முத்து நெடுமாறன்
முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளரும், எழுத்துருவியலாளரும் ஆவார். இவர் தமிழ்க் கணிமை இயக்க முன்னோடிகளில் ஒருவர். கணினிகளில் தமிழ் எழுத உதவும் முரசு அஞ்சல், திறன்பேசிகளில் தமிழ் எழுத உதவும் செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளர், நிறுவனர் ஆவார்.[1] எழுத்துருப் பொறியாளராக கணினி, இணையம், மின்நூல், திறன்பேசி போன்ற தொழில்நுட்ப அறிமுகத்தில் தமிழைப் புகுத்தியுள்ளார். எழுத்துருவியல் கலைஞராக தமிழ் எழுத்துரு அழகியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு எழுத்துருக்கள் உருவாக்கியுள்ளார். மேலும், எழுத்துரு பயிலரங்கங்கள் நடத்துகிறார்.[2] இந்தி, மலையாளம், குஜராத்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட 13 இந்திய மொழிகளுக்கு எழுத்துருவும் உள்ளிடு முறைகளும் உருவாக்கியுள்ளார். மலேசியாவின் ஜாவி, கம்போடிய கெமிர் மொழி, சிங்களம், லாவோ, மியான்மர், தாய்லாந்திய, வியட்நாமிய மொழிகள் என தெற்காசிய தென்கிழக்காசிய மொழிகள் பலவற்றுக்கும் எழுத்துருக்களையும் உள்ளிடு முறைகளையும் உருவாக்கியுள்ளார்.[3] ஆரம்பகால வாழ்க்கைஇவரின் முழுப்பெயர் முத்தெழிலன் முரசு நெடுமாறன். இவர் முரசு நெடுமாறன், சானகி தம்பதியாருக்கு கேரி தீவில் ஜூன் 18, 1961-ல் பிறந்தார். இவர் கிள்ளான் நகரில் வளர்ந்தார். பூர்விகம் இந்தியாவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உத்திரமேரூர். மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக கண்காணிப் பணிக்காக மலேசியா சென்ற குடும்பம். இவரது தந்தை முரசு நெடுமாறன் மலேசியாவில் படித்து, ஆசிரியராக பணியாற்றினார். அவர் மலேசியாவின் தமிழ் இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.[4] கல்விமுத்து நெடுமாறன் தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளியில் தொடக்கக் கல்வியும் டத்தோ ஹம்சா பள்ளியில் இடைநிலைக் கல்வியும் பயின்றார். 1980 - 1985 வரை மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித் தொகையைப் பெற்று பொறியியலில் இளங்கலை முடித்தார். 2017 - 2018 ஆகிய ஆண்டுகளில் லண்டனில் அமைந்துள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தில் எழுத்துருவியல் துறையில் முதுகலை படிப்பை முடித்தார்.[5] பணிகல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பயிற்சிப் பொறியாளர் பணியில் சேர்ந்தார். வன்பொருளில் மாற்றம் செய்து கணினித் திரையில் எழுத்துகளை வரவைக்கும் நுட்பத்தைப் பற்றி அறிந்துகொண்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டார். பன்னாட்டுப் பெருநிறுவனமான சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பொறியாளர், சந்தைப்படுத்துதல் மேலாளர், தெற்காசிய பிராந்திய தொழில்நுட்ப சந்தைப்படுத்துதல் மேலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். [4] 1997 - 2000 வரை ஆரக்கிள் நிறுவனத்தில் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் விற்பனை விரிவாக்கத்துறை இயக்குநர் பதவியை வகித்தார். 