வனிந்து அசரங்க (Wanindu Hasaranga, பிறப்பு: 29 சூலை 1997), இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார் இவர் இலங்கை அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] இவரது அண்ணன் சதுரங்கா டி சில்வாவும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[2]
ஆரம்ப ஆண்டுகளில்
வனிந்து அசரங்க டி சில்வா காலியின் ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி பயின்றார். அந்தக் கல்லூரியில் பயிலும் பொழுது தனது துடுப்பாட்ட ஆடங்களைத் துவங்கினார் . 2016 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் இவர் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்டார்.[3]
உள்ளூர் போட்டிகள்
2015 ஆம் ஆண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். நவம்பர் 30 இல் ஏ ஐ ஏ பிரிமியர் குறைந்தபட்ச ஓவர் போட்டி தொடரில் இவர் முதல் பட்டியல் அ போட்டிகளில் விளையாடினார்.[4]
2015 டிசம்பரில் அவர் 2016 ஆம் ஆண்டில் நடைபெறக் கூடிய 19 வாதிற்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இலங்கையின் அணியில் இடம் பெற்றார்.[5] பிப்ரவரி 26, 2016 அன்று நடைபெற்ற 2015–16 பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை துடுப்பாட்ட சங்கம் சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[6]
நவம்பர் 2017 இல், இலங்கை துடுப்பாட்ட வாரியம் ஆண்டு விருதுகளில் 2016 -17 ஆம் ஆண்டுகளில் இவர் சிறப்பாக செயல்பட்டதற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[7] 2017–18 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 11 நவம்பர் 2017 அன்று சில்ஹெட் சிக்ஸர் அணிக்காக இவர் இருபது-20 போட்டியில் அறிமுகமானார்.[8]
மார்ச் 2018 இல், இவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண போட்டித் தொடரில் கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[9][10] அடுத்த மாதம், அரிவிக்கப்பட்ட 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியிலும் அவர் இடம் பெற்றார் .[11] ஆகஸ்ட் 2018 இல், 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் தம்புல்லாவின் அணியில் இடம் பெற்றார்.[12]
2018 19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரிமியர் லீக் துடுப்பாட்ட தொடரில் இவர் கொழும்பு அணி சார்பாக கலந்து கொண்டார். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் 765 ஓட்டங்க எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார்.[13] மார்ச் 2019 இல், 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் இவர் காலி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார்.[14]
சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்காக இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் அவர் இடம் பெற்றார்.[17] இவர் ஜூலை 2, 2017 அன்று ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[18] இந்த போட்டியில், மூன்று இலக்குகளை தொடர்ச்சியாக வீழ்த்தினார், இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இளம் வயது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.[19]