போரிடும் நாடுகள் காலம்
![]()
போரிடும் நாடுகள் காலம் என்பது, சீனாவில், கிமு 476 ஆம் ஆண்டிலிருந்து கிமு 221ல் சின் வம்சம் சீனாவை ஒன்றிணைக்கும் வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இக்காலம், "வசந்தமும் இலையுதிர்காலமும்" என அழைக்கப்படும் காலப் பகுதியைத் தொடர்ந்து வந்த கிழக்கு சூ வம்சத்தின் இரண்டாம் பகுதி என்று கருதப்படுவதும் உண்டு. எனினும் சூ வம்சம் கிமு 256 ஆம் ஆண்டில், போரிடும் நாடுகள் காலம் முடிவதற்கு 35 ஆண்டுகள் முன்னரே முடிந்துவிட்டது. "வசந்தமும் இலையுதிர்காலமும்" காலப்பகுதியில் அரசர் சூ பெயரளவிலான தலைவராகவே இருந்தார். போரிடும் நாடுகள் காலம் என்னும் பெயர், கான் வம்சக் காலத்தில் தொகுக்கப்பட்ட ஆக்கமான போரிடும் நாடுகளின் பதிவுகள் என்னும் வரலாற்றுத் தொகுப்பில் இருந்து பெறப்பட்டது. போரிடும் நாடுகள் காலத்தின் தொடக்கம் எப்பொழுது என்பது இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. பொதுவாக இது கிமு 475 ஆம் ஆண்டு எனவே கருதப்பட்டாலும், சிலர் இது கிமு 403 ஆம் ஆண்டு என்பர். போரிடும் நாடுகள் காலத்தில், சில போர்த்தலைவர்கள் தமது ஆட்சிப்பகுதிகளைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளைக் கைப்பற்றி தமது ஆட்சியைப் பலப்படுத்தி வந்தனர். இந்த நடவடிக்கைகள் வசந்தமும் இலையுதிர்காலமும் காலப்பகுதியிலேயே தொடங்கி விட்டன. குமு மூன்றாம் நூற்றாண்டளவில் ஏழு நாடுகள் முன்னணியில் இருந்தன. இந்த ஏழு நாடுகள், கி, சு, யான், கான், சாவோ, வேயி,சின் என்பனவாகும். இந்த அதிகார மாற்றங்களைத் தலைவர்களின் பதவிப்பெயர் மாற்றமும் எடுத்துக் காட்டியது. முன்னர் சாவோ வம்ச அரசரின் கீழான "கோங்" (சிற்றரசர்கள்) என அழைக்கப்பட்ட போர்த்தைவர்கள் தங்களை "வாங்" (அரசர்கள்) என அழைத்துக் கொண்டனர். போரிடும் நாடுகள் காலத்தில் போர்த்துறையில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட வெண்கலத்துக்குப் பதிலாக சீனாவில், இரும்பு பரவத் தொடங்கியது. இக் காலத்திலேயே ஷு (இன்றைய சிச்சுவான்), யூவே (இன்றைய செசியாங்) என்னும் பகுதிகளும் சீனாவின் பண்பாட்டு பகுதிக்குள் வந்தன. பல மெய்யியல் நெறிகள் வளர்ச்சி பெற்றன. இவற்றுள் மென்சியசினால் விரிவாக்கப்பட்ட கான்பியூசியனியம், லாவோ என்பவரால் விரிவாக்கப்பட்ட தாவேயியம் என்பனவும் அடங்கும். |
Portal di Ensiklopedia Dunia