லினோலெயிக் அமிலம் [Linoleic acid (LA)] ஒரு நிறைவுறா ஒமேகா-6 (n-6) கொழுப்பு அமிலமாகும். அறைவெப்பநிலையில் இது வண்ணமற்றதிரவமாக உள்ளது. இதனுடைய கொழுமிய எண்: 18:2(n-6). லினோலெயிக் அமிலம் பதினெட்டு கார்பன்அணுக்களையும், இரண்டு ஒருபக்க இரட்டைப் பிணைப்புகளையும் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும்; மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள ஆறாவது கார்பன்அணுவில் முதலாவது இரட்டைப் பிணைப்பு உள்ளது[4].
பல்நிறைவுறா கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம், அராகிடோனிக் அமிலம் (AA) உயிரித்தொகுப்பிலும், அதன் மூலமாக சில புரோஸ்டாகிளாண்டின்களின் (PG) உயிரித்தொகுப்பிலும் உபயோகப்படுகிறது. லினோலெயிக் அமிலம் செல்சவ்வுகளின் கொழுமியத்தில் காணப்படுகிகிறது. பல தாவர எண்ணெய்களில் (கசகசா, குசம்பப்பூ எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோள எண்ணெய்) இந்த அமிலம் ஏராளமாக (எடையில் பாதிக்கும் மேலாக) உள்ளது[6].
உடல் நலத்திற்கு இன்றியமையாக் கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம் தேவைப்படுகின்றது. ஆய்வுகளில், லினோலெயிக் அமிலக் குறைபாடு கொண்ட உணவினை உட்கொண்ட எலிகள் மிதமான தோல் தடித்தல், முடி உதிர்வு[7] மற்றும் குறைந்த காயம் ஆறும் தன்மையினைக் கொண்டிருந்தன[8]. ஆனால், சாதாரணமாக உட்கொள்ளும் உணவின் மூலமாகவே நமக்குத் தேவையான லினோலெயிக் அமிலம் கிடைத்து விடுவதால் இதன் குறைபாடு என்பது மிக அரிதாகும். எனவே, மருத்துவத்தை நாடும் நிலைமைக் கிடையாது.
ஒலெயிக் அமிலத்துடன் லினோலெயிக் அமிலத்தையும் கரப்பான் பூச்சிகள் இறக்கும்போது, பிற கரப்பான்கள் அந்தப் பகுதிக்கு வருவதைத் தடுக்க, வெளிவிடுகின்றன. இதைப்போலவே எறும்புகளும், தேனீக்களும் இறக்கும்போது ஒலெயிக் அமிலத்தை வெளிவிடுகின்றன[9].
↑David J. Anneken, Sabine Both, Ralf Christoph, Georg Fieg, Udo Steinberner, Alfred Westfechtel "Fatty Acids" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a10_245.pub2
↑U.S. Department of Agriculture, Agricultural Research Service. 2007. USDA National Nutrient Database for Standard Reference, Release 20. Nutrient Data Laboratory Home Page