தில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடுதில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, 2021-2022ம் ஆண்டில் தில்லி அரசு புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் தொடர்பாக 30 சூலை 2022 அன்று நடுவண் புலனாய்வுச் செயலகம் விசாரணை நடத்த தில்லி துணை நிலை ஆளுநர் வி. கே. சக்சேனா ஆணையிட்டார். மேலும் தில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.[1][2] தில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை 17 நவம்பர் 2021 அன்று செயல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ் தில்லி 32 கலால் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 தனியார் மது விற்பனை நிலையங்களுக்கு சில்லறை மதுபான விற்பனை உரிமை வழங்கப்பட்டது. இக்கொள்கையால் மதுபான வணிகத்திலிருந்து தில்லி அரசு விலகியது. மது பானத்தை கறுப்புச் சந்தைப்படுத்துதலை முடிவுக்குக் கொண்டு வருதலும், அரசின் வருவாயை அதிகரிக்கவும், நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்தவும், மதுபான விற்பனையின் சமமான விநியோகத்தை உறுதிப்படுத்தவும் இப்புதிய மதுபானக் கொள்கை நோக்கமாக உள்ளது என தில்லி அரசு தெரிவித்துள்ளது. புதிய மதுபானக் கொள்கை மூலம் தில்லி அரசு மதுபான விற்பனையாளர்களுக்கு சில தளர்வுகளை வழங்கியது. அதாவது விற்பனையை அதிகரிக்க நுகர்வோருக்கு தள்ளுபடிகள் வழங்குவதற்கான அனுமதி மற்றும் மது பானத்தின் அதிகபட்ச விற்பனை விலையைப் ((Maximum Retail Price-MRP) பொருட்படுத்தாமல் மது விற்பனையாளர்கள் தங்கள் சொந்த விலைகளை நிர்ணயம் செய்வது போன்றவை அடங்கும். தில்லி அரசின் மதுபானக் கொள்கை மீதான குற்றச்சாட்டுகள்தில்லி துணை நிலை ஆளுநர் வி. கே. சக்சேனா 2021-22ல் தில்லி அரசு மதுபானக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் விதிமீறல்கள் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் தொடர்பாக பிப்ரவரி 2023ல் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார். தில்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் தில்லி துணை நிலை ஆளுநருக்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் துணை-நிலை ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.[3] தில்லி மதுபான கொள்கை முறைகேடுகள்தில்லி அரசின் தலைமைச் செயலாளரின் அறிக்கையின்படி, புதிய மதுக் கொள்கையின் கீழ் மது வணிகத்தில் கார்டெலைசேஷன் மற்றும் ஏகபோகம் நடைபெறுகிறது. புதிய கலால் கொள்கை 2021-22 இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறிய நிறுவனங்களுக்கு மதுபான உரிமங்களை சட்டவிரோதமாக விநியோகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[4] அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி, தில்லி துணை-நிலை ஆளுநரின் முன் அனுமதியின்றி மணீஷ் சிசோடியா கலால் கொள்கையில் மாற்றங்களைச் செய்தார். கோவிட் -19 தொற்றுநோய் என்ற பெயரில் உரிமங்களுக்காக தனியார் மதுபான விற்பனையாளர்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தில் ₹144.36 கோடியைத் தள்ளுபடி செய்தார். பியர் பெட்டி ஒன்றிற்கு ₹50 என்ற இறக்குமதி அனுமதி கட்டணத்தை நீக்கிய மணீஷ் சிசோடியா, வெளிநாட்டு மதுபானங்களின் விலையை மாற்றி மது விற்பனையாளர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கினார். சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின்படி, கையூட்டுக்கு ஈடாக எல்-1 உரிமங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும், வணிகர்களில் ஒருவர் மணீஷ் சிசோடியாவின் கூட்டாளியான ஒருவரால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்திற்கு ₹1 கோடி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்-1 உரிமம் வைத்திருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு கடன் நோட்டுகளை வழங்குவது, அந்த நிதியை அரசு ஊழியர்களுக்குத் திருப்பிவிடும் நோக்கத்துடன், உரிமங்களுக்குப் பதிலாக லஞ்சம் கொடுக்கும் முறை என்பதைக் காட்டுகிறது. உரிமம் பெற்றவர்கள் தங்கள் கணக்குப் புத்தகங்களில் இது போன்ற லஞ்சம் வழங்கியதற்கான பதிவுகள் மேற்கொண்டுள்ளனர். மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர்களான அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அர்ஜுன் பாண்டே ஆகியோர் மதுபான உரிமதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட லஞ்சப் பணத்தை நிர்வகிப்பதிலும், குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கு திருப்பி விடுவதில் தீவிரமாக ஈடுபட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இண்டோஸ்பிரிட்ஸ் எம்.டி சமீர் மகேந்திரு ஒரு கோடி ரூபாயை இராதா இண்டஸ்ட்ரீஸ் கணக்கு எண்ணுக்கு மாற்றியதை சிபிஐ கண்டறிந்தது. இராதா இண்டஸ்ட்ரீஸ் என்பது தில்லி துணை முதல்வரின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் அரோராவால் நிர்வகிக்கப்படுகிறது. அதே போல அர்ஜுன் பாண்டே என்பவர் சமீர் மகேந்திருவிடம் ரூபாய் 2 முதல் 4 கோடி வரை வசூல் செய்துள்ளார். சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் எல்-1 உரிமம் பெற்ற மற்றொரு நிறுவனமான மகாதேவ் லிக்கர்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்ட சன்னி மர்வா அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டது மற்றும் அவர்களுக்கு தொடர்ந்து லஞ்சம் கொடுத்தது. தில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா 27 பிப்ரவரி 2023 அன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.[5] மேலும் இவ்வழக்கு தொடர்பாக தெலங்காணா முதலமைச்சர் க. சந்திரசேகர் ராவ் மகள் க. கவிதாவை அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.[6][7] வழக்குதில்லி அரசின் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கலால் துறையை வைத்திருப்பதால், அவர் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா மதுபான விற்பனை உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாக சிபிஐ அறிக்கை குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் சிபிஐ 17 ஆகஸ்டு 2022 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மேலும் தில்லியில் உள்ள அமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட ஏழு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் ஆகஸ்ட் 19 ஆகஸ்டு 2022 அன்று 31 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. மணீஷ் சிசோடியா மற்றும் கலால் துறை அதிகாரிகள் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மதுபான வணிகத்தில் உள்ளவர்கள் "கலால் கொள்கையை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் முறைகேடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. அத்தகைய குற்றம் சாட்டப்பட்டவர்களில் விஜய் நாயர்; மனோஜ் ராய், ஒயின் மற்றும் ஸ்பிரிட்ஸ் நிறுவனமான பெர்னோட் ரிக்கார்டின் முன்னாள் ஊழியர்; பிரிண்ட்கோ ஸ்பிரிட்ஸின் அமந்தீப் தால்; இந்தோஸ்பிரிட்டின் சமீர் மகேந்திரு மற்றும் தெலங்காணா முதலமைச்சர் க. சந்திரசேகர் ராவ் மகள் க. கவிதா ஆவர். [8] இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ மணீஷ் சிசோதியா, கவிதா மற்றும் பலர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 25 ஏப்ரல் 2023 அன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.[9][10]4 மே 2023 அன்று தில்லி அரசின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்க இயக்குனரகம் 2000 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.[11][12] 6 சூலை 2023 அன்று இந்த வழக்கில் நடுவண் புலனாய்வுச் செயகத்தின் அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய தில்லி தொழிலதிபதி தினேஷ் அரோராவை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர்.[13][14] சொத்துக்கள் முடக்கம்7 சூலை 2023 அன்று அமலாக்க இயக்குனரகம் மணீஷ் சிசோடியா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் ரூபாய் 52 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை முடக்கி வைத்தது. [15][16] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia