பொன் மீன்

பொன்மீன்

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் நன்னீர் மீன்களில் பொன்மீன் (Gold Fish) எனப்படும் மீன் மிகப் புகழ்பெற்றதாகும். சைபிரினியா (Cyprinidae) எனும் கார்ப் (Carp) குடும்பத்தைச் சேர்ந்த இம்மீனினத்தின் விலங்கியல் பெயர் கராசியஸ் ஒராட்டஸ் (Carassius auratus) என்பதாகும். இந்த இனம் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் காணப்படுகின்ற கராசியஸ் வெல்கரிஸ் (Carassius vulgaris) எனும் மீனினத்திலிருந்தே தோன்றியிருக்கிறது.

நிற வகைகள்

பொன் மீனில் பொதுவான நான்கு நிற வகைகள் காணப்படுகின்றன. நரை நிறம், கறுப்பு, சிவப்பு, நிறமற்றது என்பனவே இவ்வகைகளாகும். எனினும், இவை தவிர்ந்த வேறு நிறமுள்ள வகைகளும் அசாதாரண வடிவமுடையனவும் உண்டு. இவை பெரும்பாலும் நோய் நிலை காரணமாக ஏற்படும் வடிவ மாற்றங்களாகும். மண்டையோட்டுக்கு வெளியே நீண்டிருக்கும் விழிக்கோளங்களைக் கொண்டவை, இரட்டை வாலுடையவை, வால் இல்லாதவை, அசாதாரணமாக நீண்ட செட்டைகளை உடையவை முதலின இவ்வாறான திரிபு வடிவங்களாகும்.

நிறை

பொதுவாகப் பொன் மீன்கள் ஏனைய கார்ப் (Carp) குடும்ப மீன்களை விட நிறையில் குறைந்தவை. எனினும், 5 கிலோகிராம் வரை நிறையுடைய பொன்மீன்களும் இருந்துள்ளன.

வரலாறு

பொன்மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கும் வழக்கம் கி.பி. 960ம் ஆண்டளவில் சீனாவில் ஆரம்பமாகியிருக்கின்றது. நீண்ட வாலுடைய பொன்மீன் வகையொன்று முதன்முதலாக டச்சுக்காரர்களால் 17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனை அவர்கள் ஜாவாப் பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்.

ஆயுள் காலம்

வீடுகளில் வளர்க்கப்படும் பொன்மீன்கள் சுமார் 25 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடும். எனினும், இயற்கையாக நீர் நிலைகளில் வாழ்பவை குறைந்த ஆயுளுடையவை. பறவைகளும், நீர்வாழ் முலையூட்டிகளும், ஏனைய மீன்களும் வளர்ந்த பொன் மீன்களை இரையாகக் கொள்கின்றன. பொன்மீன் குஞ்சுகளுள் 80 சதவீதமானவை நோய்களுக்கும், நீர்வாழ் பூச்சிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி இறந்துவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya