பிரிடா காலோ (Frida Kahlo - சூலை 6, 1907 – சூலை 13, 1954) (பிறப்பு: மக்டலேனா கார்மென் பிரிடா கக்லோ யா காலெரோன்) என்பவர் பன்னாட்டளவில் புகழ் பெற்ற ஒரு மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியர் ஆவார். இவர் மெக்சிக்கோவின் உள்நாட்டுப் பண்பாட்டுச் செல்வாக்கையும்; உண்மையியம், குறியீட்டியம், அடிமன வெளிப்பாட்டியம் போன்ற ஐரோப்பியக் கலை இயக்கங்களின் செல்வாக்கையும் கொண்ட நாட்டுப்புற கலை பாணியில்; உயிர்ப்புள்ள நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்தார். பெரும்பாலான இவரது ஆக்கங்கள், அவருடைய துன்பங்களையும், பெண்ணியத் தன்மையையும் குறியீடாக வெளிப்படுத்தும் தன்னுருவ ஓவியங்கள் (self-portraits) ஆகும். மெக்சிகன் தேசிய மற்றும் பழங்குடி மரபுகளின் அடையாளமாக அவரது படைப்புகள் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது, ஆனால் இதைக்காட்டிலும் பெண் துன்பம் மற்றும் பெண் தன்மையை சமரசமற்றவகையில் சித்தரிப்பது ஆகியவற்றை பெண்ணியவாதிகளால் சிறப்பானவையாக கருதப்படுகிறது.[1]
இவரின் தந்தை ஜெர்மானியர், தாயார் ஐரோப்பிய-பூர்வீக மெக்சிகோ கலப்பினத்தைச் சேர்த்தவர், இவரது குழந்தை பருவத்திலிருந்து, வயது முதிர்ந்து வாழ்க்கை கழித்தது அவரது குடும்ப வீடான, கோயோகானில் உள்ள லா கசா அசுல் என்ற வீடாகும். இவருக்கு குழந்தைப் பருவம் போலியோவால் முடக்கப்பட்டது, மேலும் இவரது பதினெட்டு வயதில் மோசமான ஒரு விபத்தில் காயமடைந்தார், இதனால் இவர் தன் வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டார். விபத்துக்கு முன்னர், இவருக்கு மருத்துவக் கல்லூரியின் தலைமையால் மருத்துவக் கல்விக்கு உறுதியளிக்கப்பட்ட மாணவியாக இருந்தார், ஆனால் அதன்பிறகு உயர் கல்வியை கைவிட வேண்டியிருந்தது. கலையானது இவரது குழந்தை பருவத்தில் பொழுதுபோக்காக இருந்தது என்றாலும், காலம் செல்லச்செல்ல தான் ஒரு கலைஞராக மாறுவதை என்ற கருத்தை உணர ஆரம்பித்தார். மேலும் இவர் அரசியலில் ஆர்வம் கொண்டு, 1927 ஆம் ஆண்டு மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சி மூலம், சுவர்ச்சிற்பியான டியாகோ ரிவேராவைச் சந்தித்தார். அவர்கள் 1928 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர், இவர்கள் இருவரும் ஒரே அரசியல் பார்வையைக் கொண்டிருந்ததோடு, ரிவேரா, காலோவின் ஓவிய முயற்சிகளுக்கு உற்சாகமும் கொடுத்து வந்தார். காலோ பல காலமாகவே ஒரு முக்கியமான ஓவியர் என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தாலும், இவரது ஓவியங்கள் குறித்த பொது விழிப்புணர்வு 1970க்குப் பின்னரே பரவலாக ஏற்பட்டது. மேலும் காலொவின் மரணம் வரை தம்பதியராக இருந்தனர். இவர்களின் திருமண உறவு ஒத்த கொள்கையின் காரணமாக சீராக இருந்தது; அவர்கள் 1940 இல் விவாகரத்து பெற்றனர், ஆனால் அடுத்த ஆண்டே மறுமணம் செய்துகொண்டனர்.
காலோ 1920 களின் பிற்பகுதியிலும், 1930 களின் முற்பகுதியிலும் மெக்ஸிகோ மற்றும் ஐக்கிய மாகாணங்களில் ரிவேராவுடன் பயணம் செய்தார். இந்த நேரத்தில், அவர் ஒரு கலைஞராக தனது சொந்த பாணியை உருவாக்கிக்கொண்டார், மெக்சிகன் நாட்டுப்புற கலாசாரத்தில் இருந்து முக்கிய உத்வேகத்தை பெற்று வரைந்தார். கொலம்பிய மற்றும் கத்தோலிக்க புராணங்களின் கலவையான கூறுகளில் பெரும்பாலும் சிறிய தன்னுருவ ஓவியங்களை வரைந்தார். இவரது ஓவியங்கள் சர்ரியலிஸ்ட் கலைஞரான ஆண்ட்ரே பிரெட்டரின் ஆர்வத்தைத் தூண்டியது, இதனால் 1938 இல் நியூயோர்க்கில் உள்ள ஜூலியன் லெவி கேலரியில் கேலேயின் ஓவியங்களை மட்டுமே கொண்ட தனியான ஒரு ஓவியக் கண்காட்சிக்கு ஆண்ட்ரே பிரெட்டரின் ஏற்பாடு செய்தார். கண்காட்சி வெற்றிகரமானதாக ஆனது, 1939 இல் பாரிஸ் நகரில் அடுத்தடுத்த கண்காட்சி நடந்தது. பிரஞ்சு கண்காட்சி ஓரளவே வெற்றிகரமானதாக இருந்த போதும், இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து ஒரு ஓவியத்தை வாங்கி, அவரகளின் சேகரிப்பில் இடம்பெறவைத்து அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மெக்சிகன் கலைஞரின் ஓவியம் என்ற பெருமையை தந்தனர்.
1940 களில், காலோ மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிலும் கண்காட்சிகளில் கலந்துகொண்டார். மேலும் அவர் மெக்சிகோ நகரத்தில் இருந்த எஸ்குலா நேஷனல் டி பினிட்ரா, எஸ்குலூராரா ஜி கிராபடோ "லா எமரால்டா" (Escuela Nacional de Pintura, Escultura y Grabado "La Esmeralda") என்னும் ஓவியப் பள்ளியில் கற்பிக்க தொடங்கினார், மேலும் மெக்ஸிக்கோ டி கில்லாரா மெக்ஸிகானாவின் (Seminario de Cultura Mexicana) நிறுவன உறுப்பினர் ஆனார். காலோவின் உடல்நிலையானது எப்போதும் பலவீனமானமானது என்றாலும் அதே தசாப்தத்தில் உடல்நிலை பெருமளவில் குறைந்துவிட்டது. 47 வயதில் அவரது மரணத்திற்கு சற்று முன்பு, 1953 இல் மெக்சிகோவில் அவரது முதல் தனி கண்காட்சி நடந்தது.
1970 களின் பிற்பகுதி வரை காலோ பிரதானமாக ரிவோராவின் மனைவியாக மட்டுமே அறியப்பட்டார், இந்த நிலை கலை வரலாற்றாசிரியர்களாலும் அரசியல் ஆர்வர்களாலும் அவரது ஆக்கங்களைக் கண்டு மறுபரிசீலனை உள்ளாக்கப்பட்டது. 1990 களில், அவர் கலை வரலாற்றில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபராக மட்டுமல்லாமல், சிகாகோஸ் (மெக்சிகன் அமெரிக்கர் உரிமை இயக்கம்) , பெண்ணியவாதிகள் மற்றும் அகனள், அகனன், ஈரர், திருனர் (LGBTQ) இயக்கத்திற்கான ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறார்.
மெக்சிக்கோ நகரத்தின் கோயோவாக்கன் பகுதியில் உள்ள, இவர் வாழ்ந்த "நீல" வீடு இன்று ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதனை டியேகோ ரிவேரா தான் இறக்கும்போது அன்பளிப்பாகக் கொடுத்தார்.
வாழ்க்கையும் குடும்பமும்
ஃபிரிடா காலோ அவர்கள் 1907 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஆறாம் திகதி, கோயோகான் எனும் இடத்தில் உள்ள அவருடைய பெற்றோர்களின் வீடான லா கசா அசுல் (La Casa Azul) எனும் வீட்டில் பிறந்தார். மெக்சிகோ நகரின் புற எல்லையில் இருக்கும் ஒரு சிறிய நகரமே கோயோகான் ஆகும்.[2] காலோ, குடும்பத்துகுச் சொந்தமான லா காசா அசுல் (தி ப்ளூ ஹவுஸ்) இல் பிறந்தார் என்று அறிவித்தார், ஆனால் உத்தியோகபூர்வ பிறப்பு பதிவின்படி, அருகில் உள்ள தாய்வழி பாட்டியின் வீட்டில் நடந்தது. [3] காலோவின் பெற்றோர் புகைப்படக் கலைஞரான கில்லர்மோ கேஆலோ (1871-1941) மற்றும் மாட்லிடே கால்டெரோன் யே கோன்ஸாலஸ் (1876-1932) ஆகியோர். காலோவின் தந்தையான கில்லர்மோ காலோ (Guillermo Kahlo) (1871–1941) 1871 ஆம் ஆண்டில் செருமனி நாட்டில் உள்ள ப்ஃபொர்செஇம் எனும் இடத்தில் (Pforzheim) ஜகொப் ஹெயின்ரிச் காலோ (Jakob Heinrich Kahlo) மற்றும் ஹென்ரிஎட்டே கவுஃப்மான் (Henriette Kaufmann) தம்பதியினருக்கும் மகனாகப் பிறந்தவராவார். காலோவின் வாழ்க்கைக் காலத்தில், அறிக்கைகளின் மூலம் அவருடைய தந்தை ஒரு யூத இனத்தவராக அடையாளங் காணப்பட்டார்.[4][5]. எனினும் மரபுவழி ஆய்வுகள் காலோவின் தந்தை யூத மரபுவழியை சேர்ந்தவரல்லர் என சுட்டிக் காட்டுகின்றன. எனினும் அக்குடும்பம் லூதரனியக் குடும்பம் ஆகும்[6][7]
ஃபிரிடா காலோவின் தந்தை பத்தொன்பது வயதில் 1891 ஆம் ஆண்டில் மெக்சிகோவிற்குப் பயணித்தார். அத்துடன் அவரின் ஜேர்மானியப் பெயரான வில்ஹெல்ம் என்பதை கில்லர்மோ என மாற்றிக்கொண்டார். ஒரு விபத்து காரணமாக கால்-கை வலிப்பு ஏற்பட்ட பின்னர் அவரது பல்கலைக்கழக கல்வி முடிவுக்கு வந்தது. [8]
ஃபிரிடாவின் தாயார் ஸ்பானிஷ் வம்சாவளியையைச் சேர்ந்த அமெரிக்க முதற்குடிமகளான ஒரு பக்திமிக ரோமன் கத்தோலிக்கர் ஆவார்.[9] ஃபிரிடாவின் பெற்றோர்கள் கில்லர்மோவின் முதல் மனைவி இறந்த பின்னர் திருமணம் செய்து கொண்டனர். எனினும் அவர்களுடைய திருமணம் கவலையையே கொடுத்தது. கில்லர்மோ தம்பதியினருக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தன. அவர்களுள் ஃபிரிடா மூன்றாவது பிள்ளை. அவளுக்கு அதே வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். ஃபிரிடா பெண்களால் சூழப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்ந்தார். எனினும் அவரது தந்தையின் இணக்கமான விதிமுறைகளுக்கு ஏற்பவே இருந்து வந்தார்.
ஃபிரிடா மூன்று வயதில் இருக்கும் போது மெக்சிகன் புரட்சி 1910 ஆம் ஆண்டில் ஆரம்பமானது ஃபிரிடா பின் வாழ்க்கைக் காலத்தில் 1910 ஆம் ஆண்டிலேயே பிறந்ததாகக் கூறினார்.
ஃபிரிடா காலோ குத்துச்சண்டையிலும் ஏனைய விளையாட்டுக்களிலும் பங்குபற்றியுள்ளார். 1922 ஆம் ஆண்டில் காலோ முதன்மைப் பள்ளியில் சேர்ந்துகொண்டார். அவர் முப்பத்தைந்து பெண் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ஒரு கருத்து வேறுபட்ட கட்சியில் சேர்ந்துகொண்டு அவரது திறமையில் மற்றவர்கள் மயங்கிவிடுமளவிற்கு அசத்தினார்.
1927 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதியில் பேருந்து வண்டியுடன் ஒரு தள்ளுவண்டி மோதுண்டு பாரிய விபத்து நடந்தது. அதி படுகாயமடைந்தார். விபத்தின் பின்னர் தனது ஆர்வத்தை வரைதல் மேல் செலுத்தினார். இவர் மெச்சிய ஓவியரான டஜேகொ ரிவெரா (Diego Rivera) என்பவரை மணமுடித்தார். இறுதிய்ல் 1954 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 13 ஆம் திகதியன்று மரணித்தார்.
லா கசா அசுல்
மெக்சிகோ நகரில் கோயோகான் எனும் இடத்தில் உள்ளது இவ்வீடு இதிலேயே ஃபிரிடா காலோவின் பிறப்பும் இறப்பு இடம்பெற்றது. ஃபிரிடாவின் தந்தை கில்லர்மோ இவ்வீட்டை 1097 ஆம் ஆண்டில் தமது குடும்பத்திற்காகக் கட்டுவித்தார். 1937 ஆம் ஆண்டில் லியோன் திரொட்ஸ்கி எனும் அரசியல்வாதி இவ்வீட்டிலேயே தங்கினார்.
மூன்று வருடங்களின் பின் ஃபிரிடா காலோவின் இறப்பின் பின்னர் அவரது கணவனான டஜேகொ ரிவெரா 1957 ஆம் ஆண்டில் இறந்தார். அவர் அதை நன்கொடையாகக் கொடுத்தார். அதன் பின் அது ஒரு அருங்காட்சியகமாகி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடமாக மாறியது.
Baddeley, Oriana (2005). "Reflecting on Kahlo: Mirrors, Masquerade and the Politics of Identification". In Dexter, Emma (ed.). Frida Kahlo. Tate Modern. ISBN1-85437-586-5.
Barson, Tanya (2005). "'All Art is At Once Surface and Symbol': A Frida Kahlo Glossary". In Dexter, Emma (ed.). Frida Kahlo. Tate Modern. ISBN1-85437-586-5.
Deffebach, Nancy (2006). "Frida Kahlo: Heroism of Private Life". In Brunk, Samuel; Fallow, Ben (eds.). Heroes and Hero Cults in Latin America. University of Texas Press. ISBN978-0-292-71481-6.
Pankl, Lis; Blake, Kevin (2012). "Made in Her Image: Frida Kahlo as Material Culture". Material Culture44 (2): 1–20.
Panzer, Mary (2004). "The Essential Tact of Nickolas Muray". In Heinzelman, Kurt (ed.). The Covarrubias Circle: Nickolas Muray's Collection of Twentieth-Century Mexican Art. University of Texas Press. ISBN978-0-292-70588-3.
Theran, Susan (1999). Leonard's Price Index of Latin American Art at Auction. Auction Index, Inc. ISBN978-1-349-15086-1.