1 கொரிந்தியர் (நூல்)1 கொரிந்தியர் அல்லது கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (First Letter [Epistle] to the Corinthians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஏழாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் A' Epistole pros Korinthios (Α' Επιστολή προς Κορινθίους ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I ad Corinthios எனவும் உள்ளது [1]. இம்மடலைத் தூய பவுல் [2] கி.பி. 54-55ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து [3]. திருத்தூதர் பவுலின் பெரிய திருமுகங்களில் ஒன்றான 1 கொரிந்தியர் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமுடைய அறிவுரைகளை வழங்குகிறது. அன்பு பற்றிய சிறந்த ஒரு கவிதை இம்மடலில் உள்ளது (1 கொரி 12:31ஆ-13:13).
1 கொரிந்தியர் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்பவுல் காலத்தில் கொரிந்து ஒரு பெரிய வணிக நகரமாக விளங்கியது; உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் திகழ்ந்தது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தன. வழிபாடு சார்ந்த வாணிகமும் தழைத்தோங்கியது. கொரிந்தியரைப் போல இருத்தல் என்னும் கூற்று ஒழுக்கக் கேடாய் வாழ்தலைக் குறித்தது. திருத்தூதர் பவுல் காலத்தில் கொரிந்து நகரில் 700,000 மக்கள் வாழ்ந்தனர்; அவர்களில் மூன்றில் இரு பங்கினர் அடிமை மக்கள். பவுல் தம் இரண்டாம் தூதுரைப் பயணத்தின்போது இங்குத் திருச்சபையை ஏற்படுத்தினார் (காண்க: 1 கொரி 3:6,10; 4:5; திப 18:1-7). அக்கிலா, பிரிஸ்கில்லா தம்பதியருடன் நட்பு கொண்டார். யூதர்களுடன் தொழுகைக் கூடத்தில் விவாதித்தார். பின்னர் பவுல் எபேசு நகரத்தில் நற்செய்திப்பணி ஆற்றியபோது குலோயி வீட்டினர் மூலம் கொரிந்துத் திருச்சபையில் இருந்த பிளவுகள் பற்றிக் கேள்விப்பட்டார் (1:11). மற்றும் கொரிந்திய திருச்சபை பவுலுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொரிந்தில் காணப்பட்ட சில சிக்கல்களுக்கு விடை கேட்டு இருந்தது (7:1). இக்கடிதம் வழியாகவும், கடிதத்தைக் கொண்டுவந்த மூவர் வாய்மொழி வழியாகவும் (16:17) அறிந்துகொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறையில் பவுல் இத்திருமுகத்தை வரைந்துள்ளார். 1 கொரிந்தியர் திருமுகத்தின் உள்ளடக்கம்இத்திருமுகத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி: பவுல், அப்பொல்லோ, பேதுரு ஆகியோர் மீதிருந்த மிகப்படுத்தப்பட்ட பற்று, கொரிந்தில் பிளவுகளுக்கும் தற்பெருமை பாராட்டுதலுக்கும் வழியமைத்தது (அதிகாரம் 1). இத்தகைய பிளவுகள் கிறிஸ்துவையே பிளவுபட்டவராகக் காட்டுகின்றன என்கிறார் பவுல். கொரிந்தில் காணப்படும் பிளவுகள் அவர்களின் ஆன்மிக முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றன என்று கூறுமவர், கொரிந்தியக் கிறித்தவர்கள் மனிதத் தலைவர்களிடமல்ல, மாறாகக் கிறிஸ்துவிடம் கொள்ளும் உறவைப் பற்றியே பெருமை பாராட்ட வேண்டும் என்கிறார் (அதிகாரங்கள் 2-4). இரண்டாம் பகுதி: ஒருவன் தன் தந்தையின் மனைவியையே வைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு ஒழுக்கக்கேடு மலிந்திருந்த நிலையில் கிறிஸ்தவர்கள் அதைக் கண்டிக்கவில்லை. அத்தகைய செயலைச் செய்தவனைச் சபையிலிருந்து நீக்குமாறு கட்டளையிடுகிறார் பவுல் (அதிகாரம் 5). மேலும் கிறிஸ்தவர்கள் பொது நீதி மன்றங்களுக்குச் செல்லாமல் தங்களுக்குள்ளே பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் (அதிகாரம் 6). திருமணம், கன்னிமை, மணமுறிவு, மறுமணம் ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறார் (அதிகாரம் 7). சிலைகளுக்குப் படைத்த உணவை உண்ணலாமா (அதிகாரங்கள் 8-11) என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் நேரத்தில், கிறிஸ்தவ உரிமையும் அன்பின் விதியும் முரண்பட்டு நிற்பதாகத் தோன்றும்போது, மனவலிமையற்ற சகோதரரை முன்னிட்டு உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிறார் பவுல். தொடர்ந்து, ஆண்டவரின் திருவிருந்தில் முறையாகப் பங்கெடுத்தல், ஆவிக்குரிய கொடைகளை முறையாகப் பயன்படுத்தல் பற்றிப் பேசுகிறார் (அதிகாரங்கள் 11-14). மூன்றாம் பகுதி: உயிர் பெற்றெழுதலைப் பற்றிய கொரிந்தியரின் தவறான கண்ணோட்டத்தைப் பவுல் களையப் பார்க்கிறார் (அதிகாரம் 15). இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையை விளக்கி, உயிர்பெற்றெழுந்த உடல் எவ்வாறிருக்கும் என எடுத்துரைக்கிறார். இறுதியாக, எருசலேம் கிறிஸ்தவர்களுக்காகத் தாம் திரட்டப்போகும் நன்கொடை பற்றிக் கூறி (16:1-4) பல்வேறு அறிவுரைகள் மற்றும் வாழ்த்துகளுடன் திருமுகத்தை முடிக்கிறார் பவுல் (16:5-24). 1 கொரி 5:6 இல் ஏற்கனவே ஒரு மடல் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. அது நமக்குக் கிடைக்காத நிலையில் இம்மடலையே கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் என்கிறோம். 1 கொரிந்தியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி1 கொரிந்தியர் 12:31ஆ-13:13
1 கொரிந்தியர் நூலின் உட்பிரிவுகள்
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia