிடத்தில் மலையில் அமைந்துள்ள சிவன் மற்றும் முருகன் கோயிலாகும்.[1] புதுக்கோட்டையில் இருந்து மலையக்கோவிலுக்கு நேரடியாக நகரப் பேருந்து வசதி உள்ளது.[2]

அமைப்பு

மலையக்கோயில் முன்னர் ‘ஒருக்கொம்பு மலை’, ‘குறிஞ்சி கொத்த நாவல் குறிச்சி’, ‘திருநாவலங்கிரி’, ‘திருவோதிக்கால்’ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சாரப்பாதை, படிவெட்டுப்பாதை என்ற இருவேறு பாதைகள் உள்ளன.[2] மலையின் கீழுள்ள கோயில் ‘கீழ்க்கோயில்’ என்றும், மலையின் மீதுள்ள கோயில் ‘மேல்கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் கிழக்கில் ஒரு குடவரைக் கோயிலும், தெற்கில் ஒரு குடவரைக் கோயில்களும், ஆக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்குக் குடவரைக் கோயிலில் ஒரு கருவறையும் அதன் நடுவில் லிங்கமும் மலைப்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரில் கிழக்கு நோக்கிய நிலையில் வலம்புரி விநாயகர் உள்ளார்.[3] இது கி.பி.2ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற குடவரைக்கோயில் ஆகும்.[1]

மலையடிவாரத்தில் சிவன்

மலையின் அடிவாரத்தில் சிவபெருமான், அம்மன், வலம்புரி நாயகர் ஆகியோர் உள்ளனர்.[3]அங்குள்ள இறைவன் திருவருள் காளீசுவரர் ஆவார். இறைவி தர்மசம்வர்த்தினி ஆவார்.[1] இறைவனை திருவேங்கை கனலீசுபவர், மலையலிங்கம் என்றும் அழைப்பர். இறைவியை தம்பிராட்டி, அறம்வளர்த்தநாயகி என்றும் அழைப்பர்.[2]

மலை மீது முருகன்

மலை மேல் சுப்பிரமணியசுவாமி உள்ளார். அருகில் ஜடாமுனீசுவரர் சன்னதி உள்ளது.[1] மலையேறியதும் அங்கு அர்த்தமண்டபத்தில் விநாயகர், உற்சவராக முருகப்பெருமான் ஆகியோர் உள்ளனர். கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியாக முருகன் உள்ளார். தென் புறத்தில் இடும்பர் சன்னதி உள்ளது. முருகன் சன்னதிக்கு அருகில் உள்ள சுனையை சரவணப்பொய்கை என்றழைக்கின்றனர்.[3]

திறந்திருக்கும் நேரம்

காலசந்தி (காலை 9.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும். பௌர்ணமியின்போது பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். தைப்பூசத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  2. 2.0 2.1 2.2 முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலையக்கோவில் - புதுக்கோட்டை, மாலை மலர், 9 அக்டோபர் 2018[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 சி.வெற்றிவேல், மலை மேல் முருகன், மலையடிவாரத்தில் சிவன், விகடன், 6 மே 2020
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya