துனித் வெல்லாளகே (Dunith Nethmika Wellalage, பிறப்பு: 9 சனவரி 2003) ஒரு தொழில்முறை இலங்கைத்துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் சூன் 2022 இல் இலங்கை தேசிய அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார்.[2]மொறட்டுவை புனித செபத்தியன் கல்லூரியிலும், மருதானை புனித யோசேப்புக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[3]
சனவரி 2022 இல், மேற்கிந்தியத் தீவுகளில் 2022 ஐசிசி 19-இற்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைவராக வெல்லாலகே நியமிக்கப்பட்டார்.[5] இச்சுற்றில் இலங்கையின் தொடக்க ஆட்டத்தில், வெல்லாளகே ஐந்து இலக்குகளை வீழ்த்தி,[6] ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இச்சுற்றில், இலங்கையின் அடுத்த போட்டியில், இவர் மற்றொரு ஐந்து இலக்குகளை எடுத்து, போட்டியின் நாயகனாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இலங்கையின் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியில், வெல்லாளகே 113 ஓட்டங்களை எடுத்தார்.[9] 19-வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் சதம் அடித்த இலங்கை அணியின் முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.[10] 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணச் சுற்றில், பதினேழு தடவை ஆட்டமிழக்கச் செய்து, முன்னணி இலக்கு வீழ்த்தாளராக முடித்தார்.[11]
2022 மே மாதத்தின் பிற்பகுதியில், இலங்கையின் ஒரு நாள் பன்னாட்டு அணியில், ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார்.[12][13] 2022 சூன் 14 அன்று இலங்கைக்காக ஆத்திரேலியாவுக்கு எதிராக தனது பன்னாட்டு ஒருநாளில் அறிமுகமானார்.[14] அடுத்த மாதம், ஆத்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இலங்கையின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[15]
சூலை 2022 இல், பாக்கித்தானுக்கு எதிரான தொடருக்காக இலங்கையின் தேர்வு அணியில் இடம் பெற்றார்.[16] 2022 சூலை 24 அன்று, பாக்கித்தானுக்கு எதிராக இலங்கைக்காக தனது முதலாவது தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்.[17]