2000ஆவது ஆண்டு மீண்டும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஆசியா பசிபிக் பகுதியின் தயாரிப்பு சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குநராக பதவி வகித்தார். 2001ஆம் ஆண்டு பன்னாட்டுப் பெருநிறுவனப் பணியில் இருந்து விலகி எழுத்துருத் துறையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.[6] எழுத்துருவியலாளர்பயிற்சிப் பொறியாளர் பணியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டும், நூல்களைப் பயின்றும், 1985ஆம் ஆண்டு முதன் முதலாகத் தமிழ் எழுத்துருவை உருவாக்கினார். எம்எஸ்டாஸ் இயங்குளத்தில் வேலை செய்யும்படி உருவாக்கிய எழுத்துரு, 1990ஆம் ஆண்டு விண்டோஸ் 3 இயங்குதளம் வெளியானபோது மேம்பாடுகண்டு அதிலும் வேலை செய்தது. கணினியில் ஆங்கிலம் எழுதக்கூடிய இடத்தில் எல்லாம் தமிழும் எழுதத்தக்க வகையில் அவருடைய எழுத்துரு வடிவமைக்கபட்டிருந்தது.[7] முரசு எனத் பெயரிட்டு பலவிதமான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். தன் எழுத்துருக்களை டாட்மேட்ரிக்ஸ், லேசர் முறையில் தமிழை அச்சிடும் நுட்பத்தையும் உருவாக்கினார். முத்து நெடுமாறனின் எழுத்துருவைப் பயன்படுத்தி முதன்முதலில் வெளிவந்தது மயல் சஞ்சிகை. அடுத்து மலேசியாவின் தமிழ் ஓசை நாளிதழ் அவருடைய எழுத்துருக்களைப் பயன்படுத்தி வெளியானது. அடுத்துடுத்து மலேசியாவில் பல சஞ்சிகைகள், நாளிதழ்கள், கடைகளின் பெயர்ப்பதாகைகள், சிங்கப்பூரில் தமிழ் முரசு உள்பட அவருடைய எழுத்துருவுக்கு மாறின.[8] முரசு அஞ்சல் உள்ளிடு முறைதமிழ் ஒலிப்பு முறையை வைத்து ஆங்கிலத்தில் தட்டெழுதினால் தமிழில் கணினித் திரையில் தெரியும் உள்ளிடு முறையை 1993ஆம் ஆண்டு உருவாக்கினார். இணையத்தில் மின்னஞ்சல் மூலம் உரையாட உதவுவதற்காக இது உருவாக்கப்பட்டதால் முரசு அஞ்சல் எனப் பெயரிட்டார். இந்த உள்ளிடு முறையின் அஞ்சல் விசைப்பலகை அமைப்பும் இணைமதி, இணைகதிர் என்கிற தன்னுடைய இரண்டு எழுத்துருக்களையும் சேர்த்து இலவசமாக வெளியிட்டார். 1996ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழ் இந்த எழுத்துருவைப் பயன்படுத்தி தனது இணைய இதழை வெளியிட்டது. அதன் முகப்புப் பக்கத்தில் முரசு அஞ்சல் தரவிறக்கம் செய்ய வழிசெய்யப்பட்டிருந்தது.[7][4] பங்களிப்புகள்1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ்நெட்97 மாநாட்டில் யூனிகோடு குறியாக்க முறையைப் பற்றிய கட்டுரையை சமர்ப்பித்தார். வருங்காலத்தில் யூனிகோடு தரப்பாடு எவ்வகையில் அவசியமானது என்பதை விளக்கியது அக்கட்டுரை.[9] 1999ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற தமிழ் இணையம்99 மாநாட்டிலும் தமிழ் உள்ளிடு முறை தரப்பாட்டை முன்வைத்து நடந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றார். டிஸ்கி (TSCII) குறியாக்க முறையும் தரப்பாடும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. பின்னர் 2007ல் இந்த தரப்பாடு அமெரிக்கத் தரப்பாட்டுக் குழுவுக்கு அனுப்பி பதிவுசெய்யப்பட்டது.[10][11][12] 2000ஆவது ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட உத்தமம்[13] அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். அருண் மகிழ்நன் நிர்வாக இயக்குநராகவும் மு. அனந்தகிருஷ்ணன் தலைவராகவும் இருந்த இவ்வமைப்பில் துணைத் தலைவராக முத்து நெடுமாறன் செயலாற்றினார். தமிழ் மாநாடுகள், இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி, எழுத்துருக் குறியாக்கம், உள்ளிடு முறைகள் தரப்பாடு போன்றவற்றுக்கு இவ்வமைப்பு பெரும்பங்காற்றியது. 2001 ஆம் ஆண்டு மலேசியாவில் நான்காவது இணையத் தமிழ் மாநாட்டினை மலேசிய அரசு அமைத்துக் கொடுத்த குழுவுடன் இணைந்து நடத்தினார் முத்து நெடுமாறன். மேலும், அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.[14] மலேசியாவின் தமிழ்ப்பள்ளிகள் அனைத்திலும் தமிழ் நிறுவும் திட்டத்தில் முரசு அஞ்சலுக்கு வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூர் அரசு கல்வி அமைச்சின் கல்வி மயமாக்க முயற்சியில் முரசு அஞ்சலை அதிகாரப்பூர்வமாக்கியது. இவர் யூனிகோடு அமைப்பில் பத்தாண்டுகளாக உறுப்பினராக இருக்கிறார். சி.எல்.டி.ஆர். பிரிவில் அமைவிடத் தரவுகள் சேர்த்தல், தமிழ் ரூபாய் ௹, மேற்படி (௸), பற்று (௶), வரவு (௷) போன்ற குறியீடுகள், தமிழ் எண்கள் சேர்த்தல் முதலிய பல பரிந்துரைகளை செயல்படுத்தினார். 2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோயம்பத்தூரில் நடந்த மாநாட்டில், தமிழ்நாடு அரசின் தமிழ் யூனிக்கோடு தரப்பாடு அறிவிப்பின் பின்னணியில் செயலாற்றினார். 2024ஆம் தமிழ்நாட்டில் நடந்த கணித்தமிழ்24 மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.[15] இவர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஆலோசகராகவும் செயல்படுகிறார்.[16] எழுத்துரு இயலில் புதிய கோணங்களையும், கருத்துகளையும் முன்வைத்து உரை நிகழ்த்தியுள்ளார்.[17] 2024, 2025 ஆண்டுகளில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூடத்தின் புதிய எழுத்துருக் கலைஞர்களுக்குப் பயிற்சியளிக்கும் பயிலரங்கங்களை நடத்தியுள்ளார்.[18] எழுத்துரு ஆர்வலர்களுடன் இணைந்து 2024ஆம் ஆண்டு டைப்டிஃபன் அமைப்பைத் தொடங்கி எழுத்துலா நடத்தி இத்துறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.[19] இயங்குதளங்கள்2002ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் தமிழ் நூல்களின் பெயர்களைத் தமிழிலேயே தேடுவதற்கான வசதிகளை அறிமுகப்படுத்தியபோது, இணைமதி தமிழ் எழுத்துருவையும், முரசு அஞ்சல், தமிழ்99 உள்ளிடு முறையையும் ஆப்பிள் கணினிகளில் சேர்த்தார். இது, பின்னர் மெக்கின்டாஷ் கணினிகளில் இயல்புநிலையாகச் சேர்க்கப்பட்டன. விண்டோஸ் 11 இயங்குதளத்திலும் முரசு அஞ்சல் உள்ளிடு முறை இயல்புநிலையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு வாணி தெலுங்கு எழுத்துருவை விண்டோஸ் கணினிக்காக உருவாக்கினார். இந்தி, மலையாளம், குஜராத்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட 13 இந்திய மொழிகளுக்கு எழுத்துருவும் உள்ளிடு முறைகளும் உருவாக்கியுள்ளார். பழங்குடி மொழிகளை அழியாமல் காக்க முனையும் ஒரிசா மாநில அரசின் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட முந்தாரி மொழிக்கு கூகுளுக்காக நாக் முந்தாரி என்ற எழுத்துருவையும் உள்ளிடு முறையையும் உருவாக்கினார்.[20] மலேசியாவின் ஜாவி, கம்போடிய கெமிர் மொழி, சிங்களம், லாவோ, மியான்மர், தாய்லாந்திய, வியட்நாமிய மொழிகள் என தெற்காசிய தென்கிழக்காசிய மொழிகள் பலவற்றுக்கும் எழுத்துருக்களையும் உள்ளிடு முறைகளையும் உருவாக்கியுள்ளார். அமேசான் கிண்டில் கருவியில் இயல்புநிலை இடைமுக மொழியாக இருக்கும் தமிழ், மலையாள எழுத்துருக்கள் முத்து நெடுமாறன் உருவாக்கியவை.[3] செல்லினம்செல்லிடப்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தினார். அஞ்சல் மொபைல் என்ற பெயரில் தொடங்கி, 2005ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஒலி வானொலியின் ஆதரவுடன் செல்லினம் என்ற பெயரில் செயலியாக வெளியீடு கண்டது. கவிஞர் வைரமுத்து இதை அறிமுகப்படுத்திவைத்தார். தமிழ்நாட்டில் ஏர்செல், அமீரகத்தில் ஏத்திசாலாக் முதலிய நிறுவனங்கள் செல்லினம் நுட்பத்தைப் பயன்படுத்தின. “மிகவும் புதுமையான கையடக்கக் கருவிகளுக்கான பயன்பாடு” எனும் பிரிவில் மலேசிய அரசின் ஆதரவில் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்ப விருதை 2005ஆம் ஆண்டில் செல்லினம் வென்றது.[18] இந்தத் தொழில்நுட்பத்தை பிற மொழிகளுக்கும் கொண்டு சென்றார். 2007ஆம் ஆண்டு, இந்தி, மலையாளம், சிங்களம், மாலத் தீவில் பேசப்படும் திவேகி மொழிக்கும், மலாய் மொழியின் ஜாவி வரிவடிவத்துக்கும் இதே நுட்பம் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப வழிசெய்யப்பட்டது.[3] 2004ஆம் ஆண்டுதிறன்பேசிகளில் ஆப்பிள் ஐஓஎஸ்3 இயங்குதளத்தில் செல்லினம் வந்தது. 2011ஆம் ஆண்டில் ஆண்டிராய்டு திறன்பேசிகளில் எச்டிசி நிறுவனம் தன் திறன்பேசியில் இந்தி, தமிழ் மொழிகளை இயல்புநிலையில் பயன்படுத்தும்படி செய்தவர் முத்து நெடுமாறன். 2012ஆம் ஆண்டு செல்லினம் அனைத்து ஆண்டிராய்டு திறன்பேசிகளிலும் அறிமுகமானது. ஐஓஎஸ்7 இயங்குதளத்தில் செல்லினம் முரசு அஞ்சல் விசைமுகம் இயல்புநிலையாக வந்துவிட்டது. தட்டெழுதும் போதே சொற்களை முன்கூறும் வசதி, பிழைதிருத்தும் பரிந்துரை, அடுத்து வரும் சொல்லைக் கணிக்கும் பரிந்துரை போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டன. பிற செயலிகள்2012ஆம் ஆண்டு ‘செல்லியல்’ என்ற செய்தி இணையதளத்தை தொடங்கினார்.[21] 2018 ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய ‘கனிமணி’ செயலி, சிறுவர்களுக்குத் தமிழில் படிக்கக் கற்றுக்கொடுக்கிறது.[22] 2021ஆம் ஆண்டு ‘சொல்வன்’ என்கிற செயலி செல்லினத்தோடு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் எழுத்துகளைச் செயலி தானாகவே வாசித்துக்காட்டும்.[23] ‘ஹைபிஸ்கஸ்’ (Hibizcus) செயலி, எழுத்துரு உருவாக்க விரும்புவோர் அது சரியாகச் செயல்படுகிறதா என்பதைச் சோதித்துப் பார்க்க உதவும். கூட்டெழுத்து, இலக்கண விதிகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என சரிபார்த்துத் தரும். தமிழ், இந்தி, மலையாளம், உள்ளிட்ட இந்திய மொழிகளுடன் தெற்காசிய தென்கிழக்காசிய மொழிகளை சரிபார்க்கவும் இச்செயலி உதவுகிறது.[24] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia